Wednesday, June 25, 2014

கந்தரகோலம் - ஆங்கில மொழிபெயர்ப்பும் பிரச்சினைகளும்!

தமிழ் இலக்கியத்தின் நிகழ்காலச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்களுக்கு தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் மற்றும் பிழைப்புவாதப் போராட்டங்கள் பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும்.

உலகின் மிகத் தொன்மையான மொழியாக இருந்தபோதிலும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் தமிழ் இலக்கியம் பெரிதாக ஒன்றும் வளர்ந்திருக்கவில்லை. திருவள்ளுவர் ஓரிரு கவிதைகள் எழுதியிருந்தார், அதற்குப் பின் கம்பர் ஏதோ சில பல கவிதைகளை ராமாயணம் என்ற பெயரில் சொல்லி இருந்தார். அதன்பிறகு புதுமைப்பித்தன் வாசிக்கும்படியாக ஏதோ இரண்டு சிறுகதைகள் எழுதியிருந்தார்.  அதன் பின்னர் தமிழ் இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திருப்பதாக அறிந்தவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளமாட்டார்கள்.

“டீச்சர், இவன் என்னைக் கிள்ளிட்டான், மிஸ், என் ரப்பர் வெச்ச பென்சிலைத் திருடிட்டான்” என்ற அளவிலான ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையைப் போலவே காட்சியளிக்கிறது தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல். இச்சூழலை அடியோடு மாற்றி, தமிழ் இலக்கியவெளியினை ஒன்றாம் வகுப்பிலிருந்து நேரடியாகக் கல்லூரிக்கு மாற்றும் திறத்துடன் தோழர் நாகராஜசோழனால் உருவாக்கப்பட்டிருக்கும் படைப்புத்தான் கந்தரகோலம்.

கடந்த ஆண்டிலேயே முழுவதுமாக எழுதிமுடிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் தமிழில் இந்நூலை வெளியிடமுடியவில்லை என்பது என் போன்ற வாசகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தினை ஏற்படுத்திவருகிறது. ஒன்றுக்கும் உதவாத புத்தகங்களை எல்லாம் வாசகர்கள் சொந்தச் செலவில் வாங்கி வாசித்து, இதுதான் இலக்கியம் என்ற ஒரு தவறான புரிதலிலேயே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் சூழல் எப்பொழுது மாறுமோ என்ற ஆதங்கத்தில் இருந்தபோதுதான் கந்தரகோலம் புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார் நா.சோழன். இலக்கியம் என்பதன் முழு அர்த்தம் எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
ர்
தமிழில் இந்த நூல் வெளியாகும் நாள் தமிழ் இலக்கியம் குறித்த பலவிதமான கட்டுடுடைப்புக்களை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். ஆனால், தமிழ் இலக்கியவெளியில் நிகழ்ந்துவரும் அரசியல் காரணங்களால் கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடுவதில் மறைமுக எதிர்ப்புக்களையும், மிரட்டல்களையும் நாகராஜசோழன் சந்தித்துவருகிறார். பின்னே கந்தரகோலம் வெளியாகிவிட்டால் இலக்கியம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை என்னாவது?

வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமுள்ள தமிழ் இலக்கியவெளியில் புத்தகங்களை விற்பதற்கும், விற்றபிறகு அப்புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுவதற்கும் தனித்தனியாக யோசிக்கவேண்டியிருப்பது ஒரு எழுத்தாளன் எதிர்கொள்ளக்கூடாத கெட்ட அனுபவங்களில் ஒன்று. நோயாளிகளை விடவும் மருத்துவர்கள் அதிகமாக உள்ள சூழலில் அந்த நோயாளியின் நிலை வருந்தத்தக்கதுதான். பெரும்பாலான இலக்கியவாதிகளும், எழுத்தாளர்களும் இதனை ஒரு சவாலாகவே கருதி தங்களது எழுத்தில் சிற்சில கவர்ச்சி வித்தைகளையும் கைக்கொண்டுவருகின்றனர்.

ஆனால், இதுகுறித்து நாகராஜசோழனின் பார்வை முற்றிலும் மாறானது. அவரது வாதத்தின் படி, ஒரு குரங்கினைச் சுற்றி நூறு மனிதர்கள் இருந்தாலும், ஒரு மனிதனைச் சுற்றி நூறு குரங்குகள் இருந்தாலும் வேடிக்கை காட்டப்போவதென்னவோ குரங்குதான். இதுதான் நாகராஜசோழன் மற்ற எழுத்தாளர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் நிலை. இதனாலேயே அவரது படைப்புலகம் மற்ற எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது.

