Thursday, December 31, 2015

கந்தரகோலம் : எதிர்பார்ப்பும் ஏமாற்றங்களும்.

கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையிலிருக்கும் தமிழ் இலக்கியத்தினை உய்விக்க வந்த ரட்சகனாகவே ஆளுமை நாகராஜசோழனைப் பார்க்கிறது தமிழ் இலக்கியச் சமூகம். தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், செழிப்பிலும் கவனம் செலுத்தும் எல்லோருக்குமே ஆளுமை நாசோ ரட்சகன்தான்.

ஆளுமையின் கந்தரகோலம் அறிவிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அது வாசகவெளியை எட்டிப் பிடிக்கவில்லை. எழுத்துச் சுதந்திரம் குறித்தோ, பேச்சுச் சுதந்திரம் குறித்தோ பேச இது நயமான சூழல் இல்லையென்றாலும் தமிழ் இலக்கியத்தினை அழிவிலிருந்து மீட்டெடுக்கும் ஒரு படைப்பினைக் குறித்து அறிந்து கொள்வதிலும் கூட ஆர்வம் இல்லாத அளவிற்கா ஒரு சமூகம் அறிவிழந்துகிடக்கும்? நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்கிறது. இப்படியான ஒரு சமூகச் சூழலில் சிக்கிக் கொண்ட நாசோவைப் போன்ற எழுத்தாளர்களின் கதிதான் என்ன? கந்தரகோலம் எப்பொழுதுதான் வெளியாகும்? கந்தரகோலத்தினை வெளியிட இந்தச் சமூகம் எள்ளளவேனும் துணையாக இருக்குமா? 

கடந்த ஆண்டிலேயே வெளியாகும் என்று கந்தரகோல வெறியர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஆளுமையின் கந்தரகோலம் மேலும் ஓராண்டினைக் கடந்து மறுபடியும் ஏமாற்றத்தினை மட்டுமே பரிசளித்திருக்கிறது. இதைக் குறித்து யாரைக் குறை சொல்வது? கந்தரகோலத்தினை வெளியிடக் கடும் எதிர்ப்புக்களைத் தான் சந்தித்துவருவதாக முன்பே அறிவித்திருந்தார் ஆளுமை நாசோ. ஒரு எழுத்தாளன் வேறு என்னதான் செய்யமுடியும்?


கந்தரகோல பக்தர்கள் குழுமத்தில் இது குறித்து நான்கைந்து வருடங்களாகப் பேசிவருகிறோம். கந்தரகோலத்தினை மக்கள் திரளுக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன என்பது குறித்து அதிகாலை பத்து மணிக்கு அலுவலகம் வந்ததிலிருந்து பேச ஆரம்பித்துவிடுவோம். கிட்டத்தட்ட நள்ளிரவு ஏழு மணி வரையிலும் கூட கடுமையாக விவாதிப்போம். அதன்பின்னர் அலுவலக உதவியாளர் வந்து ஆஃபீசைப் பூட்டப்போவதாக அறிவித்துவிடுவார். பின்னர் வீட்டிற்கு வந்து தொடர்ந்து விவாதிப்போம். சில நாட்களில் கடும் நள்ளிரவு பத்து மணி வரையிலும் கூட விவாதித்திருக்கிறோம். பின்னர் தூக்கம் வந்துவிடும்.

இப்படியாக கந்தரகோலத்தின் தடையரணை உடைத்தெறிய நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் முயன்று தோற்றுவருகிறோம். கந்தரகோலம் பக்தர்கள் குழுமம் என்றில்லை, பொதுவாக தமிழ் வாசிக்கத் தெரிந்த எல்லோருமே கந்தரகோலத்தினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் கொள்ள எதுவுமில்லை. 

எங்களின் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தீரும் நாள் எப்பொழுது என்று ஆளுமையிடம் சமீபமாகக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.


