Showing posts with label டெரர்கும்மி விருதுகள். Show all posts
Showing posts with label டெரர்கும்மி விருதுகள். Show all posts

Friday, December 16, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - போட்டி தேதி, விதிமுறைகள்.






அனைவருக்கும் வணக்கம்,

கடந்தவாரம் ஞாயிற்று கிழமை எங்கள் டெரர் கும்மியின் ஓராண்டு நிறைவை ஒட்டி நாங்கள் அறிவித்த டெரர் கும்மி விருதுகள் 2011 முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும்  ஆதரவிற்கு மிகவும் நன்றி. அதோடு  எங்கள் டெரர் கும்மி இரண்டாம் ஆண்டில் அடிவைப்பதற்கும் வாழ்த்துக்கள் கூறிய  சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.ஒருவித தயக்கத்துடன்தான் இந்த விருதுகள் அறிவிப்பை அறிவித்தோம்,ஆனால் நீங்கள் தந்த/தந்துகொண்டிருக்கும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்துகிறது. பல நண்பர்கள் கருத்துரைகளிலும், மின் மடலிலும் மற்றும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு தங்கள் யோசனைகளையும் சொன்னார்கள் அவர்களுக்கு எங்களது நன்றிகள். பலபேர் எங்களிடம் சொன்ன ஒரு யோசனை விருதுகளின் பிரிவை அதிகப்படுத்துவது,  அதோடுமட்டுமல்லாது  அவர்களே பல பிரிவுகளையும் சொன்னார்கள்.  கண்டிப்பாக அவற்றையெல்லாம் புறந்தள்ளாமல் எடுத்துக்கொள்கிறோம்.

எங்கள் ஆண்டு நிறைவையே நாங்கள் மறந்திருந்த வேளையில் திடீரென்று நண்பர்களால் நினைவுபடுத்தப்பட்டு அந்த சந்தோசத்தை உங்களோடு பகிரவே இதை ஏற்பாடு செய்தோம். கால அவகாசம் குறைவாக இருந்ததால் குறைவாகச் செய்தாலும் நிறைவாக செய்யவேண்டும் என்பதற்காக இந்த வருடம் இந்த பிரிவுகளை மட்டும் முடிவு செய்தோம். இனி வரும் ஆண்டுகளில் உங்கள் யோசனைப்படியே இன்னும் பிரமாண்டமாய் செய்வதற்கு எங்கள் முயற்சிகள் தொடரும் என்று இந்த வேளையில் சொல்லிக்கொள்கிறோம். போட்டிக்கு உங்கள் பதிவுகளை இணைப்பதற்கென்று எங்கள் நடுவர்களின் யோசனைகளுடன் சில விதிமுறைகளை வகுத்துள்ளோம். தகுதியான பதிவை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த விதிமுறைகள் என்ற உங்கள் புரிதலுக்கு நன்றி.

போட்டிக்கான விதிமுறைகள்.

1. போட்டிக்கு இணைக்கப்படும் பதிவுகள் முழுக்க முழுக்கத் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்ஆகவே தமிழில் எழுதும்  அனைத்துப்  பதிவர்களும்  இதில் கலந்துகொள்ளலாம்.

2. இணைக்கப்படும் பதிவுகள் 2011 ஜனவரி முதல் தேதியில் இருந்து 2011 டிசம்பர் 31 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் வெளிவந்ததாக இருக்கவேண்டும்.

3. இணைக்கப்படும் பதிவுகள் போட்டியாளர் தன் சொந்த வலைப்பதிவில் எழுதியதாக இருக்கவேண்டும், குழும பதிவுகளுக்கு அனுமதி இல்லை மேலும் குழுமமாக செயல்படும் தளத்தில் வெளிவந்த தனிநபர் பதிவுகளுக்கும் அனுமதி இல்லை.


4. ஒரு போட்டியாளர் ஒரு பிரிவுக்கு ஒரு பதிவு மட்டுமே இணைக்கலாம். அதிக பட்சமாக மூன்று  பிரிவுகளுக்கு தங்கள் பதிவுகளை இணைக்கலாம்.


5. போட்டியாளரின் விபரங்கள் நடுவர்களுக்கு கொடுக்கப்படமாட்டாது, பதிவுகள் மட்டுமே நடுவர்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.

