Friday, September 30, 2011

பூமியைத் தேடி... (பாகம் 8)







குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது. அதைக் கண்டதும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் பரபரப்படைந்தனர். வெளியேறிய குண்டுகள் கல்லை மிஸ் செய்து தாண்டிச் சென்றன. அதற்கிடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நாசா இயக்குனர் மோர்கன் கைது செய்யப்பட்டிருப்பதாக அவசரத் தகவல் வந்தது. அனைவரும் அதிர்ந்தனர். 

வெள்ளை மாளிகையின் பத்திரிக்கையாளர் மீட்டிங் ஹாலில் பெரும் கூட்டம் குழுமி இருந்தது. பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஜனாதிபதிக்காக காத்திருந்தனர். அங்கே பெரும் பரபரப்பு நிலவியது. விண்வெளியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் போர் நடப்பதாக அதற்குள் தகவல் பரவி இருந்தது. ஜனாதிபதியும் வந்து சீனாவால் பூமிக்கு எப்படி ஆபத்து வந்தது என்றும் பூமியைக் காப்பாற்ற அமெரிக்கா எடுத்த முயற்சிகளை பரபரப்பாக விளக்கிக் கொண்டிருந்தார். சரியான தொழில்நுட்பம் இல்லாமல் சீனர்கள் தவறான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார். சீனர்கள் இனி இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தார்.உண்மையில் சீனா ஒரு விண்கல்லையே ஆக்கிரமித்து இயக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பது கண்டு அமெரிக்க அரசிற்கு அச்சத்தைத் தோற்றுவித்திருந்தது. 



சீனர்கள் அஸ்டீராய்டு ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வந்தனர். உலோகத்தாதுக்கள் பற்றாக்குறைக்கு அங்கே தீர்வு கிடைக்கும் என்று நம்பினர். அதற்காகவே செய்யப்பட்ட விசேஷ செயற்கைக் கோள்கள் செவ்வாய்க்கருகே இருக்கும் அஸ்டீராய்டு படலத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்களின் இரண்டாண்டு கால தேடுதலின் விளைவாகவே இந்த TF 5 என்ற விண்கல் கண்டறியப்பட்டது. அந்தக்கல் உலோகக் கலவைகளால் ஆனது. அதில் இருந்து சாம்பிள் எடுத்து பரிசோதித்துப் பார்த்த சீன விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் துள்ளினர். அந்த உலோகக் கலவை சாதாரண வெப்ப நிலையிலேயே சூப்பர் கண்டக்டிவிட்டி (Super Conductivity) என்ற தன்மையைக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

சூப்பர் கண்டக்டிவிட்டி உள்ள பொருள்கள் மின்சாரத்தை எந்த தடையும் இல்லாமல் கடத்தும் தன்மை வாய்ந்தவை. அதாவது அந்த பொருட்களில் மின்சாரத்தைச் செலுத்தினால் அது 10 லட்சம் வருடங்களுக்கும் மேல் ஆற்றல் குறையாமல் அப்படியே இருக்கும். இயல்பாக உலோகங்கள் அத்தன்மைய அடைய அவற்றை குறைந்தது மைனஸ் 100 டிகிரி அளவுக்கு குளிர்வித்து அப்படியே வைத்திருக்க வேண்டும். எனவே அவற்றைப் பயன்படுத்துவது காஸ்ட்லியாகவும் மிகச் சிரமமானதாகவும் இருக்கிறது. சாதாரண வெப்பநிலையில் இயங்கும் சூப்பர் கண்டக்டர்களை கண்டறியும் முயற்சியிலும் இதுவரை பெரிய வெற்றி கிடைக்கவில்லை. இப்போது அந்த விண்கல் முழுவதுமே அத்தகைய சூப்பர் கண்டக்டிங் பொருளாக இருப்பதைக் கண்டறிந்த சீன விஞ்ஞானிகள் தங்களுக்கு ஒரு மிகப் பெரும் ஜாக்பாட் அடித்திருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.