அன்பின் செல்வா,

கந்தரகோலத்தை வெளியிடுவதில் ஏற்பட்டுவரும் மறைமுக எதிர்ப்புக்கள் என்னவென்று சமீபத்தில் என் நண்பரும், சக இலக்கியவாதியுமான திருவள்ளுவர் கேட்டிருந்தார். ஒருவேளை கந்தரகோலம் புத்தகத்தினை இன்னமும் தாங்கள் எழுதாததுதான் அந்த மறைமுகத் தடையா என்றும் வினவியிருந்தார்.

நான் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிப்பவன். இந்த வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவனம் கொள்ளாதவன். என் வாழ்க்கையில் எப்பொழுது திருக்குறள் நுழைந்ததோ அப்பொழுதிலிருந்தே எனக்குத் திருக்குறள்தான் உயிர்மூச்சு. 

திருக்குறள் சொல்லும் பாதையில் பயணிப்பது இந்த நவீன காலத்திற்கு உகந்ததா என்றால் சற்றே கடினம்தான். நான் எப்படி அச்சுப் பிசகாமல் திருக்குறள் சொல்லும் திசையில் பயணிக்கிறேன்.? எப்படி என்னால் இது சாத்தியமாகிறது? விளக்குகிறேன்.

நான்கைந்து வருடங்களுக்கும் முன்பாக கொஞ்சம் பெரிய சைசில் எனக்குத் திருக்குறள் புத்தகத்தினை நண்பன் ஒருவன் பரிசளித்திருந்தான். அதில் ஏதோ ஒரு நூலகத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே திடுக்கிட்டுப் போய் “திருடின புக்கா இருந்தா எனக்கு வேண்டாம்” என்று திருப்பிக் கொடுத்துவிட்டேன். அதற்கு அவன் “ திருடினது இல்ல, டைம் முடிஞ்சு போச்சு, கொண்டுபோய் குடுக்கல” என்றான். திருடியதாக இல்லாவிட்டால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று வாங்கிவைத்துக் கொண்டேன்.

அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் ஒருவனின் வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கையாகிறது என்று எழுதப்பட்டிருந்தது. அன்றே நானும் திருக்குறள் காட்டும் பாதையில் பயணிப்பதென்று முடிவெடுத்தேன்.

தினமும் எங்கேனும் வீட்டிலிருந்து வெளியே போக வேண்டிய சூழல் வருமானால் உடனடியாக திருக்குறள் புத்தகத்தினை எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றுவேன். அது எந்தத் திசையைக் காட்டுகிறதோ அந்தத் திசையில் சுவற்றில் ஓட்டை போடுவேன். பின்னர் அந்த ஓட்டையின் வழியாக வெளியேறுவேன். இதற்கென்றே திருக்குறள் புத்தகத்தின் மேற்புறமாக அம்புக் குறி ஒன்றினை வரைந்து வைத்திருக்கிறேன். இப்படியாக தினமுமே அது ஒவ்வொரு திசையைக் காட்டும். நானும் தினமும் இப்படி எல்லாத் திசைகளிலுமே சுவற்றினை ஓட்டை போட்டு அங்கெல்லாம் கதவுகளை வைத்திருக்கிறேன். இதற்காகவே ஒரு கொத்தனாரையும் மாதச் சம்பளத்திற்கு வைத்திருக்கிறேன். திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பது அலாதியானது. ஒவ்வொரு நாளுமே நான் புறப்படுகிற நேரத்திற்குச் சற்று முன்பாகவே புத்தகத்தைச் சுழற்றுவேன். அது காட்டும் திசையில் கதவிருந்தால் பிரச்சினையில்லை. இல்லாவிட்டால் கொத்தனாரிடம் சொல்லி சுவற்றை உடைத்து வெளியேறுவேன்.

