Showing posts with label செல்வாவின் மொக்கைகள். Show all posts
Showing posts with label செல்வாவின் மொக்கைகள். Show all posts

Thursday, December 31, 2015

கந்தரகோலம் : எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்.

கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையிலிருக்கும் தமிழ் இலக்கியத்தினை உய்விக்க வந்த ரட்சகனாகவே ஆளுமை நாகராஜசோழனைப் பார்க்கிறது தமிழ் இலக்கியச் சமூகம். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், செழிப்பிலும் கவனம் செலுத்தும் எல்லோருக்குமே ஆளுமை நாசோ ரட்சகன்தான்.

ஆளுமையின் கந்தரகோலம் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அது வாசகவெளியை எட்டிப் பிடிக்கவில்லை. எழுத்துச் சுதந்திரம் குறித்தோ, பேச்சுச் சுதந்திரம் குறித்தோ பேச இது நயமான சூழல் இல்லையென்றாலும் தமிழ் இலக்கியத்தினை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு படைப்பினைக் குறித்து அறிந்து கொள்வதிலும் கூட ஆர்வம் இல்லாத அளவிற்கா ஒரு சமூகம் அறிவிழந்துகிடக்கும்? நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. இப்படியான ஒரு சமூகச் சூழலில் சிக்கிக் கொண்ட நாசோவைப் போன்ற எழுத்தாளர்களின் கதிதான் என்ன? கந்தரகோலம் எப்பொழுதுதான் வெளியாகும்? கந்தரகோலத்தினை வெளியிட இந்தச் சமூகம் எள்ளளவேனும் துணையாக இருக்குமா? 

கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று கந்தரகோல வெறியர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆளுமையின் கந்தரகோலம் மேலும் ஓராண்டினைக் கடந்து மறுபடியும் ஏமாற்றத்தினை மட்டுமே பரிசளித்திருக்கிறது. இதைக் குறித்து யாரைக் குறை சொல்வது? கந்தரகோலத்தினை வெளியிடக் கடும் எதிர்ப்புக்களைத் தான் சந்தித்துவருவதாக முன்பே அறிவித்திருந்தார் ஆளுமை நாசோ. ஒரு எழுத்தாளன் வேறு என்னதான் செய்யமுடியும்?


கந்தரகோல பக்தர்கள் குழுமத்தில் இது குறித்து நான்கைந்து வருடங்களாகப் பேசிவருகிறோம். கந்தரகோலத்தினை மக்கள் திரளுக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன என்பது குறித்து அதிகாலை பத்து மணிக்கு அலுவலகம் வந்ததிலிருந்து பேச ஆரம்பித்துவிடுவோம். கிட்டத்தட்ட நள்ளிரவு ஏழு மணி வரையிலும் கூட கடுமையாக விவாதிப்போம். அதன்பின்னர் அலுவலக உதவியாளர் வந்து ஆஃபீசைப் பூட்டப்போவதாக அறிவித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து தொடர்ந்து விவாதிப்போம். சில நாட்களில் கடும் நள்ளிரவு பத்து மணி வரையிலும் கூட விவாதித்திருக்கிறோம். பின்னர் தூக்கம் வந்துவிடும்.

இப்படியாக கந்தரகோலத்தின் தடையரணை உடைத்தெறிய நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் முயன்று தோற்றுவருகிறோம். கந்தரகோலம் பக்தர்கள் குழுமம் என்றில்லை, பொதுவாக தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லோருமே கந்தரகோலத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை. 

எங்களின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தீரும் நாள் எப்பொழுது என்று ஆளுமையிடம் சமீபமாகக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.


அன்பின் செல்வா,

கந்தரகோலத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுவரும் மறைமுக எதிர்ப்புக்கள் என்னவென்று சமீபத்தில் என் நண்பரும், சக இலக்கியவாதியுமான திருவள்ளுவர் கேட்டிருந்தார். ஒருவேளை கந்தரகோலம் புத்தகத்தினை இன்னமும் தாங்கள் எழுதாததுதான் அந்த மறைமுகத் தடையா என்றும் வினவியிருந்தார்.

நான் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிப்பவன். இந்த வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவனம் கொள்ளாதவன். என் வாழ்க்கையில் எப்பொழுது திருக்குறள் நுழைந்ததோ அப்பொழுதிலிருந்தே எனக்குத் திருக்குறள்தான் உயிர்மூச்சு. 

திருக்குறள் சொல்லும் பாதையில் பயணிப்பது இந்த நவீன காலத்திற்கு உகந்ததா என்றால் சற்றே கடினம்தான். நான் எப்படி அச்சுப் பிசகாமல் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிக்கிறேன்.? எப்படி என்னால் இது சாத்தியமாகிறது? விளக்குகிறேன்.

நான்கைந்து வருடங்களுக்கும் முன்பாக கொஞ்சம் பெரிய சைசில் எனக்குத் திருக்குறள் புத்தகத்தினை நண்பன் ஒருவன் பரிசளித்திருந்தான். அதில் ஏதோ ஒரு நூலகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே திடுக்கிட்டுப் போய் “திருடின புக்கா இருந்தா எனக்கு வேண்டாம்” என்று திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்கு அவன் “ திருடினது இல்ல, டைம் முடிஞ்சு போச்சு, கொண்டுபோய் குடுக்கல” என்றான். திருடியதாக இல்லாவிட்டால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று வாங்கிவைத்துக் கொண்டேன்.

அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் ஒருவனின் வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாகிறது என்று எழுதப்பட்டிருந்தது. அன்றே நானும் திருக்குறள் காட்டும் பாதையில் பயணிப்பதென்று முடிவெடுத்தேன்.

தினமும் எங்கேனும் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டிய சூழல் வருமானால் உடனடியாக திருக்குறள் புத்தகத்தினை எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றுவேன். அது எந்தத் திசையைக் காட்டுகிறதோ அந்தத் திசையில் சுவற்றில் ஓட்டை போடுவேன். பின்னர் அந்த ஓட்டையின் வழியாக வெளியேறுவேன். இதற்கென்றே திருக்குறள் புத்தகத்தின் மேற்புறமாக அம்புக் குறி ஒன்றினை வரைந்து வைத்திருக்கிறேன். இப்படியாக தினமுமே அது ஒவ்வொரு திசையைக் காட்டும். நானும் தினமும் இப்படி எல்லாத் திசைகளிலுமே சுவற்றினை ஓட்டை போட்டு அங்கெல்லாம் கதவுகளை வைத்திருக்கிறேன். இதற்காகவே ஒரு கொத்தனாரையும் மாதச் சம்பளத்திற்கு வைத்திருக்கிறேன். திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பது அலாதியானது. ஒவ்வொரு நாளுமே நான் புறப்படுகிற நேரத்திற்குச் சற்று முன்பாகவே புத்தகத்தைச் சுழற்றுவேன். அது காட்டும் திசையில் கதவிருந்தால் பிரச்சினையில்லை. இல்லாவிட்டால் கொத்தனாரிடம் சொல்லி சுவற்றை உடைத்து வெளியேறுவேன்.

இப்படியாக திருக்குறள் காட்டும் திசையில் பயணித்து வருகிறேன். இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகத் தெரிவித்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனைக்கும் அவர் வாடகை வீட்டில் இருக்கிறாராம். வாடகை வீட்டில் இதையெல்லாம் எப்படி ஒத்துக்கொள்கிறாகள் என்று ஆர்வத்தில் கேட்டபோது அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று எப்படியென்று விளக்கினார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அதிலும் ஒரு அம்புக் குறியும் இருந்தது. அவரும் என்னைப் போலவே புத்தகத்தினைச் சுழற்றிவிட்டார். ஆனால், அது வாசலைத் தவிர்த்து வேறொரு திசையைக் காட்டியதும் ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அந்த அம்புக் குறி வாசலை நோக்கிக் காட்டுமாறு பிடித்துக் கொண்டு, இப்பொழுது கண்ணாடியில் அந்த அம்புக் குறியின் திசையை என்னிடம் காட்டினார். அது வாசல் கதவு இருக்கும் இடத்திற்கு நேராக இருந்தது. இப்படித்தான் தினமும் அவர் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகச் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை புத்திசாலித்தனமான காரியம் பாருங்கள். எனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று யோசித்துப் பார்த்தேன்.

அதன்பின்னர் நாங்கள் மேலும் ஒரு நண்பரைச் சந்தித்தோம். அவரிடம் நாங்கள் எப்படித் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறோம் என்று சொன்னதும் திடீரென தனது தலையை சுவற்றில் முட்ட ஆரம்பித்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னவென்று விசாரித்ததில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதென்றால் அதுவல்ல என்றும், தான் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறேன் என்றும் விளக்கமளித்தார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அவரும் அதைச் சுழற்றிவிட்டார். ஆனால், அதில் எந்தவொரு அம்புக் குறியும் இல்லை. எப்படி இவர் இதைவைத்து திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கப் போகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. புத்தகம் சுழன்று நின்றதும் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு அம்புக்குறியை எடுத்து வாசல் பக்கத்திற்கு நேராக அதன் முனைப்பகுதி இருக்குமாறு புத்தகத்தில் ஒட்டினார். அவ்வளவுதான். இப்பொழுது அவர் சுவரினை ஓட்டை போடவோ அல்லது கண்ணாடியை எடுத்து திருப்பிக் கொண்டிருக்கவோ இல்லை. இது அதைவிடவும் எளிதாக இருந்தது.