அந்தக் கல்லை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்கள். சக்திவாய்ந்த மூன்று ராக்கெட்டுகளை பொருத்தி அந்தக் கல்லை பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பூமியின் அருகிலேயே சூரியனைச் சுற்றி வரச் செய்யலாம் என முடிவு செய்தார்கள். ஆனால் அதில் பிழை ஏற்பட்டு கல் எதிர்பாராத விதமாக பூமியை நோக்கிய பாதையில் நுழைந்துவிட்டது. உடனடியாக அதன் பாதையை மாற்ற முயற்சித்தால் அது செவ்வாயின் ஈர்ப்பு விசையால் அதன் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து செவ்வாய்க்குள் விழுந்துவிடும் அபாயம் இருந்தது. அதனால் அக்கல் செவ்வாயை தாண்டி வரும் வரை காத்திருக்க முடிவு செய்தார்கள். அதற்கிடையில் அமெரிக்கா நடவடிக்கைகளை தொடங்கி இருந்தது.

சீனா உடனே நாசா இயக்குனரை தொடர்பு கொண்டு அமெரிக்க தாக்குதலை தவிர்க்க முயற்சித்தார்கள். அதே நேரத்தில் அமெரிக்கா தன்னிடம் இருக்கும் ரகசிய அணு ஆயுதங்களில் பெருமளவை பயன்படுத்த போவதை அறிந்து கல்லை கடைசி நேரத்தில் பாதையில் இருந்து நகர்த்துவது என்று முடிவு அது போலவே செய்து முடித்தார்கள். அமெரிக்கா தன்னிடம் ரகசியமாக வைத்திருந்த அணு குண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்து விட்டதும் இல்லாமல், சீனாதான் இதற்கு காரணம் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தார்கள். 

மோர்கன் சீனாவின் கருத்தை ஏற்று தாக்குதலை தள்ளிப் போடலாம் என்று சொன்னபோதே லீனியர் ஆய்வக இயக்குனர் க்ரெய்ட்டனுக்கு சந்தேகம் வந்து அதை ரகசியமாக ஜனாதிபதியிடம் தெரிவித்து இருந்தார். அந்த நிமிடத்தில் இருந்து மோர்கன் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படார். சீன உளவு நிறுவனத்தில் தொடர்பு கொண்டதை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்து ஜனாதிபதியிடம் சொல்லிவிட்டது. அதற்கிடையில் செவ்வாயில் இயங்கிவரும் மார்ஸ் லேப் விண்கல்லில் இருந்து வரும் ரேடியோ சமிக்ஞைகளை ட்ராக் செய்து அனுப்பி விட்டது. உடனடியாக மோர்கன் ரகசியமாக விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டார்.

ஆனால் மோர்கனுக்கு முழு தகவலும் தெரிந்திருக்கவில்லை. சீனா அவரிடம் கல்மீதான தாக்குதலை தவிர்க்க உதவுமாறு மட்டுமே கேட்டிருந்தது. அதனால் எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்காவிற்குத் தெரியாமலே போய்விட்டது. அவர்கள் சீனா ஒருவகையான தாக்குதலுக்கு முயற்சிக்கிறதோ என்றும் நினைத்தார்கள். இனி சீனர்கள் அக்கல்லில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்து வந்து உலகெங்கும் விற்பனை செய்வார்கள். அப்போதுதான் எல்லாருக்கும் அந்தக் கல்லின் ரகசியம் தெரிய வரும். ஒருவேளை அப்போது அமெரிக்காவும் அந்தக் கல்லை ஆக்கிரமிக்க முயற்சி செய்யலாம். 


முற்றும்…


தொடர்ந்து ஆதரவளித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

Monday, September 26, 2011

பூமியைத் தேடி... (பாகம் 7)





”அந்தக் கல் பூமியில வந்து மோதாதுன்னு சொல்றாங்க”

”என்னது மோதாதா....அது எப்படி? இ.எஸ்.ஏ, இஸ்ரோ எல்லாரும் நம்ம கணிப்பு மாதிரிதான் கணிச்சிருக்காங்க, சீனா மட்டும் வித்தியாசமா சொல்றாங்களே?”

”ஆமா, அந்தக் கல் செவ்வாய் அருகே வரும் போது செவ்வாயோட ஈர்ப்புவிசைனால செவ்வாயோட சுற்றுப்பாதைக்குள்ள இழுக்கப்பட்டு விடும்னு சொல்றாங்க”
இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர்.