கந்தரகோலம் கவிதைத் தொகுப்பின் அருமைகளால் கவரப்பட்ட ஆங்கிலேயர்கள் இந்த நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகச் சமீபமாகக் கேள்விப்பட்டேன். இலக்கிய உலகின் அகப்படிம உணர்ச்சிக் கூறுகளை உள்ளடக்கிய படைப்பான கந்தரகோலம் முதன்முதலில் தமிழில் வெளியாவதுதான் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் சிறு அளவிலான நன்றியாகவாவது இருக்குமென்றாலும், ஆங்கிலத்திலாவது வெளியாகிறதே என்று நினைத்து மகிழ்ந்துவந்தேன்.

ஆனால், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கந்தரகோலம் சிறுகதைத் தொகுப்பும் வாசிப்புவெளிக்கு வரமாலேயே முடக்கப்பட்டிப்பருப்பதாகக் கேள்விப்பட்டதிலிருந்து வாசிப்பின் மேலிருந்த அனைத்து கவர்ச்சிகளும் சுக்குநூறாக உடைந்துவிட்டன. நல்ல நூல்களெல்லாம் எங்கோ சல்லடைகளால் வடிக்கப்பட்டு, மோசமான நூல்களை மட்டுமே வாசிக்கவேண்டிய கட்டாயம் தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் இருப்பது வருந்தத்தக்கது.

கந்தரகோலம் ஆங்கிலமொழிபெயர்ப்பும் முடக்கப்பட்டிருப்பது குறித்து என் ஒரே ஆதர்ஷ எழுத்தாளரான நாகராஜசோழன் அவர்களுக்கு கடந்த 2114 ஆம் ஆண்டு ஒரு மடல் அனுப்பியிருந்தேன். அதற்கான பதில் நேற்று வந்திருந்தது. அவரது பதில் கீழே...


அன்பின் செல்வா,



வணக்கம். இன்று இதே போன்ற கடிதத்தினைப் பதினைந்தாவது முறையாக வாசிக்கிறேன். இதுவரையிலும் வாசித்த 15 கடிதங்களிலும் ஒரு எழுத்துக்கூட மாற்றமில்லாமல் ஒரே மாதிரியாக இருப்பது கந்தரகோலம் குறித்து வாசகர்களிடையே எழுந்திருக்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது. பாருங்கள், பதினைந்து கடிதங்களிலும் பெயரும் கூட ஒரே மாதிரியாக இருக்கிறது. இதுகுறித்து என் வாசகர் வட்ட நண்பரிடம் கேட்டிருந்தேன்.


அதற்கு அந்த அன்பர்,  நீங்கதானே நாகா ஒரு நாளைக்கு நூறு கடிதமாவது இருக்கனும்னு சொன்னீங்க, இன்னிக்கு ஒரே கடிதம்தான் வந்திருந்துச்சு, அதான் அத நூறு ஜெராக்ஸ் எடுத்துட்டேன் என்றார். ஏன் இத்தன நாளா இப்படி எதுவும் வரதில்லையே என்றேன். இத்தன நாளா ஒரு கடிதம் கூட வராதுங்க, நானே உக்கார்ந்து எல்லாத்தையும் எழுதுவேன். ஆனா இன்னிக்கு இந்தக் கடிதம் வந்துச்சுங்கிறதால அத ஜெராக்ஸ் எடுத்துக் குடுத்துட்டேன் என்றார்.

தமிழ் இலக்கியச் சூழலில் அறிவுள்ள ஒரு வாசகர் வட்ட நண்பர்கூட எழுத்தாளர்களுக்கு வாய்ப்பதில்லை. இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு எழுத்தாளன் எப்படி சிறந்த படைப்புக்களைத் தரமுடியும் என்ற கேள்வி அடிக்கடி ஏற்பட்டுவிடுகிறது.

சரி கேள்விக்கு வருகிறேன். கேள்விக்கு நீங்களே வந்திருப்பதால் நான் நேரடியாகப் பதிலுக்கே வந்துவிடுகிறேன்.


கந்தரகோலம் கட்டுரைத்தொகுப்பினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிரும்புவதாக சக இலக்கியவாதியும், ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான கூகுள் ட்ரேன்ஸ்லேட்டர் என்னிடம் கோரியிருந்தார். தமிழில் வெளியாவதில் தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணமே இருப்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பு குறித்த அவரது ஆலோசனை எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.