6. இணைக்கப்பட்ட பதிவுகளை பற்றியோ அல்லது மற்ற பதிவுகள் பற்றிய விபரங்கள் அறியவோ டெரர் கும்மி உறுப்பினர்களுடன் எந்த தொடர்பும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

7. போட்டியாளர்கள் போட்டி சம்பந்தமாக நடுவர்கள் யாரையும் தொடர்பு கொண்டால் போட்டியில் இருந்து உடனடியாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போட்டியிலிருந்து நடுவர்களால் நீக்கப்படுவார்கள்.

8. போட்டியாளர்கள் தங்கள் சொந்தப் பதிவை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும், மற்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட பகிர்வுகள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.

9. ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 வலைப்பூக்களை மட்டுமே அனுமதிக்கபடும், வலைப்பூக்கள் நவம்பர் 30, 2011 க்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

10.  புதுமுக பதிவர் பிரிவிற்கு இணைக்கப்படும் வலைத்தளங்கள்  2011 ஆம் வருடம் தொடங்கப்பட்டதாக இருக்க வேண்டும்.  மேலும் சம்பந்தப்பட்ட பதிவர் வலையுலகிற்கும் புதியவராக இருத்தல் வேண்டும், ஏற்கனவே வலையுலகில் எழுதிகொண்டிருக்கும் பதிவர்கள் கடந்த வருடத்தில் புதிதாக ஒரு வலைத்தளம் உருவாக்கியிருந்தால் அது புதுமுக பதிவர் பிரிவில் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

11. புதுமுக பதிவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் 3 பொது பிரிவுகளில் தலா ஒரு பதிவையும் புதுமுகபிரிவில் தங்கள் சிறந்த மூன்று பதிவுகளையும் இணைக்க அனுமதிக்கப்படுகிறது. அதாவது புதுமுக பதிவர்கள் மட்டும் அதிகப்ட்சமாக 4 பிரிவுகளில் கலந்து கொள்ளலாம்.

12. இணைக்கும் பதிவுகளில் கூடுமானவரை தீவிர தனிமனித தாக்குதல், ஜாதி மத துவேசம், ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வது இவையெல்லாம் இல்லாமல் இருப்பது நலம்.

13. ஒருமுறை இணைத்த பதிவுகளை மறுபடியும் மாற்ற இயலாது. ஆகவே சரியான பிரிவில் சரியான பதிவை இணைத்துவிடுங்கள்.

14. போட்டிக்கு இணைப்பதற்கான சுட்டி டிசம்பர் 26ம் தேதி உங்களிடம் அறிமுகப்படுத்தப்படும், அன்றிலிருந்து ஜனவரி 6 ம் தேதி வரை இணைக்கப்படும் பதிவுகள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

15. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு புத்தக கூப்பனாக மட்டுமே வழங்கப்படும், ஒவ்வொரு பிரிவுக்கும் முதல் பரிசு ரூ.600 - க்கான கூப்பனும், இரண்டாம் பரிசு ரூ.400 - க்கான கூப்பனும் தபாலில் அனுப்பப்படும்.  ஹால் ஆஃப் ஃபேம் பதிவருக்கு மட்டும் ரூ.1000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். வெற்றிபெறும் வெளிநாட்டில் உள்ள பதிவர்கள்  கண்டிப்பாக உள்ளூர் முகவரி தரவேண்டும். புத்தகங்கள் எப்படி வாங்குவது என்பதை முடிவு அறிவித்தவுடன் சொல்லுகிறோம்.

16. போட்டி சம்பந்தமான எந்த முடிவையும் முன்னறிவிப்பின்றி மாற்றவோ நிறுத்தவோ டெரர்கும்மிக்கு முழு அதிகாரம் உள்ளது. 

இந்த வேளையில்மற்றொன்றையும்  சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம், இந்த போட்டியில் நடுவர்களாக செயல்படும் யாரும் போட்டிக்கு தங்கள் பதிவை இணைக்கமாட்டார்கள். அனைத்து நடுவர்களுக்கும் மீண்டும் ஒருமுறை இங்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம். விதிமுறைகளில் அல்லது போட்டி சம்பந்தமான ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கருத்துரையிலோ அல்லது terrorkummi@gmail.com என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு  தொடர்புகொள்ளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு விரைவில் பதிவுகளை  இணைப்பதற்கான அறிவிப்போடு உங்களை சந்திக்கிறோம்.