"இது பத்தி உங்க கருத்து என்ன மோர்கன்? அந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கா? அதை ஏன் நம்மால கணிக்க முடியல?"

”அந்த மாதிரி நடக்க வாய்ப்பில்லைனு சொல்லிட முடியாது, ஆனா நம்ம கணிப்புகள் படி அந்த மாதிரி நடக்க குறைந்த அளவே வாய்ப்பிருக்கறதா தெரியுது. இந்த விண்கற்கள் ஆராய்ச்சில சீனாதான் ரொம்பத் தீவிரமா இருக்காங்க. ரெண்டு வருசத்துல மட்டும் 8 செயற்கைக் கோள்களை அஸ்டீராய்டுகள் அதிகமா இருக்கும் விண்கல் படலத்திற்கு அனுப்பி இருக்கிறாங்க. நாம கூட அப்போ எச்சரிக்கை பண்ணோம், அதுல இதுவரை மூன்று செயற்கைக் கோள்களை இழந்திருக்காங்க. அனேகமாக எல்லாம் அக்கற்களில் மோதி இருக்க வேண்டும். சரி, நம் விஷயத்திற்கு வருகிறேன், எனக்கென்னமோ அந்தக் கல் செவ்வாய் கிரகத்தின் ஈர்க்கும் லிமிட்டைத் தாண்டி வரும் வரை நாமும் பொறுத்து பார்க்கலாம்னு தோனுது”

”க்ரெய்ட்டன் நீங்க என்ன சொல்றீங்க?”

”இல்லை அதுவரை காத்திருக்க வேணாம் என்பது எனது கருத்து, ஏன்னா ஒருவேளை அந்தக்கல் தாண்டி வந்துடுச்சுன்னா அதுக்கப்புறம் அதை எதிர் கொள்ள நமக்கு டைம் இருக்காது. அதுனால இப்போதைய திட்டம் தொடர்ந்து நடக்கட்டும். அப்படியே அந்தக் கல் செவ்வாயின் பாதைக்குள்ள போயிட்டாலும் அதுனால நமக்கு ஆபத்து இல்ல. எல்லாரும் என்ன சொல்றீங்க ?”

”ஓகே, நான் க்ரெய்ட்டன் சொல்றத ஏத்துக்கிறேன், மோர்கன் எந்தக் காரணத்தை கொண்டும் நாம இந்த திட்டத்தை நிறுத்த வேணாம்”

"ஆமா மிஸ்டர் ராபர்ட்சன். நமக்கு வேறுவழியில்லை. நாம் திட்டத்தை தொடர வேண்டியதுதான்" என்றார் மோர்கன்.

மீட்டிங் முடிந்தது. லீனியர் ஆய்வகத்தலைவர் க்ரெய்ட்டன், உடனே சிமுலேசன் ஸ்பெசலிஸ்ட் மாதவனை அழைத்து அந்தக் கல் செவ்வாயில் மோத வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். மாதவனோ அதற்கு 0.1% வாய்ப்புக் கூட இல்லை என்று கூறிவிட்டார். பின் எப்படி சீனா இந்த மாதிரி ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்று குழம்பினார்.

XNAV நேவிகேசன் சிஸ்டத்தை ராக்கெட்டில் பொருத்தும் வேலை தொடங்கியது. மாதவனின் சிமுலேசன் கணக்கீடுகள் XNAV சிஸ்டத்திற்கேற்ற மாதிரியாக மாற்றப்பட்டு விண்கல்லின் மொத்த பாதையும் மேப்பிங் செய்யப்பட்டது. மூன்று ராக்கெட்டுகளையும் ஏவும் தளங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொரு ராக்கெட்டிலும் குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதமாக சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. ராக்கெட்டுகள் தனித்தனியே கிளம்பி தங்கள் பாதைகளில் கல்லை நோக்கிச் சென்று கல்லின் குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி தங்கள் குண்டுகளை செலுத்தும். 