சில நாட்களுக்குப் பிறகு கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு தயாராகிவிட்டதாகக் கூறி, அதன் மின்புத்தகத்தினை எனக்கு அனுப்பியிருந்தார். ஏதேனும் தவறுகள், மொழிபெயர்ப்புப் பிழைகள் இருப்பின் ஒருமுறைக்கு இருமுறை படித்துப்பார்த்துத் திருத்திக் கொடுக்குமாறும் கேட்டிருந்தார்.



எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது என்பதாலும், ஆங்கிலத்தையும் நான் தமிழிலேயே பேசுவேன் என்பதாலும், மற்றொரு நண்பரிடம் கொடுத்து அதனைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டிருந்தேன். அவருக்குக் கந்தரகோலம் தமிழில் எழுத்தப்பட்ட விவரங்கள் தெரியாது.



ஓரிரு நாட்களுக்குப் பிறகு அந்த நண்பர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பினை எனக்கு அனுப்பியிருந்தார்.



அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை. அதன் முதல் அத்தியாயமே என்னைப் புரட்டிபோட்டது. வழக்கமாகப் புத்தகங்களை நாம்தான் புரட்டுவோம். ஆனால், இது என்னைப் புரட்டியது. இப்படியும் மனிதர்கள் பூமியில் வாழ்கிறார்களா என்ற கோபம் என்னைத் திக்குமுக்காடச் செய்தது. எத்தனையோ சிரமப்பட்டு, கண்களை மூடிப் பல்லைக் கடித்துக் கொண்டு படித்துமுடித்தேன். அக்கிரமம்; அநியாயம். அதன் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு வரியும் தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் புத்தகத்தை முழுமையாகக் காப்பி அடித்ததிருந்ததைப் போலத் தோன்றியது.



ஒவ்வொரு இடமும், அதன் பெயரையும் கூடக் கந்தரகோலம் புத்தகத்திலிருந்து காப்பியடித்திருந்தார்கள். ஒவ்வொரு காட்சியும், ஏன் ஒவ்வொரு சொல்லும் கூட தமிழில் நான் எழுதிய கந்தரகோலம் கதையோடு ஒத்துப்போனது. இந்தப் பிழைப்பிற்கேன் ஆங்கிலமொழிபெயர்ப்புச் செய்ய வேண்டும்? ஆங்கிலேயர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும். எதற்காகக் கந்தரகோலம் புத்தகத்தினை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்புவதாகத் தெரிவிக்க வேண்டும், பின் எதற்காக தமிழில் நான் எழுதிய புத்தகத்தினைப் பார்த்து அட்டக்காப்பியடித்து ஆங்கில மொழிபெயர்ப்பென்று சொல்லித்திரிய வேண்டும்? இலக்கிய உலகம் முன்போல இல்லை.



பின்னர் கந்தரகோலம் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிடவேண்டாமென்று கூகுள் ட்ரான்ஸ்லேட்டரிடம் தெரிவித்துவிட்டேன். எனக்குக் காப்பியடிப்பதென்றாலே பிடிக்காது.



சரி; நான் சென்று மீதமுள்ள கடிதங்களுக்குப் பதில் எழுதுகிறேன். எல்லாமே ஒரே கேள்விதானே, அதற்கேன் விதவிதமாகப் பதிலளிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். 



சில நாட்களுக்கு முன்பாக கந்தரகோலம் வாசகர்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தேன். கூட்டத்திற்கு வந்திருந்த இருபது பேர்களிடம் ”உங்களின் பெயர் என்ன?” என்ற ஒரே கேள்வியைத்தான் கேட்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலினைச் சொன்னார்கள். இதிலிருந்து ஒரே கேள்விக்கு எண்ணற்ற பதில்கள் இருக்கமுடியும் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டேன். இதிலும் பாருங்கள், இரண்டு பயல்கள் தங்களின் பெயரினைச் செல்வக்குமார் என்று கூறினார்கள். பெயரைக் கூடவா காப்பியடிக்கிறார்கள்? உடனே இருவரையும் என் வாசகர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் என்ற முத்திரை குத்தி வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 


மேலும், கந்தரகோலம் புத்தகம் வெளியாவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள் விரைவில் சரியாக்கப்பட்டு, சடுதியில் இந்த வரலாற்று நாவல் வெளியாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்பும் நன்றியும்

மிகப் பிரபல ஆளுமை நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ.