Friday, September 30, 2011

பூமியைத் தேடி... (பாகம் 8)







குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது. அதைக் கண்டதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். வெளியேறிய குண்டுகள் கல்லை மிஸ் செய்து தாண்டிச் சென்றன. அதற்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நாசா இயக்குனர் மோர்கன் கைது செய்யப்பட்டிருப்பதாக அவசரத் தகவல் வந்தது. அனைவரும் அதிர்ந்தனர். 

வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் மீட்டிங் ஹாலில் பெரும் கூட்டம் குழுமி இருந்தது. பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஜனாதிபதிக்காக காத்திருந்தனர். அங்கே பெரும் பரபரப்பு நிலவியது. விண்வெளியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் நடப்பதாக அதற்குள் தகவல் பரவி இருந்தது. ஜனாதிபதியும் வந்து சீனாவால் பூமிக்கு எப்படி ஆபத்து வந்தது என்றும் பூமியைக் காப்பாற்ற அமெரிக்கா எடுத்த முயற்சிகளை பரபரப்பாக விளக்கிக் கொண்டிருந்தார். சரியான தொழில்நுட்பம் இல்லாமல் சீனர்கள் தவறான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். சீனர்கள் இனி இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தார்.உண்மையில் சீனா ஒரு விண்கல்லையே ஆக்கிரமித்து இயக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பது கண்டு அமெரிக்க அரசிற்கு அச்சத்தைத் தோற்றுவித்திருந்தது. 



சீனர்கள் அஸ்டீராய்டு ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தனர். உலோகத்தாதுக்கள் பற்றாக்குறைக்கு அங்கே தீர்வு கிடைக்கும் என்று நம்பினர். அதற்காகவே செய்யப்பட்ட விசேஷ செயற்கைக் கோள்கள் செவ்வாய்க்கருகே இருக்கும் அஸ்டீராய்டு படலத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களின் இரண்டாண்டு கால தேடுதலின் விளைவாகவே இந்த TF 5 என்ற விண்கல் கண்டறியப்பட்டது. அந்தக்கல் உலோகக் கலவைகளால் ஆனது. அதில் இருந்து சாம்பிள் எடுத்து பரிசோதித்துப் பார்த்த சீன விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் துள்ளினர். அந்த உலோகக் கலவை சாதாரண வெப்ப நிலையிலேயே சூப்பர் கண்டக்டிவிட்டி (Super Conductivity) என்ற தன்மையைக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

சூப்பர் கண்டக்டிவிட்டி உள்ள பொருள்கள் மின்சாரத்தை எந்த தடையும் இல்லாமல் கடத்தும் தன்மை வாய்ந்தவை. அதாவது அந்த பொருட்களில் மின்சாரத்தைச் செலுத்தினால் அது 10 லட்சம் வருடங்களுக்கும் மேல் ஆற்றல் குறையாமல் அப்படியே இருக்கும். இயல்பாக உலோகங்கள் அத்தன்மைய அடைய அவற்றை குறைந்தது மைனஸ் 100 டிகிரி அளவுக்கு குளிர்வித்து அப்படியே வைத்திருக்க வேண்டும். எனவே அவற்றைப் பயன்படுத்துவது காஸ்ட்லியாகவும் மிகச் சிரமமானதாகவும் இருக்கிறது. சாதாரண வெப்பநிலையில் இயங்கும் சூப்பர் கண்டக்டர்களை கண்டறியும் முயற்சியிலும் இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது அந்த விண்கல் முழுவதுமே அத்தகைய சூப்பர் கண்டக்டிங் பொருளாக இருப்பதைக் கண்டறிந்த சீன விஞ்ஞானிகள் தங்களுக்கு ஒரு மிகப் பெரும் ஜாக்பாட் அடித்திருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.

அந்தக் கல்லை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்கள். சக்திவாய்ந்த மூன்று ராக்கெட்டுகளை பொருத்தி அந்தக் கல்லை பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பூமியின் அருகிலேயே சூரியனைச் சுற்றி வரச் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் அதில் பிழை ஏற்பட்டு கல் எதிர்பாராத விதமாக பூமியை நோக்கிய பாதையில் நுழைந்துவிட்டது. உடனடியாக அதன் பாதையை மாற்ற முயற்சித்தால் அது செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து செவ்வாய்க்குள் விழுந்துவிடும் அபாயம் இருந்தது. அதனால் அக்கல் செவ்வாயை தாண்டி வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள். அதற்கிடையில் அமெரிக்கா நடவடிக்கைகளை தொடங்கி இருந்தது.

