Saturday, November 29, 2014

கந்தரகோலம் என்னும் மாய யதார்த்தம்

காலையில் டியூஸ்லேண்ட்டிலிருந்து (ஜெர்மனி) நண்பன் அழைத்திருந்தான். சுத்த ஜெர்மானியன். தமிழ் தெரியாது. டியூஸ் பர்க் ( University of Duisburg- Essen) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நண்பர்களானோம். ஒரே சிந்தனையுடைய மனிதர்கள் ஒரே மொழியினையோ அல்லது இனம், மதம் முதலானவற்றைச் சார்ந்திருக்க வேண்டுமென்று எந்த விதியும் இல்லையென்பது இவனையும் என்னையும் பார்த்தால் புரிந்துவிடும். மறக்கமுடியாத நண்பன். 

என்னுடன் படித்த மற்ற ஜெர்மானியர்களைப் போலல்ல இவன். கம்யூனிசம் பேசுவான். உலக இலக்கியங்களைத் தேடித்தேடிப் படிப்பான். நானும் கூட சாரு மற்றும் எஸ்.ரா ஆகியோரை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். ஜீரோ டிகிரி நாவலைப் படித்துவிட்டு வாழ்விலே ஒருமுறையேனும் சாருவைப் பார்த்தே தீருவதென்று தீர்மானித்திருப்பதாகக் கூறியிருக்கிறான். தினமும் என்னவெல்லாமோ பேசுவோம். ஜெர்மனியிலிருந்த அந்த இரண்டு வருடங்களை மறக்க முடியாத நாட்களாக மாற்றியவன் இவன் ஒருவனே. இப்பொழுதும் கூட வாரம் ஒருமுறையேனும் தொலைபேசிவிடுவோம். நான் இன்னமும் ஜெர்மன் கற்றுக்கொள்ளவில்லை. போலவே அவனும் தமிழ். ஆங்கிலத்தில்தான் உரையாடல் நடக்கும்.



சரி, காலையில் தொலைபேசிய விசயத்திற்கு வரலாம். கடந்தவாரத்தில் ஆளுமை நாசோவின் கந்தரகோலம் புத்தகம் டச்சு மொழியில் வெளியாகியிருந்தது. வழக்கம்போலவே அவர் தனது ஆங்கிலப் பக்கத்தில் மட்டும் இதனைப் பகிர்ந்திருந்தார். தமிழில் கந்தரகோலம் புத்தகம் விர்ச்சுவல் டுபாக்கூராகப் பார்க்கப்பட்டுவருவது குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை. நீங்கள் ஏன் உண்மையைச் சொல்லக்கூடாது என்று பலமுறை அவரிடம் கேட்டிருக்கிறேன். இல்லை, கந்தரகோலம் என்ற புத்தகமே உருவாகவில்லை என்ற மாயத்தோற்றத்தை (இதை மாய யதார்த்தம் எனவும்) உருவாக்குவதற்கு ஒரு காரணம் இருப்பதாகத் தெரிவித்தார். என்ன காரணமென்று எனக்கு இதுவரையிலும் புரியவில்லை. ஆனால், இங்கே தமிழ் வலையுலகில் கந்தரகோலம் புத்தகத்தினைப் பற்றி அனேகம் பேர் இப்படி ஒரு புத்தகமே வராது என்ற நிலையில் அதனைக் கிண்டலடித்து வருகின்றனர். அவர் வழியையே நானும் பின்பற்றி அந்தக் கிண்டல்களை விட்டு விலகிப் போய்விடுவதுண்டு. இப்பொழுது அதல்ல பிரச்சினை. 

ஜெர்மன் மொழியில் வெளியாகியிருக்கும் கந்தரகோலம் புத்தகம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பினை உருவாக்கிவருவதாகவும், இந்த வார இறுதிக்குள்ளாக ஜெர்மன் பெஸ்ட் செல்லரில் முதல் இடத்தினைப் பிடித்துவிடும் என்று அவன் கூறியிருந்தான். மேலும் தான் முதல் ஆளாக அந்தப் புத்தகத்தினை வாங்கி வாசித்துவிட்டதாகவும், ஆளுமை நாசோவின் புகைப்படம் கிடைக்குமா என்றும் கேட்டிருந்தான். அல்லது அவர் தனக்கு ஒரு "ஹாய்" சொன்னாலும் பிறப்பின் பலனை அடைந்துவிடுவேன் என்றும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். என் உயிர் நண்பன்தான். ஆனால், என்னால் அதனை ஏற்பாடு செய்துதரமுடியாது என்று மறுத்துவிட்டேன். 

நான் மறுத்தாலும் அவன் வேறுவிதமாகச் சந்தோசப்பட்டான். அதாவது ஆளுமை நாசோவை நான் ஓரிரு முறைகள் நேரில் பார்த்திருக்கிறேன். ஆளுமையை நேரில் பார்த்த ஒருவன் தனக்கு நண்பனாக இருக்கிறானே என்பது அவனது சந்தோசமாக இருந்தது. எனக்கும் மகிழ்ச்சியே.

அவன் கூறியதில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் கந்தரகோலம் புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்புரிமை மிகப் பெரும் விலைக்கு விற்கப்படவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கலை, இலக்கியம் போன்றவற்றில் நுண்மையான பார்வையைக் கொண்டவர்களான பிரான்சு தேசத்தில் கந்தரகோலத்திற்கென தனியொரு நினைவுச் சின்னமும், மணி மண்டபமும் அமைக்கப்படவுள்ளதாகவும், அதன் திறப்புவிழாவிற்கு ஆளுமை அழைக்கப்படவிருப்பதாகவும் கூறினான். மேலும் நோபல், புக்கர் பரிசுகளுக்கு மேலாக கந்தரகோலம் அல்லது ஆளுமையின் பெயரில் விருதுகளை ஏற்பாடு செய்ய உலக நாடுகளை ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஒரு பெரும் சாதனையைச் செய்துவிட்டு, இன்னமும் கந்தரகோலம் எழுதப்படவில்லை, சிலேவில் வெளியிடவுள்ளேன் என்றெல்லாம் ஒருபக்கம் கிண்டல் நிலைத்தகவல்களையும் பகிர்ந்துகொண்டு, மிகச் சாதாரணனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஆளுமை நாசோவை என்னவென்பது?

Hüte weg zu Ihnen AALUMAI :))) Dank für hier!