இப்படித்தான் ஊருக்குள் நிறைய அறிவாளிகள் திரிகிறார்கள். நம் பார்வை அவர்கள் மேலெல்லாம் விழுவதில்லை. அப்படியான அறிவாளிகள் அதிகரிக்கும் நாளுக்காகத்தான் கந்தரகோலம் புத்தகத்தினை வெளியிடாமல் காத்திருக்கிறேன். அப்படியான அறிவாளிகளின் எண்ணிக்கை கோடியைத் தொடுகின்றபோது கந்தரகோலம் வெளியாகும்.

சரி, மேற்கூறிய கதையினை வெறுமனே படித்துச் சிரித்துவிட்டுச் செல்லும் வாசகர்களுக்கு மத்தியில், நாம் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் மூன்று மனிதர்களைப் போலப் பின்பற்றுகிறோம் என்று புரிந்துகொள்ளும் வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் பிறக்காமல் இருக்கலாம். அவர்களுக்கான ஆக்கம்தான் கந்தரகோலம். இப்பொழுது வெளியிட்டால் கழுதைகளிடம் கவிதைப் புத்தகத்தைத் தருவதைப் போன்ற கதைதான். அவை அவற்றைத் தின்றுவிடும். ஆனால், சாணம்தான் போடும். அதைப் போல கந்தரகோலம் வீணாகிவிடக் கூடாதென்ற காரணத்தினால்தான் ஒவ்வொரு ஆண்டும் இது தள்ளிப் போடப்படுகிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
தமிழிலக்கியப் பேராளுமை நாசோ.


Wednesday, June 25, 2014

கந்தரகோலம் - ஆங்கில மொழிபெயர்ப்பும் பிரச்சினைகளும்!

தமிழ் இலக்கியத்தின் நிகழ்காலச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் மற்றும் பிழைப்புவாதப் போராட்டங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

உலகின் மிகத் தொன்மையான மொழியாக இருந்தபோதிலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெரிதாக ஒன்றும் வளர்ந்திருக்கவில்லை. திருவள்ளுவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருந்தார், அதற்குப் பின் கம்பர் ஏதோ சில பல கவிதைகளை ராமாயணம் என்ற பெயரில் சொல்லி இருந்தார். அதன்பிறகு புதுமைப்பித்தன் வாசிக்கும்படியாக ஏதோ இரண்டு சிறுகதைகள் எழுதியிருந்தார்.  அதன் பின்னர் தமிழ் இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருப்பதாக அறிந்தவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

“டீச்சர், இவன் என்னைக் கிள்ளிட்டான், மிஸ், என் ரப்பர் வெச்ச பென்சிலைத் திருடிட்டான்” என்ற அளவிலான ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையைப் போலவே காட்சியளிக்கிறது தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல். இச்சூழலை அடியோடு மாற்றி, தமிழ் இலக்கியவெளியினை ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாகக் கல்லூரிக்கு மாற்றும் திறத்துடன் தோழர் நாகராஜசோழனால் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்புத்தான் கந்தரகோலம்.

கடந்த ஆண்டிலேயே முழுவதுமாக எழுதிமுடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் தமிழில் இந்நூலை வெளியிடமுடியவில்லை என்பது என் போன்ற வாசகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தினை ஏற்படுத்திவருகிறது. ஒன்றுக்கும் உதவாத புத்தகங்களை எல்லாம் வாசகர்கள் சொந்தச் செலவில் வாங்கி வாசித்து, இதுதான் இலக்கியம் என்ற ஒரு தவறான புரிதலிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் சூழல் எப்பொழுது மாறுமோ என்ற ஆதங்கத்தில் இருந்தபோதுதான் கந்தரகோலம் புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார் நா.சோழன். இலக்கியம் என்பதன் முழு அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
ர்
தமிழில் இந்த நூல் வெளியாகும் நாள் தமிழ் இலக்கியம் குறித்த பலவிதமான கட்டுடுடைப்புக்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால், தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் காரணங்களால் கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் மறைமுக எதிர்ப்புக்களையும், மிரட்டல்களையும் நாகராஜசோழன் சந்தித்துவருகிறார். பின்னே கந்தரகோலம் வெளியாகிவிட்டால் இலக்கியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை என்னாவது?

வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமுள்ள தமிழ் இலக்கியவெளியில் புத்தகங்களை விற்பதற்கும், விற்றபிறகு அப்புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கும் தனித்தனியாக யோசிக்கவேண்டியிருப்பது ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளக்கூடாத கெட்ட அனுபவங்களில் ஒன்று. நோயாளிகளை விடவும் மருத்துவர்கள் அதிகமாக உள்ள சூழலில் அந்த நோயாளியின் நிலை வருந்தத்தக்கதுதான். பெரும்பாலான இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் இதனை ஒரு சவாலாகவே கருதி தங்களது எழுத்தில் சிற்சில கவர்ச்சி வித்தைகளையும் கைக்கொண்டுவருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து நாகராஜசோழனின் பார்வை முற்றிலும் மாறானது. அவரது வாதத்தின் படி, ஒரு குரங்கினைச் சுற்றி நூறு மனிதர்கள் இருந்தாலும், ஒரு மனிதனைச் சுற்றி நூறு குரங்குகள் இருந்தாலும் வேடிக்கை காட்டப்போவதென்னவோ குரங்குதான். இதுதான் நாகராஜசோழன் மற்ற எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் நிலை. இதனாலேயே அவரது படைப்புலகம் மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

கந்தரகோலம் கவிதைத் தொகுப்பின் அருமைகளால் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்த நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சமீபமாகக் கேள்விப்பட்டேன். இலக்கிய உலகின் அகப்படிம உணர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய படைப்பான கந்தரகோலம் முதன்முதலில் தமிழில் வெளியாவதுதான் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் சிறு அளவிலான நன்றியாகவாவது இருக்குமென்றாலும், ஆங்கிலத்திலாவது வெளியாகிறதே என்று நினைத்து மகிழ்ந்துவந்தேன்.

ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பும் வாசிப்புவெளிக்கு வரமாலேயே முடக்கப்பட்டிப்பருப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து வாசிப்பின் மேலிருந்த அனைத்து கவர்ச்சிகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன. நல்ல நூல்களெல்லாம் எங்கோ சல்லடைகளால் வடிக்கப்பட்டு, மோசமான நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டிய கட்டாயம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இருப்பது வருந்தத்தக்கது.

கந்தரகோலம் ஆங்கிலமொழிபெயர்ப்பும் முடக்கப்பட்டிருப்பது குறித்து என் ஒரே ஆதர்ஷ எழுத்தாளரான நாகராஜசோழன் அவர்களுக்கு கடந்த 2114 ஆம் ஆண்டு ஒரு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கான பதில் நேற்று வந்திருந்தது. அவரது பதில் கீழே...


அன்பின் செல்வா,



வணக்கம். இன்று இதே போன்ற கடிதத்தினைப் பதினைந்தாவது முறையாக வாசிக்கிறேன். இதுவரையிலும் வாசித்த 15 கடிதங்களிலும் ஒரு எழுத்துக்கூட மாற்றமில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பது கந்தரகோலம் குறித்து வாசகர்களிடையே எழுந்திருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. பாருங்கள், பதினைந்து கடிதங்களிலும் பெயரும் கூட ஒரே மாதிரியாக இருக்கிறது. இதுகுறித்து என் வாசகர் வட்ட நண்பரிடம் கேட்டிருந்தேன்.


அதற்கு அந்த அன்பர்,  நீங்கதானே நாகா ஒரு நாளைக்கு நூறு கடிதமாவது இருக்கனும்னு சொன்னீங்க, இன்னிக்கு ஒரே கடிதம்தான் வந்திருந்துச்சு, அதான் அத நூறு ஜெராக்ஸ் எடுத்துட்டேன் என்றார். ஏன் இத்தன நாளா இப்படி எதுவும் வரதில்லையே என்றேன். இத்தன நாளா ஒரு கடிதம் கூட வராதுங்க, நானே உக்கார்ந்து எல்லாத்தையும் எழுதுவேன். ஆனா இன்னிக்கு இந்தக் கடிதம் வந்துச்சுங்கிறதால அத ஜெராக்ஸ் எடுத்துக் குடுத்துட்டேன் என்றார்.

தமிழ் இலக்கியச் சூழலில் அறிவுள்ள ஒரு வாசகர் வட்ட நண்பர்கூட எழுத்தாளர்களுக்கு வாய்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு எழுத்தாளன் எப்படி சிறந்த படைப்புக்களைத் தரமுடியும் என்ற கேள்வி அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.

சரி கேள்விக்கு வருகிறேன். கேள்விக்கு நீங்களே வந்திருப்பதால் நான் நேரடியாகப் பதிலுக்கே வந்துவிடுகிறேன்.


கந்தரகோலம் கட்டுரைத்தொகுப்பினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிரும்புவதாக சக இலக்கியவாதியும், ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான கூகுள் ட்ரேன்ஸ்லேட்டர் என்னிடம் கோரியிருந்தார். தமிழில் வெளியாவதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணமே இருப்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த அவரது ஆலோசனை எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.



சில நாட்களுக்குப் பிறகு கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகிவிட்டதாகக் கூறி, அதன் மின்புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார். ஏதேனும் தவறுகள், மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பின் ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்த்துத் திருத்திக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்.



எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதாலும், ஆங்கிலத்தையும் நான் தமிழிலேயே பேசுவேன் என்பதாலும், மற்றொரு நண்பரிடம் கொடுத்து அதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருந்தேன். அவருக்குக் கந்தரகோலம் தமிழில் எழுத்தப்பட்ட விவரங்கள் தெரியாது.



ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்.



அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை. அதன் முதல் அத்தியாயமே என்னைப் புரட்டிபோட்டது. வழக்கமாகப் புத்தகங்களை நாம்தான் புரட்டுவோம். ஆனால், இது என்னைப் புரட்டியது. இப்படியும் மனிதர்கள் பூமியில் வாழ்கிறார்களா என்ற கோபம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. எத்தனையோ சிரமப்பட்டு, கண்களை மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துமுடித்தேன். அக்கிரமம்; அநியாயம். அதன் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு வரியும் தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் புத்தகத்தை முழுமையாகக் காப்பி அடித்ததிருந்ததைப் போலத் தோன்றியது.



ஒவ்வொரு இடமும், அதன் பெயரையும் கூடக் கந்தரகோலம் புத்தகத்திலிருந்து காப்பியடித்திருந்தார்கள். ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு சொல்லும் கூட தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் கதையோடு ஒத்துப்போனது. இந்தப் பிழைப்பிற்கேன் ஆங்கிலமொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்? ஆங்கிலேயர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும். எதற்காகக் கந்தரகோலம் புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகத் தெரிவிக்க வேண்டும், பின் எதற்காக தமிழில் நான் எழுதிய புத்தகத்தினைப் பார்த்து அட்டக்காப்பியடித்து ஆங்கில மொழிபெயர்ப்பென்று சொல்லித்திரிய வேண்டும்? இலக்கிய உலகம் முன்போல இல்லை.



பின்னர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிடவேண்டாமென்று கூகுள் ட்ரான்ஸ்லேட்டரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்குக் காப்பியடிப்பதென்றாலே பிடிக்காது.



சரி; நான் சென்று மீதமுள்ள கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறேன். எல்லாமே ஒரே கேள்விதானே, அதற்கேன் விதவிதமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். 



சில நாட்களுக்கு முன்பாக கந்தரகோலம் வாசகர்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த இருபது பேர்களிடம் ”உங்களின் பெயர் என்ன?” என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலினைச் சொன்னார்கள். இதிலிருந்து ஒரே கேள்விக்கு எண்ணற்ற பதில்கள் இருக்கமுடியும் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். இதிலும் பாருங்கள், இரண்டு பயல்கள் தங்களின் பெயரினைச் செல்வக்குமார் என்று கூறினார்கள். பெயரைக் கூடவா காப்பியடிக்கிறார்கள்? உடனே இருவரையும் என் வாசகர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற முத்திரை குத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 


மேலும், கந்தரகோலம் புத்தகம் வெளியாவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விரைவில் சரியாக்கப்பட்டு, சடுதியில் இந்த வரலாற்று நாவல் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்பும் நன்றியும்

மிகப் பிரபல ஆளுமை நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ.

Tuesday, March 4, 2014

கந்தரகோலம் - முதல் எதிர்மறை விமர்சனம்!


தோழர் நாகராஜசோழன் எழுதியிருக்கும் முதல் புத்தகமான கந்தரகோலம் - சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த புத்தகக் கண்காட்சிக்கே வெளியிட நினைத்து, பதிப்பகத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

அவர் எழுதியிருக்கும் முதல் புத்தகமென்பதால் எங்களின் டெரர்கும்மி குழும உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு விமர்சனம் மற்றும் பிழைதிருத்தும் பொருட்டு இப்புத்தகத்தின் மின்பதிப்பினை அனுப்பியிருந்தார். புத்தக வெளியீட்டிற்குப் பிறகு வரும் விமர்சனங்களை நம்புவதற்கில்லை என்றும், தன் மீது கொண்ட அன்பினாலும் காழ்ப்புணர்ச்சியாலும் முறையே திட்டியும் பாராட்டியும் விமர்சனங்கள் வரலாம் என்பதால் அவற்றை நம்பமுடியாதென்பதவர் வாதம். இதனால் தன் நலனில் அக்கறை கொண்டவர்களின் விமர்சனத்தை - விமர்சனத்தை என்று கூட அவர் கூறவில்லை. கருத்தை அல்லது ஆலோசனையை என்று வைத்துக் கொள்ளலாம் - வேண்டி எங்களுக்கு அனுப்பியிருந்தார்.

பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் படு சோம்பேறியான நான் வழக்கம் போலவே அந்த 800 பக்க நாவலைப் படித்து முடிப்பதற்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டேன். நீங்கள் அறிவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் கந்தரகோலம் புத்தகம் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்பென்று மேலே சொன்னதை நினைத்துக் குழம்பிப்போயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் குழம்பியிருக்க வாய்ப்பில்லை.

இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி கடந்த (24.03.2014) வியாழக்கிழமை அன்று அழைத்திருந்தார். வழக்கமான உற்சாகத்திற்கு மாறாக இந்தமுறை கொஞ்சம் கோபத்தில் இருந்தார். விசாரித்ததில் தான் கந்தரகோலம் புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும், அப்புத்தகமே தனது கோபத்திற்குக் காரணமென்றும், அப்புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் ஒன்றையும் என் முன்னால் வைத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது முன்னால் வைக்கச் சாத்தியமில்லை என்றாலும் அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசினோம் என்பதால் இது சாத்தியப்பட்டது.

அவர் கூறிய எதிர்மறை விமர்சனம் எனக்கும் சரியென்றேபட்டது. இருந்தாலும் இவ்விமர்சனத்தை முகநூலில் பகிரலாம் என்று நினைத்தபோது ஏதோ இடறியது. முதல் விமர்சனமே எதிர்மறை விமர்சனமாக அமைந்துவிட்டதேயென்று தோழர் நா.சோழன் வருந்தினால் என்ன செய்வதென்று நினைத்துப் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் எதிர்மறை விமர்சனத்தை அப்படியே நா.சோழனுக்கு அனுப்பி, அதனை எனது முகநூலில் பகிர்ந்து கொள்ளட்டுமா என்று அனுமதி கோரியிருந்தேன். எனது கடிதத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் பதில் கீழே...




அன்பின் செல்வா,

தங்களின் கடிதம் கிடைத்தது. தோழர் பன்னிக்குட்டி ராம்சாமி என் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் எதிர்மறை விமர்சனத்தை உங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளீர்கள். அதை அனுமதிப்பதற்கு முன்னர் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் இலக்கியச் சூழலிலாகட்டும், அல்லது மேற்கத்திய, ஆப்பிரிக்க, ரஷ்ய என்று எந்த இலக்கியப் படைப்பிற்கும் வரும் விமர்சனங்களை முதலில் நேர்மறை, எதிர்மறை என்று விமர்சனங்களையே விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள். அது ஒரு விமர்சனம் அவ்வளவே. ஏன் அதனை நேர்மறை விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என்று நீங்களே விமர்சித்துக் கொள்கிறீர்கள்? 

மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது போலத் தெரிந்தது. உண்மையா? எனக்கும் ஆங்கிலத்திற்கும் ஒத்துவருவதே இல்லை. இருப்பினும் எனது கோடானகோடி ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது நேரடி ஆங்கிலத்தில் கதை எழுதப்போகிறீர்கள் என்று நச்சரிக்கிறார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கையில் வெறும் 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ள விரும்புவது வேடிக்கையாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.

ஆக எழுத்துக்களின் எண்ணிக்கைதான் உனது பிரச்னையா என்று கேட்டான் நண்பனொருவன். வேறென்ன பிரச்னை இருந்துவிடமுடியும். தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்குமட்டுமே கொண்ட ஒரு மொழியில் எழுதி என்னை ஏன் நான் குறுக்கிக் கொள்ள வேண்டும்? இதன்மூலம் என்னை குறுகிய சிந்தனைக்காரன் என்று கூறமாட்டார்களா? இதற்கும் ஒரு வழி சொன்னான் அந்த நண்பன். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் அல்ல 52 எழுத்துக்கள் இருப்பதாகக் கூறினான். அதாவது சின்ன எழுத்துக்கள் 26 மற்றும் பெரிய எழுத்துக்கள் 26. இப்பவும் 52 தானே ஆகிறது. இதுவும் பற்றாதென்றேன். குறைந்தபட்சம் எத்தனை எழுத்துக்கள்தான் தேவைப்படும் என்று கேட்டான். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் பாதியேனும் இருந்தால் பரவாயில்லை, குறைந்தபட்சம் 100 எழுத்துக்களாவது வேண்டுமென்றேன். அதற்கும் வழி சொன்னான். சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் 52, அவற்றின் ஒட்டெழுத்துக்கள் 52; ஆக மொத்தம் 104 என்பது அவன் கணக்கு.

ஆனால் எனக்கு 102 தான். அதாவது சிறிய ஒட்டெழுத்தில் q வும், பெரிய ஒட்டெழுத்தில் z எழுதவராது. எனவே 104 லிருந்து 2 ஐக் கழித்தால் 102 தானே? இதிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. 104 லிருந்து 2 ஐக் கழித்தால் எத்தனை வருமென்று மறந்துபோனது. மறந்துபோனது என்பதைவிட தெரியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும். ஏனென்றால் எனக்குக் கைகளிலும் கால்களிலும் சேர்த்து மொத்தம் 20 விரல்கள்தான் இருக்கின்றன. இவற்றை வைத்து நான் எப்படி 104 லிருந்து 2 ஐக் கழிப்பது ? 

இக்குழப்பத்திலிருந்து வெளிவர என் வாசகர்களில் ஐந்து பேரை அழைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் 20 விரல்கள்;மொத்தம் 100. என்னிடம் 20. ஆக மொத்தம் 120 விரல்கள். இதிலிருந்து எளிதாகக் கணக்கிட்டுவிட்டோம். ஆனால் 104 லிருந்து 2 ஐக் கழித்தாலும் 104 தான் வந்தது. எனக்கோ ஆச்சர்யம். இது சாத்தியமில்லையே? பிறகு விசாரித்ததில் எனது வாசர்களில் ஒருவருக்கு கால்களில் 2 விரல்கள் கூடுதலாக இருந்ததைக் கண்டறிந்தோம். பின்னர் அவரை அனுப்பிவிட்டு, அளவாக 20 விரல்கள் மட்டுமிருக்கும் வாசகரை வரவழைத்துக் கணக்கிட்டு விடையைக் கண்டறிந்தோம். 104 லிருந்து 2 போனால் 102 தான்.

இப்படியாக ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை அதிகரித்தும் எனக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. எனவே மீண்டும் தமிழிலேயே எழுதவந்துவிட்டேன். சரி விடுங்கள். ஆயிரம்தான் இருந்தாலும் ஆங்கிலத்தைத் தமிழில் பேசமுடியுமா என்ன?

கடந்த முறை ஊருக்குச் சென்றபோது ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு அரசுப் பேருந்தொன்றில் பயணித்தேன். வீடு சென்று சேர்ந்ததும்தான் தெரிந்தது, எனது மொபைலை ப்ளைட் மோடிலேயே வைத்திருந்தது. நல்ல வேளையாக கண்டக்டர் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இல்லாவிட்டால் பஸ் கட்டணத்திற்குப் பதிலாக ப்ளைட் கட்டணத்தை வசூலித்திருப்பார். ஏன் இந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மட்டும் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இப்படி எத்தனைப் பேர் தங்களது மொபைலை ப்ளைட் மோடிற்கு மாற்றி வைத்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்து ஏமாற்றுகிறார்களோ? இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாதா? என்ன செய்வது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களைத்தான் காலண்டரில் அச்சடித்திருந்தனர். வருடாவருடம் இவர்களுடன் இதே தொல்லையாய்ப் போய்விட்டது. இன்னும் இரண்டு நாட்களைச் சேர்த்து அடித்துத் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அச்சடிக்காவிட்டால்தானே குறைகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமலா போய்விடுவான்? பார்க்கலாம்.

என்றும் அன்புடன்
நா.சோழன்

அவர் அனுப்பின இந்த ரிப்ளையைத் தொடர்ந்து தோழர் ப.ராம்சாமி அவர்கள் என்னிடம் கூறிய எதிர்மறைவிமர்சனத்தையும் இங்கே பதிய வேண்டியது கட்டாயமாகிறது.

கந்தரகோலம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் எதிர்மறை விமர்சனம் :

“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவச்சிருக்கார். இது தப்பு. பக்கார்டிக்கு சரியான சைட் டிஷ் எதுனு கூடத் தெரியாதவங்கள்லாம் எதுக்கு புக் எழுதனும்? “

Tuesday, April 24, 2012

மீண்டும் சில கீச்சுகள்

எனது சில கீச்சுகள் மீண்டும் இங்கே.

*.என் தூண்டிலில் சிக்கிய மீன் எனக்கே சொந்தமென்றால் இவர் ஏன் கத்துகிறார்.? ஒருவேளை இவரின் கூடைக்குள் என் தூண்டிலைப் போட்டதாலோ ?

*.ரயிலில் ஒரு இடத்திற்குச் செல்வதற்காக பதிவு செய்திருந்தேன்.சொன்னதுபோலவே இன்று எனக்காக ஒரு ரயிலையும், துணைக்கு சிலரையும் அனுப்பியிருந்தனர்

*.என்னைக் கனவு காணச் சொன்ன எனது ஆசிரியர் என் கனவில் வந்து இது உன் பாடத்திட்டத்தில் இல்லையே எனத் திட்டினார்.

*.மர மண்டையாக இருப்பதிலும் ஒரு பயன் இருக்கிறது. எப்பொழுதேனும் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் மூழ்கிப் போகமாட்டோம்!

*.நேற்று கனவில் ஒரு முட்டை வந்தது. இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தக் கனவு வந்திருந்தால் கோழிக்குஞ்சாக வந்திருக்கும்!

Thursday, December 8, 2011

சில கீச்சுகள்!

எனது சில டிவிட்டுகள் உங்களுக்காக :))


*.எனக்கு விக்கல் வரும்போதெல்லாம் எனது நண்பர்கள் நீ சிறந்த அறிவாளி என்பார்கள். உடனே விக்கல் நின்றுவிடுகிறது!

*.துவைத்து வைத்திருக்கும் பேன்ட்டில் ஜிப் போடவில்லை என்று சுட்டிக்காட்டி சிரித்துக்கொண்டிருக்காதீர்கள்!

*.யாரையும் சாதாரணமாக எடை போட வேண்டாம். தராசைப் பயன்படுத்துங்கள்!

*.கோபத்துடன் பிள்ளையார் முன் வந்த எலி கேட்டது “யாரைக் கேட்டு என்னை உமது வாகனமாக்கினீர்? “ நீண்ட யோசனைக்குப் பின் சொன்னார் “மறந்துட்டேன்!”

*.கிணறு ஒன்று செத்துப்போய்விட்டது. அதை எப்படிப் புதைப்பது ?

*.யானை ஒன்றை கனவில் பார்த்தேன்.கருப்பாகவும் 4 கால்கள் ஒரு வாலுடனும் இருந்தது.தும்பிக்கை எங்கே என்றேன்.எருமைக்கு எதற்குத் தும்பிக்கை என்றது!

*.திரியில் தீயை வைத்தும் வெடிக்காமல் உறங்கிக் கொண்டிருக்கிறது பட்டாசு. முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடப் போகிறேன்!

*.போலீஸ்காரர் வீட்டில் திருடுபவர் சிறந்த திருடரல்ல. இன்னொரு சிறந்த திருடன் வீட்டில் திருடுபவனே மிகச் சிறந்த திருடனாவான்!


*.வயிற்றுவலி என்று மாத்திரை ஒன்றை விழுங்கினேன்.உள்ளே சுற்றி பார்த்துவிட்டு இருட்டென்று வெளியே வந்துவிட்டது. அதை வாந்தி என்கின்றனர் மூடர்கள்!

*.நிலா என்னை முறைத்துக்கொண்டேயிருக்கிறதென கடவுளிடம் முறையிட்டேன். அதிகமாக மிரட்டிவிட்டார் போலும் நாளுக்கு நாள் இளைத்துக்கொண்டே போகிறது!

*.தலை முழு சொட்டையாக இருப்பவர் மொட்டை அடிக்கிறேன் என்று வேண்டியதை நம்பிக்கொண்டு வரம் தருவது கடவுளின் அறியாமையன்றி வேறென்ன?

*.மிகச் சிரமப்பட்டு புள்ளியே வைக்காமல் ஒரு கோலம் வரைந்தேன். “ ரொம்ப அழகா இருக்கு, எத்தன புள்ளி கோலம்? “ என்று கேட்கிறார்கள்!

*.தோல்விகளே வெற்றிகளின் படிக்கட்டுகளாம். படிக்கட்டுகள் யாருக்கு வேண்டும்? எனக்கு லிஃப்ட்டிற்கான வழி சொல்லுங்கள்!

*.சேற்றில் விழுந்த என் நிழல் குளிக்காமலே வீட்டிற்குள் வந்துவிட்டது. விரட்டினேன் வெளியேற் மறுத்தது.விளக்கை அணைத்ததால் பயத்தில் ஓடிவிட்டது!

*.சத்தமில்லாமல் சுடவேண்டுமென்பதற்காய் சைலென்சர் துப்பாக்கி கொடுத்தார்கள். “டாய்ய்ய்” என்று கத்திக்கொண்டே துப்பாக்கியை எடுத்தார் வில்லன்!

*.நல்லவேளையாக என் வலது கையில் ஒரு மச்சம் இருக்கிறது. இல்லையென்றால் கண்ணாடியில் தெரியும் எனது உருவத்தை அடையாளம் தெரியாமல் குழம்பியிருப்பேன்!

*.என் மூளையைக் குழப்பி விடுவதாக எனக்கும் என் நண்பனுக்கும் ஒரு பந்தயம். நிச்சயம் வெற்றி எனக்கே. இல்லாத ஒன்றை அவனால் எப்படிக் குழப்ப முடியும்?

*.அவ்வளவு பெரிய வீட்டையே சுத்தம் செய்துவிடுகிறது என்று உங்கள் உடலை விளக்குமாரால் சுத்தம் செய்ய நினைத்தால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை!

*.பொன் நகையை விட புன்னகை சிறந்தது என்பதற்காக நகை அடகு கடையில் இளித்துவிட்டுப் பணம் கேட்டால் உடனே உங்கள் மூக்கில் தக்காளிச் சட்னி வரலாம்!

*.தூக்கம் வரவில்லை என்பதற்காக தூக்க மாத்திரைகளை விழுங்கினேன், உள்ளே சென்ற தூக்க மாத்திரைகள் தூங்கிவிட்டன போலும்; எனக்கு தூக்கமே வரவில்லை!

*.பயமாயிருக்கிறதென்று கதவு, ஜன்னல்களை மூடி வைத்திருந்தேன். வெளியில் செல்ல வழியில்லாமல் என்னுடனே தங்கிவிட்டது பயம்!

*.இறந்தவரை எழுப்பும் மருந்தொன்று கண்டுபிடித்துள்ளேன்.உங்களை வைத்துதான் சோதனை செய்யவேண்டும்!உதவ முடியுமா? தோல்வியடைந்தால் நான் உங்கள் அடிமை!