இப்படியாக திருக்குறள் காட்டும் திசையில் பயணித்து வருகிறேன். இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகத் தெரிவித்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இத்தனைக்கும் அவர் வாடகை வீட்டில் இருக்கிறாராம். வாடகை வீட்டில் இதையெல்லாம் எப்படி ஒத்துக்கொள்கிறாகள் என்று ஆர்வத்தில் கேட்டபோது அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று எப்படியென்று விளக்கினார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அதிலும் ஒரு அம்புக் குறியும் இருந்தது. அவரும் என்னைப் போலவே புத்தகத்தினைச் சுழற்றிவிட்டார். ஆனால், அது வாசலைத் தவிர்த்து வேறொரு திசையைக் காட்டியதும் ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அந்த அம்புக் குறி வாசலை நோக்கிக் காட்டுமாறு பிடித்துக் கொண்டு, இப்பொழுது கண்ணாடியில் அந்த அம்புக் குறியின் திசையை என்னிடம் காட்டினார். அது வாசல் கதவு இருக்கும் இடத்திற்கு நேராக இருந்தது. இப்படித்தான் தினமும் அவர் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதாகச் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எத்தனை புத்திசாலித்தனமான காரியம் பாருங்கள். எனக்கு ஏன் இது தோன்றவில்லை என்று யோசித்துப் பார்த்தேன்.

அதன்பின்னர் நாங்கள் மேலும் ஒரு நண்பரைச் சந்தித்தோம். அவரிடம் நாங்கள் எப்படித் திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறோம் என்று சொன்னதும் திடீரென தனது தலையை சுவற்றில் முட்ட ஆரம்பித்தார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்னவென்று விசாரித்ததில் திருக்குறள் காட்டும் திசையில் பயணிப்பதென்றால் அதுவல்ல என்றும், தான் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கிறேன் என்றும் விளக்கமளித்தார்.

அவரிடமும் ஒரு திருக்குறள் புத்தகம் இருந்தது. அவரும் அதைச் சுழற்றிவிட்டார். ஆனால், அதில் எந்தவொரு அம்புக் குறியும் இல்லை. எப்படி இவர் இதைவைத்து திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கப் போகிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. புத்தகம் சுழன்று நின்றதும் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு அம்புக்குறியை எடுத்து வாசல் பக்கத்திற்கு நேராக அதன் முனைப்பகுதி இருக்குமாறு புத்தகத்தில் ஒட்டினார். அவ்வளவுதான். இப்பொழுது அவர் சுவரினை ஓட்டை போடவோ அல்லது கண்ணாடியை எடுத்து திருப்பிக் கொண்டிருக்கவோ இல்லை. இது அதைவிடவும் எளிதாக இருந்தது.

இப்படித்தான் ஊருக்குள் நிறைய அறிவாளிகள் திரிகிறார்கள். நம் பார்வை அவர்கள் மேலெல்லாம் விழுவதில்லை. அப்படியான அறிவாளிகள் அதிகரிக்கும் நாளுக்காகத்தான் கந்தரகோலம் புத்தகத்தினை வெளியிடாமல் காத்திருக்கிறேன். அப்படியான அறிவாளிகளின் எண்ணிக்கை கோடியைத் தொடுகின்றபோது கந்தரகோலம் வெளியாகும்.

சரி, மேற்கூறிய கதையினை வெறுமனே படித்துச் சிரித்துவிட்டுச் செல்லும் வாசகர்களுக்கு மத்தியில், நாம் சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எப்படி திருக்குறள் காட்டும் திசையில் பயணிக்கும் மூன்று மனிதர்களைப் போலப் பின்பற்றுகிறோம் என்று புரிந்துகொள்ளும் வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். எண்ணிக்கையில் அவர்கள் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் பிறக்காமல் இருக்கலாம். அவர்களுக்கான ஆக்கம்தான் கந்தரகோலம். இப்பொழுது வெளியிட்டால் கழுதைகளிடம் கவிதைப் புத்தகத்தைத் தருவதைப் போன்ற கதைதான். அவை அவற்றைத் தின்றுவிடும். ஆனால், சாணம்தான் போடும். அதைப் போல கந்தரகோலம் வீணாகிவிடக் கூடாதென்ற காரணத்தினால்தான் ஒவ்வொரு ஆண்டும் இது தள்ளிப் போடப்படுகிறது. 

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்
தமிழிலக்கியப் பேராளுமை நாசோ.