ஒரு ராக்கெட்டில் இருக்கும் அனைத்து குண்டுகளும் மொத்தமாக ஒரே பேலோட் (Payload) ஆக இணைக்கப்பட்டிருப்பதால், அவை அனைத்தும் ஒரே நேரத்தில் ராக்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும். அவை அந்தக் கல்லைத் தொடுவதற்கு சரியாக 1 வினாடிக்கு முன்பு வெடித்துவிடுமாறு ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடக்குமானால் அந்தக் கல் சிறு சிறு துகள்களாக நொறுங்கிவிட வேண்டும். பின்னர் அத்துகள்கள் ஒருவேளை பூமியில் வந்து விழுந்தாலும் எந்த ஆபத்தும் இருக்காது.

இதற்கிடையில் செவ்வாயில் இயங்கிவரும் மார்ஸ் லேபில் அந்த விண்கல்லின் தன்மை பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. அந்தக் கல் ஒருவகையான உலோகக்கலவைகளால் (M-type) ஆன கிரிஸ்டல் அமைப்பில் இருப்பதை அறிந்தார்கள். 10% விண்கற்களே உலோகக் கலவைகளால் ஆனதாக இருக்கும். அவற்றின் சரியான உலோக விகிதங்களைக் கண்டறிய ஆய்வுகள் தொடர்ந்தன. அதற்கிடையில் ராக்கெட்டுகளின் பாதை, கல்லின் பாதை விபரங்கள் அனைத்தும் பூமியில் இருந்து மார்ஸ் லேபிற்கு வந்து சேர்ந்தது, அந்த விபரங்கள் செவ்வாயைச் சுற்றி வரும் இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் தரப்பட்டன.

கீழ்மட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் முழுவிபரங்களும் சொல்லப்படாமல் இது ஒரு புதிய பரிசோதனை என்றே சொல்லப்பட்டது. அனைத்தும் தயாராகி முடிந்தது. ராக்கெட்டுகள் கிளம்பும் நேரமும் வந்தது. எல்லாம் சரியாக இருந்ததால் ராக்கெட்டுகள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன. குறித்த நேரத்திற்குள் அவை தங்களுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கல்லை நோக்கி விரைந்தன. 

XNAV சிஸ்டம் எதிர்பார்த்தது போல் மிகத்துல்லியமாக வேலை செய்து கொண்டிருந்தது. கல்லை நெருங்கியதும் மூன்று ராக்கெட்டுகளும் தங்கள் பொசிசனுக்கு திட்டமிட்டபடி மிகச்சரியாக சென்று சேர்ந்தன. அனைத்தையும் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்த விஞ்ஞானிகள் சற்றே நிம்மதி அடைந்தார்கள். அடுத்து இனி ராக்கெட்டுகள் குண்டுகளை ரிலீஸ் செய்ய வேண்டும். அனைவரும் பரபரப்போடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதில் பிழை எதுவும் ஏற்படும் சமயத்தில் அவற்றை நேரடியாக இயக்கி வெளியேற்றும் படி மார்ஸ் லேபிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

குண்டுகளும் ராக்கெட்டில் இருந்து சரியான நொடியில் வெளியேறி கல்லை நோக்கிச் சென்றன. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. திடீரென கல் அதன் பாதையிலிருந்து வெகுவேகமாக விலகி வேறு பாதையில் செல்ல துவங்கியது.


(தொடரும்...)

Friday, September 23, 2011

பூமியைத் தேடி... (பாகம் 6)







NMDS சிஸ்டங்கள் நேரடியாக ஒரு செயற்கைக் கோள் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் வண்ணமாக வடிவமைக்கப் பட்டவை. அவற்றிற்கு செயற்கைக் கோளில் இருந்து தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல்கள் தரப்பட வேண்டும். அது பூமிக்குள்ளேயே பயன்படுத்தப்படும் ஏவுகணைகளுக்கு போதுனானதாக இருந்தது, ஆனால் இப்போதோ அவற்றை விண்வெளியில் பயன்படுத்த வேண்டி இருப்பதால் அவற்றிற்கு செயற்கோள் சிக்னல் அவசியம்.

கணேஷ் உடனடியாக நாசாவின் செயற்கைக் கோள் தகவல் மையத்தை தொடர்பு கொண்டார். அங்கு அவருக்கு நண்பர்கள் உண்டுஅவர்கள் JPL ஐ (Jet Propulsion Laboratory) தொடர்பு கொள்ளுமாறு கூறினர். JPL – லில் தான் நாசாவின் தொலைதூர செயற்கைக் கோள்களுக்கான சிறப்புக் கட்டுப்பாட்டு மையமும், அவற்றிற்கான நேவிகேசன் சிஸ்டமும் இருந்தன. JPL தொலைதூர செயற்கோள்களை வழிகாட்ட AMMOS (Advanced Multi-Mission Operations System – AMMOS) என்னும் கட்டுப்பாட்டு மையத்தை இயக்கி வருகிறது. 


DNS (Deep Space Network-DNS) என்னும் ரேடியோ அலைக்கற்றைகளால் ஆன நெட்வொர்க்கை பயன்படுத்தி தொலைதூர பயணங்களை வழி நடத்த உதவுகின்றார்கள். இந்த DNS சிஸ்டம் பூமியில் சரிசம தொலைவுகளில் (120 டிகிரி) மூன்று இடங்களில் மிகப்பெரும் டிஷ் ஆண்டென்னாக்கள் அமைத்து அவற்றின் மூலம் செயற்கைக் கோள்களையும் ராக்கெட்டுகளையும் ட்ராக் செய்து அவற்றிற்கு வழிகாட்டும் சிக்னல்களை தொடர்ந்து அளித்துக் கொண்டே இருக்கும். 

கணேஷ் JPL- லிற்கு தகவல் தெரிவித்து அங்கு சம்பந்தப்பட்ட விஞ்ஞானியைத் தொடர்பு கொண்டார். ஆனால் அங்கிருந்து கெட்ட செய்தியே கிடைத்தது. DNS-சின் துல்லியம் 5 மீட்டர்கள்தான் இருக்கும் என்றார்கள். எனவே மும்முனைத்தாக்குதலில் 15 மீட்டர்கள் வரை பிழை ஏற்படக் கூடும். ஆனால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச பிழை அளவு 1 மீட்டர் மட்டுமே.

அமெரிக்காவின் செயற்கைக் கோள்கள், ஸ்பேஸ் ராக்கெட்டுகள் அனைத்தையும் செலுத்துவதில் இருந்து அவற்றின் ஆயுட்காலம் முடியும் வரை அவற்றை ட்ராக் செய்து கட்டுப்படுத்துவது JPL தான். எனவே JPL-ஐ கலந்துகொள்ளாமலேயே இந்த புதிய தாக்குதல் திட்டமிடப்பட்டிருப்பது பற்றி கேள்விப்பட்ட JPL இயக்குனர் பிரையன் வில்சன் அதிர்ச்சியடைந்தார். அவர் இதை உடனடியாக நாசா இயக்குனர் மோர்கனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். அவர் வில்சனை அடுத்த நாள் ஜனாதிபதியுடன் நடக்கவிருக்கும் மீட்டிங்கில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

முதல் மீட்டிங் நடந்து 15 நாட்கள் ஆகி இருந்தன. நாசா அலுவலகத்தின் மீட்டிங் அறையிலேயே மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அனைவரும் வந்திருந்தனர். JPL இயக்குனர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். ஜனாதிபதியும் தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார்.

”மோர்கன், நீங்கள் JPL – ஐ ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை?”

”மிஸ்டர் ராபர்ட்சன், இது விண்வெளிப் பயணத் திட்டம் இல்லை. அணு ஆயுத தாக்குதல் சம்பந்தப்பட்டது, அது லாஸ் அலமாஸ் ஆய்வகம் தான் செய்ய முடியும். அதுனாலதான் அவங்ககிட்ட பொறுப்பை கொடுத்தோம். அவங்களுக்கு JPL –லின் உதவி தேவைப்பட்டால் JPL- செய்ய வேண்டியதுதானே? இதில் பிரச்சனை ஏன்?”

”சரிதான் மோர்கன், ஆனா நீங்க அவங்களையும் ஆரம்பத்துல இருந்தே சேர்த்து கொண்டிருக்கலாமே? அவங்களோட ஆலோசனைகளும் நமக்கு தேவை அல்லவா?”

”நிச்சயமா தேவைதான், JPL எனது கட்டுப்பாட்டில் வருவதால் நான் அவர்களை தேவையான நேரத்தில் சேர்த்துக் கொள்ளலாம்னு இருந்தேன், ஆனா அதற்கிடையில் மிஸ்டர் கணேஷ் அவர்களை தன்னிச்சையாக தொடர்பு கொண்டதால்தான் இவ்வளவு குழப்பமும்...!”

”சரி அதைவிடுங்க. இப்போது JPL -ன் ஒத்துழைப்பு நமக்கு மிகவும் அவசியம். மிஸ்டர் வில்சன், நீங்க லாஸ் அலமாசிற்கு வேண்டியதைச் செய்து கொடுங்கள. நாம மிக மிக அவசரமா இயங்க வேண்டிய சூழல்ல இருக்கோம்”

”ஆனால் JPL –லால் இப்போது எங்களுக்கு உதவ முடியுமான்னு சந்தேகம் தான். ஏனென்றால் எங்களுக்கு தேவையான துல்லியத்தை அவர்களால் வழங்க இயலாது” என்றார் கணேஷ்.

”ஓ.... அப்போ அடுத்த பிரச்சனை ஆரம்பமாகி விட்டதுன்னு சொல்லுங்க. மோர்கன் இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?”

”ஜனாதிபதி அவர்களே எங்களிடம் வேறு ஒரு புது நேவிகேசன் சிஸ்டம்  ஆராய்ச்சியில் உள்ளது. JPL-ம் இந்தியாவின் இஸ்ரோ (Indian Space Research Organization – ISRO) வும் இணைந்து எக்ஸ்ரே நேவிகேசன் (XNAV) என்னும் திட்டத்தை டெவலப் செய்திருக்கிறோம். அது தொலைதூரத்தில் இருக்கும் பல்சார் எனப்படும் நட்சத்திரங்களில் (millisecond pulsar) இருந்து வரும் எக்ஸ்-ரே கதிர்களை பயனபடுத்தி ஸ்பேசில் ஒரு பொருளின் நேரத்தையும் பொசிசனையும், வேகத்தையும் மிக மிக துல்லியமாய் கணக்கிட உதவும். அதை வைத்து பரிசோதனை முயற்சியாக நமது பெரும்பாலான செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ட்ராக் செய்திருக்கிறோம். அதை இந்த திட்டத்திற்கு முயற்சி செய்யலாம்”

”வெரிகுட் மோர்கன், கணேஷ் நீங்க என்ன சொல்றீங்க?”

”சார். இது ரொம்ப நம்பிக்கை தருது. நிச்சயமா எங்களுக்கு உதவியா இருக்கும்”

”மோர்கன், இது சம்பந்தமா வேறு ஏதாவது அப்டேட்ஸ் இருக்கா?

"ஆமா, ரொம்ப முக்கியமான தகவல் ஒண்ணு இருக்கு. ஸ்பேஸ்கார்ட் சிஸ்டத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஆட்டோகொயரிக்கு இன்று காலை சீனா பதில் அனுப்பி இருக்கு"

”அவங்க என்ன சொல்றாங்க?”

”அந்தக் கல் பூமியில வந்து மோதாதுன்னு சொல்றாங்க”

”என்னது மோதாதா....அது எப்படி? இ.எஸ்.ஏ, இஸ்ரோ எல்லாரும் நம்ம கணிப்பு மாதிரிதான் கணிச்சிருக்காங்க, சீனா மட்டும் வித்தியாசமா சொல்றாங்களே?”

”ஆமா, அந்தக் கல் செவ்வாய் அருகே வரும் போது செவ்வாயோட ஈர்ப்புவிசைனால செவ்வாயோட சுற்றுப்பாதைக்குள்ள இழுக்கப்பட்டு விடும்னு சொல்றாங்க”

இதைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர்.

(தொடரும்...)


பின்குறிப்பு: தொடரில் வரும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் உண்மையில் ஆராய்ச்சியில் இருப்பவையே. கீழே லிங் கொடுத்திருக்கிறேன். கூகிளில் தேடினால் மேலதிக விபரங்கள் கிடைக்கும்.