*.எனது கவிதை ஒன்றை பக்கத்துவீட்டு பாட்டியிடம் படித்துக்காட்டினேன்.அருமை என்று பாரட்டினார்கள்.அவர்களுக்கு காது கேட்காதென்பதை நம்பமுடியவில்லை!

Tuesday, November 8, 2011

கற்பூர வாசனை தெரிந்த கழுதை




முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால்  அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து  அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை.
விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகித்தத்யே தின்கிறது, அதனை காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!



Monday, October 31, 2011

ஆனைக்கும் பானைக்கும் சரி

முன்குறிப்பு : யானைக்கும் பானைக்கும் சரி அப்படின்னு ஒரு பழமொழி இருக்கிறது நம்ம எல்லோருக்குமே தெரியும். அது எப்படி யானைக்கும் பானைக்கும் சரியாகும் ? அந்தப் பழமொழி எப்படி வந்திருக்கும் ? அதற்கான கற்பனையான காரணம்தான் இந்தக் கதை!

கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில்தான் இந்த மயிர்க்கூச்செரியும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பட்டிக்காடு என்ற ஒரு மாநகரத்தில் மட்பாண்டங்கள் செய்து வியாபாரம் செய்யும் குயவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த நகரத்திலேயே அவருக்கு மட்டும்தான் மட்பாண்டங்கள் செய்யத்தெரியும் என்பதால் அவர் எப்படிப்பட்ட பானைகள், பாத்திரங்கள் செய்தாலும் அவரது திறமையை ஊர்மக்கள் வியந்து பாராட்டி வந்தனர்.

ஒருசமயம் இவரிடம் எண்ணற்ற பானைகள் விற்காமல் தேங்கிவிட்டிருந்தது. அதே நகரத்தில் இத்தனை பானைகளுக்கு தேவை இருக்காது என்பதை உணர்ந்த அவர் இன்னும் சில பானைகளைத் தயாரித்து அயல் தேசங்களில் சென்று விற்றுவிடலாம் என்று முடிவெடுத்தார். அதன்படியே இன்னும் சில பானைகளைத் தயாரித்து தன்னிடமிருந்த அனைத்துப் பானைகளையும் ஒரு மாட்டுவண்டியில் ஏற்றினார். ஆனால் எண்ணற்ற பானைகள் இருந்தபடியால் வண்டியில் பூட்டப்பட்டிருந்த மாடுகளால் அவற்றை இழுக்க முடியவில்லை. உடனே யானை ஒன்றை விலைக்கு வாங்கி மாட்டிற்குப் பதிலாக யானையைப் பூட்டி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து நான்கு நாட்கள் காடுகள், மலைகள் போன்றவற்றைக் கடந்து ஒரு பாழடைந்த கிராமத்தை அடைந்தார். அந்த கிராமத்தில் இருந்த மக்கள் நாகரீகத்தில் மிகவும் பின்தங்கியிருந்தனர். அவர்களிடம் தண்ணீர் தேக்கி வைக்க , சமைக்க என்று இன்னமும் பானைகளைப் பயன்படுத்தும் பழக்கம் வந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பானைகளைப் பற்றிய அறிமுகமே இல்லாமலிருந்தது கண்டு வியந்துபோனார். இங்கே பானைகளையும் அவற்றின் பயன்களையும் எடுத்துக்கூறினால் அனேக பானைகளை விற்றுத் தீர்த்துவிடலாம் என்று கருதி பானைகளின் பயன்கள்களைப் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். அவர் நினைத்தது போலவே அவரிடம் இருந்த பாதிக்கும் மேலான பானைகள் அந்தக் கிராமத்தில் விற்றுப்போயிற்று.

அளவில்லாத மகிழ்ச்சியுடன் மீதமிருந்த பானைகளை எடுத்துக்கொண்டு அடுத்த நாட்டினை நோக்கிப் பயணம் மேற்கொண்டார். அடுத்த நாட்டில் எல்லா பானைகளையும் விற்றுத் தீர்த்துவிட்டு நாடு திரும்பலாம் என்று நினைத்தபோதுதான் டாலரின் மதிப்பு குறைந்து வருவது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் தாமதித்தால் தான் நஷ்டப்படவேண்டும் என்பதை அறிந்துகொண்டு தன்னிடமிருந்த முருகன் டாலர் உட்பட அனைத்து டாலர்களையும் ரூபாயாக மாற்றி எடுத்துக்கொண்டு தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்.

வரும்வழியில் அந்தப் பாழடைந்த கிராமத்தின் வழியாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அந்த கிராம மக்கள் அவரை வழிமறித்து அவர் கொடுத்த பானைகள் அனைத்தும் உடைந்துவிட்டது என்றும் அதற்குத் தகுந்த நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் மிரட்டினர். கீழே விழுந்தால் பானைகள் உடைந்துவிடும் என்று தான் முதலிலேயே சொன்னதாகவும் அதற்கெல்லாம் நஷ்ட ஈடு கொடுக்க முடியாதென்றும் சமாளித்தார் நமது வியாபாரி. ஆனால் மக்களோ “ USER MANUAL " இல் தண்ணீருடன் கீழே போட்டால் உடைந்துவிடும் என்றுதான் இருக்கிறதே ஒழிய வெறும் பானையைக் கீழே போட்டால் உடைந்துவிடுமென்று அதில் இல்லை என்றும் எனவே கண்டிப்பாக நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என்றும் வாதிட்டு அவரை அந்த ஊர் நாட்டாமையிடம் அழைத்துச் சென்றனர்.

நாட்டாமையோ ஆலமரம் இருந்தால்தான் தீர்ப்புச் சொல்லுவேன் என்று கூறிக்கொண்டு ஆலமரத்தைத் தேடிக்கொண்டிருந்தார். ஊர் முழுவதும் தேடியும் ஒரு ஆலமரம் கூடக் கிடைக்கவில்லை. எனவே ஆலமர விதை ஒன்றை எடுத்துவந்து ஊரின் முக்கிய இடத்தில் விதைத்துவிட்டு இந்த விதை வளர்ந்து பெரிய மரமான பிறகுதான் இந்த வழக்கிற்குத் தீர்ப்பு வழங்குவேன் என்றாவாரு நடையைக் கட்டினார்.

அவர் நல்ல தீர்ப்பைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்த நம் வியாபாரிக்கோ சப்பென்று ஆகிவிட்டது. சரி இனியும் தாமதித்தால் மேலும் பிரச்சினைகள் வரலாம் என்று நினைத்துக்கொண்டு தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து ஒவ்வொரு பானைக்குமான விலையைத் திருப்பித்தந்துவிடுவதாகக் கூறினார். ஆனால் அந்தக் கிராமத்தில் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்பதால் மக்கள் அதனை வாங்க மறுத்துவிட்டு வேறு ஏதேனும் தருமாறும் தங்களை ஏமாற்ற நினைத்தால் உயிருடன் திரும்பமுடியாதென்றும் மிரட்டினர்.

நீண்ட யோசனைக்குப் பிறகு நமது பானை வியாபாரி தான் வந்திருந்த யானையை அந்தக் கிராமத்து மக்களிடம் ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பினார். யானையுடன் சென்ற தனது கணவர் தனியாக வருகிறாரே என்ன நேர்ந்தது என்று வினவினாள் அவரது மனைவி. அதற்கு நமது வியாபாரி “ ஆனைக்கும் பானைக்கும் சரியாப் போச்சு!” என்று பதிலளித்தார். அப்பொழுதிலிருந்து “யானைக்கும் பானைக்கும் சரி!“என்ற பழமொழி வழக்கத்திற்கு வந்தது.

பின்குறிப்பு : ”யானைக்கும் பானைக்கும் சரி”ன்ற பழமொழிக்கு நான் விளக்கம் சொல்லுறேன் பேர்வழினு இந்தக் கதைய வெளில சொல்லிறாதீங்க. அப்புறம் ஏதாச்சும் பிரச்சினைனா நான் பொறுப்பில்ல.இது முழுக்க முழுக்க கற்பனை. வரலாற்று நிகழ்வல்ல. நன்றி வணக்கம்!

இந்தப் பழமொழிக்கான உண்மையான கதை நம்ம ஜெய்சங்கர் அண்ணன் அவர்கள் கீழ பின்னூட்டத்துல சொல்லிருக்கார். அது என்னன்னா

ஒரு நாள் பானை வியாபாரி கல்லெடுத்து யானையை அடிக்க யானை செத்துப்போயிடுச்சு
யானைப்பாகன் தனக்கு அந்த யானை தான் வேணும்னு சொன்னான். புது யானைக்கு ஒத்துக்கலை

ஜட்ஜ் என்ன பண்ணினாருன்னா பானை வியாபாரிய வீட்டு கதவோரம் உள்ள எல்லா பானையும் அடுக்க சொன்னார்
யானை வியாபாரி வந்து கதவ தொறந்த வுடனே எல்லா பானையும் உடைஞ்சுடுச்சு
ஜட்ஜ் சொன்னார் யானைக்கும் பானைக்கும் சரின்னு.

இதன்மூலம் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,

Tuesday, June 21, 2011

பதிவர் சந்திப்பு கதை!

முன்குறிப்பு : திருநெல்வேலி பதிவர் சந்திப்பை ரொம்ப ரொம்ப அருமையா நடத்தின திரு சங்கரலிங்கம் அவர்களுக்கும் மற்றும் கௌசல்யா , சித்ரா , பாபு ஆகியோருக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு அங்கு சொன்ன கதையை இங்க பதிவிட்டிருக்கேன். படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.


எல்லோருக்கும் வணக்கம். எனக்கு இந்தக் கதையை எப்படி ஆரம்பிக்கிறதுனே தெரியல. காரணம் என்ன விட பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இருக்கீங்க. அந்த பயம்தான். அதுவும் இல்லாம இது ஒரு மொக்க கதை. தயவு செஞ்சு கோபப்பட்டுறாதீங்க. சீக்கிரமே முடிச்சிடறேன். கூடவே இத நான் பேச்சு வழக்குல இல்லாம உரைநடை வழக்குல சொல்லப்போறேன். அது எப்படி இருக்குனு கேட்டு முடிச்சதுக்கு அப்புறம் சொல்லுங்க!

நீங்கள் இந்தப் பதிவர் சந்திப்பிற்கு மன்னிக்கவும் நண்பர்கள் சந்திப்பிற்கு வரும்போது பூனை குறுக்கே செல்லுதல் போன்ற சகுனங்கள் ஏற்ப்பட்டு அது மூட நம்பிக்கை என்று உதாசீனப்படுத்திக்கொண்டு வந்திருந்தால் நான் சொல்லப்போகும் இந்தக் கதை உங்களின் அந்த எண்ணத்தை மாற்றிவிடும்.

முதலில் உங்களுடன் சிறு கேள்வி ஒன்று இருக்கிறது. உங்களில் யாருக்கேனும் இன்று காலை சூரியன் உதித்ததிலிருது இப்பொழுதுவரை எத்தனை நாளிகைகள் ஆகியுள்ளன என்று துல்லியமாகத் தெரியுமா ? 

உங்களுக்குத் தெரியாதென்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லப்போனால் எனக்கும் அதுபற்றித் தெரியாது. இன்னொரு முக்கியமான செய்தி என்னவென்றால் நாழிகைக் கணக்கிற்கும் நமது கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதே. ஆகையினால் நாம் கதையைத் தொடரலாம். கதையின் சில இடங்களில் புயல் , மழை வருமென்பதால் எல்லோரும் தயவு செய்து உங்களது குடைகளைக் கையுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

சுமார் 2100 வருடங்களுக்கு முன்னர் தமிழ் பீட்டர் என்றொரு குறுநில மன்னன் இருந்தான் என்று உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் உங்களில் யாரும் 2100 வருடங்களாக வாழ்ந்துவருபவர்களாகத் தெரியவில்லை.

இருந்தாலும் நான்தான் திருவள்ளுவரின் வகுப்பாசிரியர் என்றும் நான் கணிதப்பாடம் நடத்தியதால் வெறுத்துப்போன திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்றும் உங்களில் யாரேனும் எழுந்து நின்றோ அல்லது உட்கார்ந்து கொண்டோ சொல்ல வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் அந்த மன்னன் எனது கற்பனையில் வந்தவன் என்பதையும் கூற விழைகிறேன்!

தமிழ் மன்னனுக்கு அதுவும் 2100 ஆண்டுகளுக்கு முந்தய மன்னனுக்கு எப்படி தமிழ் பீட்டர் என்றொரு ஆங்கிலப்பெயர் வந்தது என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் அதற்கான காரணத்தை நள்ளிரவு 12 மணிவரை விழித்திருந்து எழுதித் தொலைத்துவிட்டதால் மன்னிக்கவும் எழுதி கையுடனே கொண்டுவந்திருப்பதால் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும்.

அதிக தமிழர்கள் உள்ள இடத்தில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் பேசுபவரை நாம் பீட்டர் விடுறான் என்று சொல்கிறோம். அதைப்போலவே நமது மன்னர் ஒரு சமயம் அரசு வரிப்பணத்தில் வெளிநாட்டைச் சுற்றிப்பார்க்காவிட்டால் தான் மன்னராயிருப்பதற்கே தகுதியற்றவர் என்ற என்று நினைத்ததால் இங்கிலாந்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தார்.

அப்பொழுது இங்கிலாந்தில் பிறந்த இரண்டுவயதுக் குழந்தை கூட ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஒரு வாலிபன் நமது மன்னரிடம் சில கேள்விகளைக்கேட்டன். மன்னரும் எவ்வளவோ முயன்றும் வாயில் வார்த்தைகளே வரவில்லை. அவருக்கு ஆங்கிலம் தெரியாதுதான் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் என் குலதெய்வத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் அவரை ஆங்கிலம் கற்க வேண்டாமெனச் சொல்லவேயில்லை. சரி கதைக்கு வருவோம்.

பதிலேதும் பேசமுடியாமல் நின்றிருந்த நம் மன்னர் திடீரென தமிழில் பேச ஆரம்பித்தார். மன்னர் பேசியது அந்த இளைஞருக்கோ அல்லது அந்த இளைஞர் பேசியது நம் மன்னருக்கோ புரியவில்லை. எனவே ஆங்கிலம் அதிகம் பேசுவோர் இருக்கும் இடத்தில் தமிழில் பேசியதால் நம் மன்னரின் பெயர் அன்றிலிருந்த தமிழ் பீட்டர் என்றானது.

மன்னரின் பெயர்க்காரணத்திற்கே இவ்வளவு நேரம் ஆகிவிட்டபடியால் விரைவில் இந்தக் கதையை முடிக்க முயற்சிக்கிறேன். சிறிது நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய மன்னருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததது. அது என்ன அதிர்ச்சி என்று தெரிந்துகொள்ள சிறிய விளம்பர இடைவேளை விடலாம் என்றிருந்தேன். விளம்பரத்திற்காக நான் பட்ட இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. சில சோப்பு நிறுவனங்களிடமும், எங்கள் ஷாம்பூ போட்டு பல்லு விளக்கினால் பற்களில் கூட முடி முளைக்கும் என்று விளம்பரம் செய்யும் விளம்பரக் கம்பனிக்காரர்களிடமும் எனது கதைக்கு நீங்கள் ஸ்பான்சர் செய்யுங்கள் என்று நீண்ட நேரம் போராடினேன். பலனில்லை . அவர்கள் சொன்ன ஒரே பதில் மானாடி , மயிலாடி கெமிஸ்ட்ரி வந்தால்தான் நாங்கள் ஸ்பான்சர் செய்வோம் என்றதுதான்.

படிக்கும் காலத்திலிருந்தே நானும் கெமிஸ்ட்ரியும் ஒரே நேர்கோட்டில் ஆனால் எதிர் எதிர் திசைகளில் பயணித்ததால் அவர்கள் கேட்டது போல எனது கதையில் கெமிஸ்ட்ரி வராது என்பதால் விளம்பரம் தேடும் எனது முயற்ச்சியைக் கைவிட்டுவிட்டேன். அதே போல தொடரும் என்று போடுவதற்கு இது ஒன்று தொடர் நாடகமில்லை என்பதால் மறுபடியும் கதையைத் தொடர்கிறேன்.

நாடு திரும்பிய நம் மன்னருக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி என்னவென்றால் வெளிநாடு சென்று வந்த தினத்தன்று மன்னர் அகோரப் பசியிலிருந்தார். அதனால் அன்று பல்லுவிலக்குவதைக் கூட இரு தினங்களுக்கு ஒத்திப்போட்டுவிட்டு நாட்டில் யாருமே பல்லு விளக்கக்கூடாது என்ற சட்டத்தையும் போட்டுவிட்டு பந்தியில் அமர்ந்தார். அப்பொழுது என்னைத் தொடாதே என்றொரு சத்தம் கேட்டது. அதிர்ச்சியில் உறைந்துபோன மன்னர் அந்த சத்தம் இலையில் வைத்திருந்த பச்சியிலிருந்து வருவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டார்.. மன்னரின் அகோரப்பசி அந்தப் பச்சி சொல்வதைக் கேட்காமல் இரண்டு பச்சிகளை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

அப்பொழுது இலையிலிருந்த இன்னொரு பச்சி சொன்னது " பல்லு விளக்காமல் எங்களைச் சாப்பிட்டதால் எதிர்காலத்தில் சான்றோர்களின் முன்னிலையில், உன்னைவிட அறிவாளிகளின் முன்னிலையில்  நீ ஒரு மொக்கைக் கதை சொல்வாய் அதற்காக பயந்து நிற்பாய் " என நான் சாபம் அளிக்கிறேன் என்று வாயை மூடுவதற்குள் மன்னர் அந்தப் பச்சியை தனது வாயில் போட்டு மூடிவிட்டார்.

அந்தப் பச்சியின் சாபம் நிறைவேறாது என்று கர்வத்தில் இருந்த நமது மன்னர் சில தினங்களில் இறந்து விட்டார்.ஆனால் நல்லோரின் சாபம் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்கிற சிலப்பதிகார சொற்களை நியாபகப்படுத்த வைத்துவிட்டது இப்பொழுது! ஆம் அந்த பச்சி சொன்ன சான்றோர்கள் நீங்கள்தான் , பின்னர் அந்த மன்னர் யாரென்று நீங்களே ஒரு முடிவிற்கு  வாருங்கள்!

அதற்கு முன்னர் நான் முதலில் கூறியது போல இந்த கதையில் மழை , புயல் வராததற்குக் காரணம் நீங்கள் யாரும் குடை எடுத்துக்கொண்டு வரதாதால் மழை வந்து அதனால் நம் மன்னருக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட தீமைகளால் நான்கு நாட்கள் தொடர்ந்து எழுதிய எனது கதையின் நானூற்றி ஐந்தாயிரம் பக்கங்களை உங்களுக்கு சொல்ல முடியாமல் போனது கண்டு வருந்துகிறேன். 

