Tuesday, October 4, 2011

ஜாதிக் கட்சித் தலைவர் செல்வா

செல்வாவுக்கு திடீர் என்று தான் பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது. திடீரெனப் பிரபலமாக என்ன செய்யலாம் என அவர் நண்பரிடம் ஆலோசனை கேட்டார். எந்த வித முதலீடும் இல்லாம திடீர் பிரபலம் ஆகணும்னா நீ ஜாதிக் கட்சியில் தான் சேரணும். அங்கிருந்து கொஞ்ச நாள்ல நீ எம்எல்ஏ, எம்பி என முன்னேறிப் போயிட்டே இருக்கலாம் என்று செல்வாவின் நண்பர் அறிவுரை வழங்கினார்.

நண்பரின் ஆலோசனைப் படி ஜாதிக் கட்சியில் சேரலாம் என்று முடிவு செய்த செல்வா, அப்போது பிரபலமாய் இருந்த ஒரு ஜாதிக் கட்சியின் அலுவலகத்திற்கு சென்றார். அந்த அலுவலகத்தில் இருந்த ஒரு கட்சி உறுப்பினரிடம் தான் வந்த நோக்கத்தை செல்வா கூறினார். அவரிடம் சில அத்தியாவசிய தகவல்களைக் கேட்ட அந்த கட்சி உறுப்பினர், கடைசியாய் உன் ஜாதி என்ன என்ற ஒரு முக்கிய கேள்வியைக் கேட்டார்.



அதுவரை சரியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்த செல்வா இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் தடுமாறினார். சமாளிப்பாக என்னோட ஜாதிப் பேர் தெரியாதுங்க. ஆனால் நான் உங்க ஜாதிக்கு மாறிக்கிறேன் என்று செல்வா சொன்னார். அதற்கு கட்சிக்காரர் ஜாதியெல்லாம் மாற முடியாது. ஜாதி என்பது பிறப்பால வருவது என்று சொல்லி செல்வாவை அனுப்பிவிட்டார்.


ஜாதி  என்பது பிறப்பால் வருவது என்பதைக் கேட்ட செல்வா ஒரு புத்திசாலித்தனமான முடிவெடுத்தார். தான் பிறந்த மருத்துவமனைக்கு சென்று, அவர் பிறந்த போது பணியாற்றிய மருத்துவரை சந்தித்தார். அந்த ஜாதிக் கட்சியின் பெயரைச் சொல்லி தன்னை அந்த ஜாதியில் மீண்டும் ஒருமுறை பிறக்கச் செய்யுங்கள் என்று மருத்துவரிடம் கேட்டார்.அதற்கு பின்பு அந்த மருத்துவர், மருத்துவ தொழிலை விட்டு புண்ணாக்கு விற்க சென்று விட்டார் என்பதை இங்கே சொல்ல வேண்டுமா என்ன?