1. லினியர் (LINEAR- Lincoln Near-Earth Asteroid Research)
2.  வாசிமிர் (VASIMR) ராக்கெட் எஞ்சின்
3. ஸ்பேஸ்கார்ட் (Spaceguard)
4. தேசிய ஏவுகணை பாதுகாப்பு திட்டம் (National Missile Defense Shield - NMDS)
5. AMMOS (Advanced Multi-Mission Operations System – AMMOS)
6. DNS (Deep Space Network - DNS)
7. எக்ஸ்ரே நேவிகேசன் (X-Ray Pulsar Navigation - XNAV)

Wednesday, September 21, 2011

பூமியைத் தேடி... (பாகம் 5)





மாதவனிடம் இருந்து சிமுலேசன் கணக்கீடுகள் லாஸ் அலமாஸ் வந்து சேர்ந்தது. எதிர்பார்த்தது போலவே தாக்குதலுக்கு மிக அதிகமான துல்லியம் தேவையாக இருந்தது. கணேஷ், லாஸ் அலமாஸ் இயக்குனர் ஜார்ஜுடன் அதைப் பற்றி விவாதிக்க முடிவு செய்தார்.

”ஜார்ஜ், உங்களுக்கே தெரியும், அவ்வளவு பெரிய ராக்கெட்டை மாதவன் கொடுத்துள்ள லிமிட்டிற்குள் குறிதவறாமல் சென்று தாக்க வைப்பது சாத்தியமல்ல. மேலும் நமது ஸ்பேஸ் ராக்கெட்டுகள் துல்லியமான தாக்குதலுக்காக தயாரிக்கப்பட்டவை கிடையாது”

”கணேஷ், நானும் இதை பற்றி யோசித்தேன், ஆனால் நமக்கு வேறு வழியில்லை. நீங்க ஏதாவது ஒரு திட்டத்துடன் வாங்க”

கணெஷ் சற்றே வருத்தமான தனது அலுவலக அறைக்கு திரும்பினார். அவருக்கு என்ன செய்யலாம் என்று புரியவில்லை. சிறிது நேரம் தீவிர சிந்தனையில் இருந்தவர், வெளியே கிளம்பினார். அவர் மனம் முழுதும் ராக்கெட்டுகளைப் பற்றியே எண்ணங்கள் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தன. அவர் பின் ஏதோ ஒரு எண்ணம் வந்தவராக நேவிகேசன் சிஸ்டம்ஸ் எஞ்சினியர் க்ளுவர்ட்டின் அலுவலக அறைக்குச் சென்றார். நேவிகேசன் சிஸ்டங்களை உருவாக்கி, ராக்கெட்டில் பொருத்தி பரிசோதனைகள் செய்து அவற்றைத் தயார் செய்யும் முக்கிய பணி க்ளூவர்ட்டினுடையதுதான். அவர் உதவியில்லாமல் கணேஷ் நேவிகேசனல் சிஸ்டம் பற்றி எந்த முடிவுக்கும் வர முடியாது. எனவே கணேஷ் க்ளூவெர்ட்டையும் கலந்து ஆலோசிக்க முடிவு செய்தார்.

கணேஷ் அனைத்தையும் சொன்னவுடன், க்ளூவெர்ட் சற்று நேரம் நம்பமுடியாமல் அதிர்ச்சியில் மௌனமாக அமர்ந்திருந்தார். பின் மேற்கொண்டு செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர். பல்வேறு சாத்தியக்கூறுகளும் அலசப்பட்டன.  தேசிய ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் (National Missile Defense System - NMDS) பயன்படுத்தப்படும் நேவிகேசன் சிஸ்டத்தை பற்றியும் பேச்சு வந்தது. NMDS-ல் தான் இருப்பதிலேயே   அதிகமான துல்லியம் கொண்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே NMDS நேவிகேசன் சிஸ்டங்களை முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

கணேஷ் இயக்குனர் ஜார்ஜை தொடர்பு கொண்டு NMDS பற்றிச் சொல்லி அவர்களைத் தொடர்பு கொள்ள அனுமதி வாங்கினார். NMDS-ல் செயல் இயக்குனராக வேலை செய்து வரும் ராதிகாவை தொடர்பு கொண்டார்.

ராதிகா அவரது ஆராய்ச்சிக்கால ஆய்வக வகுப்புத் தோழி. NMDS திட்டம் முன்பு லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வகத்தின் கீழ் இருந்த போது சில வருடங்கள் இருவரும் ஒன்றாக பணி புரிந்திருந்தனர். ராதிகாவும் கணேசும் காதலித்து பிரிந்தவர்கள், ஆனால் ஏனோ சேரவில்லை. இருப்பினும் அவர்களைடையே நல்ல நட்பு நிலவியது.