மேலும் முதலில் சொன்னது போல இதில் சகுனங்களை நம்புவீர்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குக் காரணம் இந்தக் கதையை கேக்குறதே  கெட்ட விசயம்தானே! இப்ப சகுனத்த நம்புரீங்கள்ல :-)

பின்குறிப்பு : கதை எப்படி இருந்துச்சு அப்படிங்கிற உங்களோட கருத்துக்கள் ஆவலுடன் வரவேற்கப்படுகிறது!

Tuesday, April 26, 2011

அறிவியல் கதை

முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி பேய்க்கதையும் அதுக்கு முன்னாடி சரித்திரக் கதையும் படிச்சிருப்பீங்க. அப்படி படிக்காதவங்க நேரம் இருந்த போய் படிச்சுப் பாருங்க. அந்த வரிசைல இன்னிக்கு அறிவியல் கதை ஒன்னு.

எச்சரிக்கை : இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. உயிருடன் இருப்பவர்கள் அல்லது இறந்தவர்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டால் அது தற்செயலானதே!

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்தக் கடிகாரம் "டொக் டொக்" என்ற சப்தத்துடன் நொடிகளை விழுங்கி மணிகளைப் பிரசவித்துக்கொண்டிருந்தது. ரவி அந்தக் கடிகாரத்தைப் பார்த்தபொழுது அது ஒன்பது மணிகளைப் பிரசவித்து பத்தாவது மணியைப் பிரசவிக்க இன்னும் முப்பது நிமிடங்கள் இருப்பதாகக் கூறியது! தனது மும்முரமான காலை வேளைகளில் ஈடுப்பட்டிருந்த ரவி மணி 9.30 ஆனதும் அவனுக்குள் ஒரு மணிச்சத்தம் கேட்டது.தான் அயர்ன் செய்துகொண்டிருந்த சட்டையை விட்டுவிட்டு நேராக கிச்சனுக்குள் ஓடினான்.

கிச்சனில் மதியத்திற்குத் தேவையான உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கினான். ஒவ்வொரு பொருளையும் ஒருவித சோதனைக்கு உட்படுத்தி,  மிகத்துல்லியமாக எடையைச் சரிபார்த்து ஒவ்வொரு உணவு வகையையும் தயாரித்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு உணவு வகையும் சுவையாக இருக்கிறதா என்பதையும் ஒருவித உபகரணம் கொண்டு சோதித்து அறிந்து கொண்டிருந்தான். இந்த இடத்தில் உங்களுக்குக் குழப்பம் வரலாம். ஆம் , ரவி ஏன் உணவு வகைகளை சோதிப்பதற்கு ஒரு தனியான உபகரணத்தைப் பயன்படுத்தினான் ? ரவியைப் பற்றிய சிறு அறிமுகம் உங்களது சந்தேகத்தைப் போக்கும் என்பதால் அடுத்த பத்தி முழுவது ரவியைப் பற்றிய அறிமுகத்திற்காக Install செய்யப்படுகிறது.

ரவி ஒரு இயந்திர மனிதன். அறிவியல் கதை என்றால் இயந்திர மனிதன் என்று வருது இயற்கைதானே. ஆனால் ரவி செயற்கையானவன். நீங்கள் எந்திரன் படம் பார்த்திருக்கலாம். பார்க்காதவர்களுக்கு சிறுகுறிப்பு என்று இங்கே எதையும் சொல்லப்போவதில்லை என்பதால் நீங்கள் தொடர்ந்து படிக்கலாம். ரவியைத் தயாரித்தது ஒரு ஆப்பிரிக்கக் கம்பனி என்றால் உங்களால் ஜீரணிக்க முடிகறதா? இந்தியக் கம்பெனி என்றாலும் ஜீரணிக்க முடியாது! ஏனென்றால் ரவியின் உடல் முழுவதும் இரும்பால் செய்யப்பட்டது. உண்மையில் ரவி ஆப்பிரிக்காவில் தயாரிக்கப்பட்டவன்தான். தொழில்நுட்பத்தில் பின்தங்கி இருக்கும் ஆப்பிரிக்காவில் இது எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்வியை விட்டுவிட்டு , ரவி எப்படி இந்தியாவிற்குள் வந்தான் என்பதைப் பார்க்கலாம்.

ரவியின் தற்போதைய ஓனர் வின்சென்ட் ஒருமுறை ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து இந்தியா திரும்புகையில் ஆப்பிரிக்கா வந்ததின் நினைவாக ஏதாவது பொருள் வாங்கிச் செல்லலாம் என்று ஒரு பலசரக்குக் கடைக்குள் நுழைந்தார். பலசரக்கு என்ற வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு வின்சென்ட் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் நுழைந்தார் என்ற பொருள் கொ(ல்)ள்வோர் தயவு செய்து அந்த எண்ணத்தில் இருந்து திரும்பிவரவும்! அந்தப் பலசரக்குக் கடையில் நுழைந்த வின்சென்ட் எந்தப் பொருளை வாங்கலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவரது குழப்பத்தினைத் தெரிந்து கொண்ட கடை உரிமையாளர் வின்சென்ட்டிடம் ஏதோ கூறினார்.

  ஆனால் அது வின்சென்ட்டிற்கு சரியாகப் புரிவில்லை. அரைகுறை ஆங்கிலம் தெரிந்த வின்சென்ட் அந்தக் கடை உரிமையாளர் தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார் என்று நினைத்ததுடன் , தான் தெரியாது என்று சொன்னால் தன்னைப்பற்றித் தவறாக எண்ணக்கூடும் என்று கருதியதால் அவர் சொன்னதிற்கெல்லாம் YES, OK என்ற வார்த்தைகளை மட்டும் சொல்லி இந்த இயந்திர மனிதனான ரவியை வாங்கி வந்தார்! உண்மையில் அந்தக் கடைக்காரர் பேசியது ஆங்கிலம் கிடையாது , ஆப்பிரிக்க உள்ளூர் மொழி! மேலும் ரவியைப் பற்றி அவர் கூறியது என்னவென்றால் " இந்த ரோபோட்டினை ஜப்பானில் இருந்து கடத்திக் கொண்டுவந்துள்ளோம், அதனால் இதனை மலிவு விலையில் விற்கின்றோம் " என்பதுதான்.

  இப்படியாக நமது ரவியின் இந்தியப் பயணம் இனிதே முடிந்தது. இந்தியா வந்த வின்சென்ட் அந்த இயந்திரத்தின் பாகங்களைப் பொருத்தி அதற்கு ரவி என்ற பெயரும் கொடுத்து இதோ இப்பொழுது அவனை தனது வீட்டு வேலைக்காரனாக்கி அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார். அன்றாட வேலைகளை ரவியின் நினைவகத்தில் சேமித்துவிட்டு அதனை எப்படி செய்யவேண்டும் என்ற கட்டளைகளையும் நிரப்பிவிட்டு வின்சென்ட் அலுவலகம் சென்றுவிட்டார். ரவியைப் பற்றி இன்னும் சில பத்திகள் சொல்லவேண்டும் என்ற எனது ஆவலை ஏற்கெனவே இது பெரிய பதிவாகிவிட்டது என்கிற உள்ளுணர்வு தடுப்பதால் இதோ விரைவில் வின்சென்ட் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பின்னர் நடந்த நிகழ்சிகளைப் பார்க்கலாம்.

  கடிகாரம் முதல் பத்தியில் சொல்லப்பட்டதுபோல உவமையினை நினைத்துகொண்டு மணி 6 ஆகிவிட்டது என்பதைக் கருத்தில்கொள்க. வின்சென்ட் அலுவலகத்தில் இருந்து திரும்பிக்கொண்டிருதார். ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கிவந்த தனது இயந்திர மனிதன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்ற அடக்க முடியாத ஆவலுடன் வீட்டிற்குள் நுழைந்தார். காலையில் இருந்து தான் கொடுத்த வேலைகளை அவன் சரியாகச் செய்திருக்கிறானா என்று சோதனையிடத் தொடங்கினார். சமையலறைக்குள் சென்று உணவு வகைகளைச் சோதனயிட்டவர் சந்தோசத்தில் பூரித்துப் போனார். அவ்வளவு சுவையான உணவு. பின்னர் அடுத்ததாக பிரிட்ஜினைத் திறந்து பார்த்தார். அவர் சொன்னது போல சில உணவுவகைகளை எடுத்து உள்ளே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் வின்சென்ட்டிற்குக் கோபம் கோபமாக வந்தது. காரணம் பிரிட்ஜிற்கு மின்சார இணைப்புக் கொடுக்கப்படாமல் இருந்தது.

  ரவியை அழைத்து கண்ணா பின்னவென்று திட்டிவிட நினைத்தார். ஆனால் அவன் ஒரு இயந்திரம் தானே என்பதை அறிந்து பின்னர் அதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அனைத்து கட்டளைகளையும் கொடுத்தவர் மின்சார சுவிட்சினை ஆன் செய்யவேண்டும் என்ற கட்டளையை மட்டும் கொடுக்காமல் விட்டிருந்தார். மேலும் ரவியின் நினைவகப் பகுதி மிகவும் குறைவாக உள்ளதையும் அறிந்தார். காரணம் என்னவென்றால் " மலிவு விலையில் , அதுவும் திருடிக்கொண்டு வந்த பொருள் நன்றாக உழைத்ததாக சரித்திரமே இல்லை " என்ற நீதியை விளக்கும் பொருட்டு எழுதப்பட்ட இந்தக் கதையே!

நீதி : அறிவியல் கதைல அறிவியல் விளக்கங்கள் இருக்கனுமா என்ன ?

பின்குறிப்பு :   அடுத்ததா இலக்கியக் கதை ஒன்னு எழுதலாம்னு இருக்கேன்! என்ன சொல்லுறீங்க ?