சீனா உடனே நாசா இயக்குனரை தொடர்பு கொண்டு அமெரிக்க தாக்குதலை தவிர்க்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் அமெரிக்கா தன்னிடம் இருக்கும் ரகசிய அணு ஆயுதங்களில் பெருமளவை பயன்படுத்த போவதை அறிந்து கல்லை கடைசி நேரத்தில் பாதையில் இருந்து நகர்த்துவது என்று முடிவு அது போலவே செய்து முடித்தார்கள். அமெரிக்கா தன்னிடம் ரகசியமாக வைத்திருந்த அணு குண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்டதும் இல்லாமல், சீனாதான் இதற்கு காரணம் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். 

மோர்கன் சீனாவின் கருத்தை ஏற்று தாக்குதலை தள்ளிப் போடலாம் என்று சொன்னபோதே லீனியர் ஆய்வக இயக்குனர் க்ரெய்ட்டனுக்கு சந்தேகம் வந்து அதை ரகசியமாக ஜனாதிபதியிடம் தெரிவித்து இருந்தார். அந்த நிமிடத்தில் இருந்து மோர்கன் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படார். சீன உளவு நிறுவனத்தில் தொடர்பு கொண்டதை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்து ஜனாதிபதியிடம் சொல்லிவிட்டது. அதற்கிடையில் செவ்வாயில் இயங்கிவரும் மார்ஸ் லேப் விண்கல்லில் இருந்து வரும் ரேடியோ சமிக்ஞைகளை ட்ராக் செய்து அனுப்பி விட்டது. உடனடியாக மோர்கன் ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்.

ஆனால் மோர்கனுக்கு முழு தகவலும் தெரிந்திருக்கவில்லை. சீனா அவரிடம் கல்மீதான தாக்குதலை தவிர்க்க உதவுமாறு மட்டுமே கேட்டிருந்தது. அதனால் எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்காவிற்குத் தெரியாமலே போய்விட்டது. அவர்கள் சீனா ஒருவகையான தாக்குதலுக்கு முயற்சிக்கிறதோ என்றும் நினைத்தார்கள். இனி சீனர்கள் அக்கல்லில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்து வந்து உலகெங்கும் விற்பனை செய்வார்கள். அப்போதுதான் எல்லாருக்கும் அந்தக் கல்லின் ரகசியம் தெரிய வரும். ஒருவேளை அப்போது அமெரிக்காவும் அந்தக் கல்லை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம். 


முற்றும்…


தொடர்ந்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

36 comments:

Unknown said...

நல்ல fiction கதை அண்ணா ரொம்ப நல்லாவே இருந்தது. சொல்லுறதுக்கு இல்ல நிஜமாவே இப்பிடி ஏதாவது ஒரு கல்லு இருக்கத்தான் போகுது...

அருண் பிரசாத் said...

இப்போ அந்த கல்லு எங்க தான் போச்சு?

வைகை said...

அருண் பிரசாத் said...
இப்போ அந்த கல்லு எங்க தான் போச்சு///


அதெல்லாம் தூளாக்கிதான் அரிசில கலந்து அனுப்புறாங்க :)

NaSo said...

பன்னிக்குட்டி சார், இன்னும் ஒரு பாகம் போட்டு, சீனா ஆராய்ச்சி பற்றி மேலும் விளக்கியிருக்கலாம்.

வைகை said...

மொத்தமா பி.டி.எஃப் பண்ணி போடுங்களேன்.. நாங்களும் எப்பதான் படிக்கிறது? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அருண் பிரசாத் said...
இப்போ அந்த கல்லு எங்க தான் போச்சு?/////

?அந்தக் கல்லை பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பூமியின் அருகிலேயே சூரியனைச் சுற்றி வரச் செய்யலாம் என முடிவு செய்தார்கள்./

தினேஷ்குமார் said...

அனேகமா அந்த கல்லு இருக்குமிடம் கவுண்டருக்கே தெரிந்த ரகசியம் கல்லு வேண்டும்னு கவுண்டர யாராவது கிட்நாப் பண்ண போறாங்க

செல்வா said...

எதிர்பாராத முடிவு அண்ணா .. ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சில அறிவியல் விளக்கங்களும் அருமை!