சில விசாரிப்புகளுக்குப் பின்னர், பேச்சு தேசிய ஏவுகணைத்தடுப்பு திட்டத்திற்கான நேவிகேசனல் சிஸ்டம் பற்றி திரும்பியது. கணேஷ் அதுபற்றி மேலதிக விபரங்களைக் கேட்டறிந்தார். அவருக்கு அது நிச்சயம் ராக்கெட்டிற்குத் தேவையான துல்லியத்தை அளிக்கும் என்று பட்டது. உடனே அவர் அது சம்பந்தமாக க்ளூவெர்ட்டையும் சேர்த்துக்கொண்டு சில  கணக்கீடுகளைச் செய்ய ஆரம்பித்தார்

இடைஇடையே ராதிகாவையும் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொண்டபடி வேலையைத் தொடர்ந்தனர். முடிவில் அந்த புதிய நேவிகேசனல் சிஸ்டத்தை ராக்கெட்டில் பொருத்தி முதற்கட்ட ஆய்வக பரிசோதனை நடத்துவது என்று திட்டமிட்டனர். கணேஷ், ஜார்ஜிடம் தனது திட்டத்தைச் சொன்னார், கேட்டவுடன் ஜார்ஜ் மிகுந்த உற்சாகம் அடைந்தார். உடனடியாக NMDS-சில் இருந்து அந்த நேவிகேசனல் சிஸ்டம்சை கொண்டு வந்தனர்.

அவற்றை ராக்கெட் முன்மாதிரியில் ஏற்கனவே செய்த கணக்கீடுகளின் படி பொருத்தினர். NMDS பயன்படுத்தும் ஏவுகணைகள் ட்ராக்கிங் செயற்கோள் மூலமாக பெறப்படும் ஜிபிஎஸ் புள்ளிகளை வைத்தே தன் பாதையை அறிந்து செல்லும், தான் தாக்க வேண்டிய பொருள்களை அது ஜிபிஎஸ், மற்றும் அப்பொருளின் வெப்பத்தை அடிப்படியாக வைத்து மூலமாக தேடிச் செல்லும். முதல் தலைமுறை NMDS  வெப்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. பின்பு லேசர் அலைக்கற்றையையும் பயன்படுத்தித் தனது பாதையைத் தேர்ந்தெடுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டது. அதில் இருக்கும் வெப்பம் உணரும் (IR-CCD) கேமராவும் பலமடங்கு மேம்படுத்தப்பட்ட ஒன்று. எனவே அது இப்போது மிகத் துல்லியமாக தாக்க முடியும். அது இப்போதைய விண்கல் திட்டத்திற்கு போதுமானதாக இருக்கும்.

இடையிடையே ஜனாதிபதி ராபர்ட்சன், முன்னேற்றங்களைக் கேட்டறிந்தார். ராக்கெட் நேவிகேசன் சிஸ்டத்தை ராகெட்டில் பொருத்தி பரிசோதிக்க ஆர்மபித்தார்கள். முதல் கட்ட பரிசோதனை வெற்றி பெற்றது. கணேஷ் மிகுந்த உற்சாகமாக இருந்தார். இனி அடுத்த கட்ட டெஸ்டிங் பண்ணனும். அங்குதான் பிரச்சனை தொடங்கியது

NMDS சிஸ்டங்கள் நேரடியாக ஒரு செயற்கைக் கோள் கட்டுப்பாட்டில் இருந்து இயங்கும் வண்ணமாக வடிவமைக்கப் பட்டவை. அவற்றிற்கு செயற்கைக் கோளில் இருந்து தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல்கள் தரப்பட வேண்டும். அது பூமிக்குள்ளேயே பயன்படுத்தப்படும் ஏவுகணைகளுக்கு போதுனானதாக இருந்தது, ஆனால் இப்போதோ அவற்றை விண்வெளியில் பயன்படுத்த வேண்டி இருப்பதால் அவற்றிற்கு அங்கேயும் தொடர்ந்து வழிகாட்டும் சிக்னல் தரவேண்டுமே? 


(தொடரும்...)