Friday, March 25, 2011

பேய்க் கதை

முன்குறிப்பு : கொஞ்சநாள் முன்னாடி சரித்திரக் கதை ஒன்னு படிச்சிருப்பீங்க. அதே மாதிரி பேய்க்கதை ஒன்னு இன்னிக்கு!

எச்சரிக்கை : இதய பலகீனம் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும்.

தனது தலைக்கு மேலே அசுர வேகத்தில் சுற்றிக்கொண்டிருந்த அந்த கற்றாடியிலிருந்து வரும் குளிர்காற்று கூட அவனை உஷ்ணமாக்கிக்கொண்டிருந்தது அந்த செய்தி அவன் காதில் விழுந்ததிலிருந்து. ஆம் சற்று முன்னர்தான் அவனது அறைத்தோழன் அந்த கொடூர செய்தியை போட்டுடைத்தான். சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த அறையில் வசித்துக்கொண்டிருந்த ஒரு கன்னிப்பெண் அந்த ஃபேனில் ஒரு கயிறை மாட்டி ... அவன் சொல்லும்போதே பாதி அழுதுவிட்டான் குமார். " போதுண்டா போதும். மேல சொல்லிடாத , இப்பவே வயித்தக்கலக்குது." என்று பயத்தில் மிரண்டு போனான் குமார்.

குமார் பற்றியும் அவனது அறைத்தோழன் அஸ்வின் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்வது கதையின் சாரத்தை உங்களுக்குச் சற்று உணர்த்தலாம். குமாரும் அஸ்வினும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகின்றனர். அஸ்வின்தான் முதலில் சென்னைக்கு வந்தவன். இந்த அறையினை முதன்முதலில் வாடகைக்கு எடுத்தவனும் அஸ்வின்தான். பின்னர் தனது அலுவலகத்தில் வேறொரு பணியிடம் காலியாகவே தனது நண்பனான குமாரிடம் தகவல் சொன்னதும் அவன் அஸ்வின் பணிபுரியும் நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கூடுதல் தகவல்கள். சரி இனி மேலே நடப்பதைக் காண்போம்.

குமாரின் கண்கள் மேலே சுற்றிகொண்டிருந்த காற்றாடியிலேயே நிலைத்து நின்றிந்தது. அதன் ஒவ்வொரு சுற்றுகளிலும் அவனது ஆசைகள் கனவுகள் கலைக்கப்பட்டுக் கொண்டிருந்தது என்றால் மிகையான சொல்லாகாது. அப்படி ஒரு உயிர்பயம் அவனிடம். நேரம் இரவு எட்டை நெருங்கிகொண்டிருந்தது.  வெளியில் யாரோ நடப்பது போன்ற ஒரு உணர்வு சட்டென மின்னி மறைந்தது. குமாரின் இருதயம் நிமிடத்திற்கு 72 என்ற கணக்கினைப் பொய்யாக்கியே தீருவேன் என்று துடிக்க ஆரம்பித்தது. மேலும் கொலுசொலியும் , மல்லிகைப்போ வாசமும் வருவதாக உணர்ந்தான் குமார். உண்மையில் இது வரை பார்த்த சில திரைப்படங்களின் தாக்கம் அவனுக்கு இந்த உணர்வினைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

வெளியில் சென்றுவிட்டு வந்த அஸ்வின் " டேய் குமார் , வா சாப்பிடப் போலாம் " என்றான். " போ .. போலாம் " என்றவன் சட்டென எழுந்து வேகமாம வெளியேறினான். சாதரணமாக அவ்வளவு பயத்தில் இருப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்து எழுவதற்கே சில காலம் ஆகலாம். ஆனால் குமார் எப்படி எழுந்தான் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். எல்லாக் கதைகளிலும் அதே போன்று கூறினால் சற்று போர் அடிக்கலாம் என்பதால் குமார் தற்பொழுது எழுந்துவிட்டான். ஆனால் குமாரின் முகத்தில் இருந்த அந்தப் பயமும் நடுக்கமும் அவனிடம் இருந்து விலகவில்லை என்பதை அஸ்வினின் கண்களில் தெரிந்த குமாரின் உருவம் காட்டிக்கொடுத்தது. ஆனால் அஸ்வின் எதையும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை .. எருமை மேல் மழை பெய்தது போல அமைதியாக சாப்பிடச் சென்றவனைத் தடுத்து தான் பயந்து போயிருப்பதைக் கூறிவிட நினைத்தவனை பின்நோக்கி ஏதோ இழுப்பது போன்று உணர்ந்தான். ஆனால் அவனுக்குப் பின்னல் திரும்பிப்பார்க்கும் எண்ணம் சற்றும் இல்லை. சடாரென முன்னோக்கி இழுத்தவன் அவனது சட்டை பின்னால் இருந்த ஆணியில் பட்டுக்கிழிந்ததும் இல்லாமல் வேகமாக கீழேயும் விழுந்தான்.

கீழே விழுந்ததில் ஏற்பட்ட சத்தத்தில் திரும்பிய அஸ்வின் வேகமாக குமாரின் அருகில் வந்து " இங்க ஏன்டா விழுந்த ? இந்த இடத்தில்தான் அந்தப் பொண்ணு..."  என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வர மறுத்தன. அவன் மறுபடியும் அந்த விசயத்தைக் கூறவேண்டும் என்று எண்ணவில்லை. ஆனால் குமாருக்குப் புரிந்திருந்தது. பயமும் கலக்கமும் அதிர்ச்சியும் அவனது முகத்தில் ஓடியதை நம்மால் மறுக்க முடியாது. இருந்த போதிலும் குமார் சாப்பாட்டுக் கடை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது நடையில் ஒரு கழுதையின் மன்னிக்க...  ஒரு குரங்கின் மீண்டும் மன்னிக்க .. அவனது நடை ஒரு கூகை நடப்பது போன்று இருந்தது. அப்படியே நடந்து சென்றவன் செத்த பிணம் போல சாப்பாட்டுக் கடையின் பெஞ்சில் அமர்ந்தான். அங்கே இருந்த தொலைக்காட்சியில் மாண்ட மயிலாட ஓடிக்கொண்டிருந்தது என்று நான் சொல்லுவேன் என்று நீங்கள் கருதினால் அந்த என்னத்தை எச்சில் தொட்டு அழித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். அங்கிருந்த தொலைக்கட்சிப்பெட்டியில் " திருவிளையாடல் " என்ற பக்திப் பரவசமான படம் ஓடிக்கொண்டிருந்தது. இந்தப் படத்தில் " பாட்டும் நானே பாவமும் நானே " என்ற பாடலில் முதலில் ஒரே ஒரு சிவாஜி பின்னர் பல சிவாஜியாக மாறிய காட்சியில் குமாருக்கு மூளையின் ஏதோ ஒரு முலையில் மின்னல் வெட்டியது. சட்டென அங்கிருந்து எழுந்தவன் தனது அறையை நோக்கி ஓடினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அஸ்வினின் இதழோரத்தில் ஒரு குரூரப் புன்னகை தோன்றி மறைந்தது.

தனது அறைக்கு ஓடிய குமார் நொடிப்பொழுதில் கையில் தனது தொலைபேசியுடன் ஓடிவந்தான். ஓடிவந்தவன் நேராக தொலைக்காட்சிப் பெட்டி அருகில் சென்று தொலைபேசியை வைத்துவிட்டு அதனை பதிவு செய்ய ஆரம்பித்தான். திரும்பி அஸ்வினைப் பார்த்தவன் அதே குரூரப் புன்னகையுடன் " இந்தப் பாட்ட ரெகார்ட் பண்ணினா தெரியும் " என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தான்.

நேரம் இரவு 10 மணி என்பதை அந்தக் கடிகாரம் அவ்வளவு சத்தகாமத் தெரிவித்திருக்க வேண்டாம். ஏற்கெனவே நடுங்கிக்கொண்டிருந்த குமார் என்ன ஆவான் என்று உங்களின் படபடப்பு புரிகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல குமார் ஒன்றும் நடுங்கிக்கொண்டிருக்க வில்லை. நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருக்கிறான். அப்படியானால் அவன் இவ்வளவு நேரம் பயந்தது எதற்காக , அந்த காற்றாடியில் என்ன இருந்தது என்று அறியும் ஆவல் இருப்பது
நியாயமானதே. நீங்கள் நினைப்பதுபோல் அந்தக் காற்றாடியில் அந்தப் பெண் தூக்குப் போட்டெல்லாம் தொங்கவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் அந்தக் காற்றாடியில் ஒரு பெண் தனது குழந்தைக்குத் தொட்டில் கட்டி தூங்கச் செய்திருக்கிறாள் என்பதே அந்தச் செய்தி.! பின்னர் ஏன் குமார் பயந்து நடுங்கினான் என்று உங்களுக்கு விளக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

குமாரின் அலுவலகத்தில் ஒரு மிக முக்கியமான வேலை அவனிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வேலையை நினைத்தே அவன் பயந்து கொண்டிருந்தான். பின்னர் ஒருமுறை குமார் கீழே விழுந்ததும் அஸ்வின் " அந்த பொண்ணு " என்று கூறி மேலும் கூறாமல் விட்டதற்குக் காரணம் அஸ்வினுக்குத் திக்கு வாய் என்பதால் மட்டுமே. மேலும் அவன் திருவிளையாடல் பாடலை ரெகார்ட் செய்திடக் காரணம் அவன் நீண்ட நாட்களாக அந்தப் பாடலைக் கேட்கக் காத்திருந்தான்!!

நீதி : இதைப் படித்து பயந்தவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கப்படாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன் :-)