Mohamed Faaique said...

பொதுவா, தொடர் கதைல்களில் கடைசி அங்கம் படுத்துவிடும்.. ஆனால் இந்த பகுதி ராக்ஸ்....

க்ளைமேக்ஸ் சூப்பர்...

Mohamed Faaique said...

பூமியை காப்பாற்றிய பன்னி குட்டி ராமசாமி`க்கு கோல்டன் குளோப் விருது பரிந்துரைக்கப் படிகிறது..

K.s.s.Rajh said...

என்ன தலைவரே இப்படி அதிரடியா முடிச்சுப்புட்டீங்க..நான் பதிவை வாசிச்சு முடிச்சதும் முற்றும் என்பதை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டேன்..

K.s.s.Rajh said...

நல்ல ஒரு அறிவியல் கதை தலைவா..சூப்பர்..ஆனால் விரைவாக முடிந்துவிட்டதாக தோனுது...

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா இப்பிடி பொட்டுன்னு முடிச்சிட்டீங்க???

Unknown said...

அட்டகாசமான தொடர் மாப்ள...அப்படியாவது அணு(அனு அல்ல!) ஆயுதம் ஒழியுமா...இந்தக்கல்லு இம்புட்டு பவரா....நம்ம பவர் ஸ்டார் போல......தொடரும்னு நெனச்சேன்...!

Unknown said...

படித்து முடியும் வரை இந்தப்பகுதி இறுதிப்பாகம் எனத் தோன்றவில்லை..செம்ம ஸ்பீடா போச்சு!
வீக் எண்ட்ல முதல்ல இருந்து வாசிக்கணும்...ஆமா இதை காமிக்ஸ் வடிவத்தில எழுதினா நல்லா இருக்கும்ல!

சக்தி கல்வி மையம் said...

அறிவியல் விளக்கங்களுடன் ஒரு கதை..
நன்றாக இருந்தது...

இதப் போலவே இன்னும் கதைகளை எழுத வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

கடைசில சீனாதான் வில்லனா?
நல்லா இருந்துச்சு கதை. கிளைமேக்ஸ் எப்டி இருக்குமோன்னு நினைச்சேன் சூப்பரா முடிச்சிட்டீங்க!

வெளங்காதவன்™ said...

பன்னி...

நான் அப்பவே சொல்லல?

செங்கோவி said...

சூப்பர் ஃபாஸ்ட் ஸ்டோரி..

ஏன்ணே பட்டுனு முடிச்சிட்டீங்க?

செங்கோவி said...

ஒரு கல் - அதன் மீதான சீன ஆதிக்கம் - இயற்கையால் வெளிப்பட்ட தன்மை - அமெரிக்காவின் உலகைக் காக்கும் பெரியண்ணன் மனப்பான்மை - அதனாலயே அமெரிக்காவிற்கு விழுந்த ஆப்பு :

அட்டகாசமா பின்னியிருக்கீங்க. வாழ்த்துகள்.

அஞ்சா சிங்கம் said...

நானும் வேற்று கிரக வாசியாக இருக்கும்ன்னு நினைச்சி ஏமாந்துட்டேன் ...........

விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதும் ரஷியர்கள்தான் டாப்பு ....
சீனர்கள் அந்த அளவிற்கு வருவார்கள் என்று நம்பமுடியவில்லை ...
எப்போதும் குறைந்த தரம். குறைந்த விலை .என்று இருப்பவர்கள் ..
விண்வெளி ஆராய்ச்சிக்கு நம்மை விட குறைந்த அளவில் நிதி ஒதுக்குவார்கள் ....

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு சிறந்த தொடர்கதைக்கான முக்கியத்தகுதியே . அடடா.. அதுக்குள்ள முடிச்சுட்டாரே என வாசகனை நினைக்க வைப்பதில் தான் இருக்கிறது.. அந்த வகையில் செம சக்ஸஸ்.. இதையே இன்னும் நகசு வேலை செய்து 10 அத்தியாயங்கள் ஆக்கி நாவலாக வெளியிடவும்

குறையொன்றுமில்லை. said...

அறிவியல் விளக்கங்கள் நல்லா சொல்லி இருந்தீங்க. அதுக்குள்ள முற்றும் சொல்லிட்டீங்களே.அப்போ அந்தக்கல்லு எஙக?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...
கடைசில சீனாதான் வில்லனா?///



சீனா சார் தான் வில்லனா ?

