குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது. அதைக் கண்டதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். வெளியேறிய குண்டுகள் கல்லை மிஸ் செய்து தாண்டிச் சென்றன. அதற்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நாசா இயக்குனர் மோர்கன் கைது செய்யப்பட்டிருப்பதாக அவசரத் தகவல் வந்தது. அனைவரும் அதிர்ந்தனர்.
வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் மீட்டிங் ஹாலில் பெரும் கூட்டம் குழுமி இருந்தது. பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஜனாதிபதிக்காக காத்திருந்தனர். அங்கே பெரும் பரபரப்பு நிலவியது. விண்வெளியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் நடப்பதாக அதற்குள் தகவல் பரவி இருந்தது. ஜனாதிபதியும் வந்து சீனாவால் பூமிக்கு எப்படி ஆபத்து வந்தது என்றும் பூமியைக் காப்பாற்ற அமெரிக்கா எடுத்த முயற்சிகளை பரபரப்பாக விளக்கிக் கொண்டிருந்தார். சரியான தொழில்நுட்பம் இல்லாமல் சீனர்கள் தவறான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். சீனர்கள் இனி இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தார்.உண்மையில் சீனா ஒரு விண்கல்லையே ஆக்கிரமித்து இயக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பது கண்டு அமெரிக்க அரசிற்கு அச்சத்தைத் தோற்றுவித்திருந்தது.
சீனர்கள் அஸ்டீராய்டு ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தனர். உலோகத்தாதுக்கள் பற்றாக்குறைக்கு அங்கே தீர்வு கிடைக்கும் என்று நம்பினர். அதற்காகவே செய்யப்பட்ட விசேஷ செயற்கைக் கோள்கள் செவ்வாய்க்கருகே இருக்கும் அஸ்டீராய்டு படலத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களின் இரண்டாண்டு கால தேடுதலின் விளைவாகவே இந்த TF 5 என்ற விண்கல் கண்டறியப்பட்டது. அந்தக்கல் உலோகக் கலவைகளால் ஆனது. அதில் இருந்து சாம்பிள் எடுத்து பரிசோதித்துப் பார்த்த சீன விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் துள்ளினர். அந்த உலோகக் கலவை சாதாரண வெப்ப நிலையிலேயே சூப்பர் கண்டக்டிவிட்டி (Super Conductivity) என்ற தன்மையைக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.
சூப்பர் கண்டக்டிவிட்டி உள்ள பொருள்கள் மின்சாரத்தை எந்த தடையும் இல்லாமல் கடத்தும் தன்மை வாய்ந்தவை. அதாவது அந்த பொருட்களில் மின்சாரத்தைச் செலுத்தினால் அது 10 லட்சம் வருடங்களுக்கும் மேல் ஆற்றல் குறையாமல் அப்படியே இருக்கும். இயல்பாக உலோகங்கள் அத்தன்மைய அடைய அவற்றை குறைந்தது மைனஸ் 100 டிகிரி அளவுக்கு குளிர்வித்து அப்படியே வைத்திருக்க வேண்டும். எனவே அவற்றைப் பயன்படுத்துவது காஸ்ட்லியாகவும் மிகச் சிரமமானதாகவும் இருக்கிறது. சாதாரண வெப்பநிலையில் இயங்கும் சூப்பர் கண்டக்டர்களை கண்டறியும் முயற்சியிலும் இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது அந்த விண்கல் முழுவதுமே அத்தகைய சூப்பர் கண்டக்டிங் பொருளாக இருப்பதைக் கண்டறிந்த சீன விஞ்ஞானிகள் தங்களுக்கு ஒரு மிகப் பெரும் ஜாக்பாட் அடித்திருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
அந்தக் கல்லை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்கள். சக்திவாய்ந்த மூன்று ராக்கெட்டுகளை பொருத்தி அந்தக் கல்லை பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பூமியின் அருகிலேயே சூரியனைச் சுற்றி வரச் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் அதில் பிழை ஏற்பட்டு கல் எதிர்பாராத விதமாக பூமியை நோக்கிய பாதையில் நுழைந்துவிட்டது. உடனடியாக அதன் பாதையை மாற்ற முயற்சித்தால் அது செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து செவ்வாய்க்குள் விழுந்துவிடும் அபாயம் இருந்தது. அதனால் அக்கல் செவ்வாயை தாண்டி வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள். அதற்கிடையில் அமெரிக்கா நடவடிக்கைகளை தொடங்கி இருந்தது.
சீனா உடனே நாசா இயக்குனரை தொடர்பு கொண்டு அமெரிக்க தாக்குதலை தவிர்க்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் அமெரிக்கா தன்னிடம் இருக்கும் ரகசிய அணு ஆயுதங்களில் பெருமளவை பயன்படுத்த போவதை அறிந்து கல்லை கடைசி நேரத்தில் பாதையில் இருந்து நகர்த்துவது என்று முடிவு அது போலவே செய்து முடித்தார்கள். அமெரிக்கா தன்னிடம் ரகசியமாக வைத்திருந்த அணு குண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்டதும் இல்லாமல், சீனாதான் இதற்கு காரணம் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள்.
மோர்கன் சீனாவின் கருத்தை ஏற்று தாக்குதலை தள்ளிப் போடலாம் என்று சொன்னபோதே லீனியர் ஆய்வக இயக்குனர் க்ரெய்ட்டனுக்கு சந்தேகம் வந்து அதை ரகசியமாக ஜனாதிபதியிடம் தெரிவித்து இருந்தார். அந்த நிமிடத்தில் இருந்து மோர்கன் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படார். சீன உளவு நிறுவனத்தில் தொடர்பு கொண்டதை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்து ஜனாதிபதியிடம் சொல்லிவிட்டது. அதற்கிடையில் செவ்வாயில் இயங்கிவரும் மார்ஸ் லேப் விண்கல்லில் இருந்து வரும் ரேடியோ சமிக்ஞைகளை ட்ராக் செய்து அனுப்பி விட்டது. உடனடியாக மோர்கன் ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்.
ஆனால் மோர்கனுக்கு முழு தகவலும் தெரிந்திருக்கவில்லை. சீனா அவரிடம் கல்மீதான தாக்குதலை தவிர்க்க உதவுமாறு மட்டுமே கேட்டிருந்தது. அதனால் எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்காவிற்குத் தெரியாமலே போய்விட்டது. அவர்கள் சீனா ஒருவகையான தாக்குதலுக்கு முயற்சிக்கிறதோ என்றும் நினைத்தார்கள். இனி சீனர்கள் அக்கல்லில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்து வந்து உலகெங்கும் விற்பனை செய்வார்கள். அப்போதுதான் எல்லாருக்கும் அந்தக் கல்லின் ரகசியம் தெரிய வரும். ஒருவேளை அப்போது அமெரிக்காவும் அந்தக் கல்லை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம்.
முற்றும்…
தொடர்ந்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
தொடர்ந்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!