எஸ்.கே said...

//சீனா சார் தான் வில்லனா ?//

ஏன் இப்படி? உங்களுக்கு அவர் மேல ஏதாவது கோபம் இருக்கா ரமேஷ்?:-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

சி பி சொன்னது போல நாவலாக வெளியிடுங்கள். சிறப்பாக இருக்கும்

Anonymous said...

இந்த பாகம் வாசிக்கும் போதே நினைத்தேன்...ஏதோ நடக்கப்போகுதுன்னு...
முற்றும்.

Short n Sweet.

எல்லாரையும் கல்லை கள் ரேஞ்சுக்கு பேச வைத்ததுக்கு நன்றி நண்பரே...

Today's Buzz:
பெரியண்ணன் Space station
மூடி சரியா சீனா சூப்பர் பவர் ஆகையில் 2020 ல சீனா தொறக்குறதா கேள்விப்பட்டேன்...

மாய உலகம் said...

அந்த கல்லு வித்தா முத ஆர்டர் நம்பளுதே... அருமையான் அறிவியல் ஆராய்ச்சி கதை...

K said...

கதை சூப்பருன்னே! கிளைமேக்ஸ் அட்டகாசம்! விறுவிறுப்பும் கூட!

நிஜமாவே பூமியில் முடிந்துபோகக் கூடிய தாதுப்பொருட்களை விண்கற்களில் இருந்து பெறலாம் என்கிற தகவல் நம்பிக்கையளிக்கிறது!

இப்படியே வேற்ற்கி கிரகங்களில் இருந்து வேறு பொருட்களையும் பூமிக்கு கொண்டுவர வாய்ப்பு உண்டு இல்லையா?

மேலும், இத்தொடரில் ஒரு உள்குத்து இருப்பதாக எனக்குப்படுகிறது! அதாவது அமெரிக்கா, ஏனைய நாடுகள் மீது, ஏதோ ஒரு சாட்டைச் சொல்லி, போர் செய்து , அந்த நாட்டு வளங்களை தனது நாட்டுக்கு கொண்டுவருவது வழக்கமாகும்!

அதாவது சுரண்டல் வேலை இது!

“ நீ எங்களைச் சுரண்டினால், நாங்கள் விண்வெளியில் இருந்தே பொருட்களைக் கொண்டு வருவோம்’னு சொல்லாம சொல்லியிருக்கீங்க!

இதில் சீனாவை நீங்கள் தேர்ந்தெடுத்தது எனக்கு ஆச்சரியம் இல்லை என்றாலும், ஒரு அரபு நாட்டை தேர்ந்தெடுத்திருந்தால்......... வேணாம்! இது இப்படியே இருக்கட்டும்!

வாழ்த்துக்கள்! தல! அருமையான படைப்புக்கு!!!!!!

பொன் மாலை பொழுது said...

தலீவரு நெறையா சயின்ஸ் பிக்சஹ்ன் வீடியோ பாகிறார் போல..நடக்கட்டும்.

Kadir said...

தல, சீனாவின் நிர்பந்தம் காரணமாக டக்கென்று முடித்து விட்டீர்கள் போல!!!

கதிர்

arrattaiarangam said...
This comment has been removed by the author.
arrattaiarangam said...

ஹலோ ராமசாமி சார்,
கதை கதை மாதிரியே படிக்க முடியலை....அரம்பத்தில் ஆரம்பிச்ச டெம்போ ..கடைசி வரைக்கும்
அப்படியே மெய்ன்டேன் செய்தீங்க.....சூப்பர்.....
நெறைய ஆராய்ச்சியில் இருக்குற விஷயத்தை கொண்டு வந்ததிற்கு நன்றி.....
இன்னைக்குதான் நான் படிக்க ஆரம்பித்து .....எட்டு பாகம் படிக்கிற வரை இடத்த விட்டு
நகர வில்லை..........கலக்கிடீங்க சார்.................

RAMA RAVI (RAMVI) said...

மிக அருமையான அறிவியல் ஆய்வு கதை. அழகான முடிவு.சீனவின் ஆராய்ச்சி பற்றி இன்னும் சற்று விவரம் கொடுத்திருக்கலாம்.(மன்னிக்கவும்)

Madhavan Srinivasagopalan said...

நல்லா வந்திருக்கு....
ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..

Ashok said...

Really nice story.......