Friday, November 18, 2011

என்னாது வெளிநாட்டு மோகமா??? - 1


.
இங்க சகோதரி கௌசல்யா அவர்கள் எழுதின கட்டுரையை படிச்சேன். அப்பா சாமிகளா ஏன் ஆ..ஊனா வெளிநாட்டு மோகம் அப்படினு முத்திரை குத்திடறிங்க. இதே பதிவை தன்னம்பிக்கை அப்படினு தலைப்பு வச்சி எழுதி இருந்தா பாராட்டி இருப்பேன். என்னாமோ அங்க வாய்ப்புகள் எங்க வீட்டு வாசல் படியில் தவம் கிடக்கர மாதிரியும் நாங்க தான் அதை எட்டி உதைச்சிட்டு ராக்கெட் ஏறி சந்திர மண்டலத்துக்கு போன மாதிரியும் சொல்லிடறிங்க. இதில் வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் அப்படினு ஒரு பாட்டு. வழியா இல்லை பூமியில் தான் நீங்களே சொல்லி இருக்கிங்க வழியா இல்லை இந்தியாவில் அப்படினு இல்லை.

//இந்த நாட்டில் வேலை கிடைக்கவில்லை என்று அப்பாவிடமோ, அடுத்தவரிடம் கடன் வாங்கியோ விமானத்தை பிடிக்கும் இளைஞனை சொல்கிறேன்...கடன் வாங்கி வெளிநாட்டை தேடி செல்வதை விட அதே பணத்தை வைத்து சொந்த ஊரில் சிறு தொழிலை தொடங்கலாமே என ஏன் யோசிப்பதில்லை...?! பிழைக்க வழி வகை தெரியவில்லையா ??// அப்படினு கேக்கராங்க. கேள்வி கேக்கரது சுலபம்.. :))

அங்க எல்லாம் கொட்டி கிடக்கு தான் ஆனா அதை அள்ளி எடுக்க இல்லை கிள்ளி எடுக்க எவ்வளவு கஷ்டபடனும் எனக்கு தெரியும். சுயதொழில் சொல்றிங்க, லோன் சொல்றிங்க எல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த லோன் வாங்க பேங்க் பக்கம் போனதும் சார் வாங்க உட்காருங்க அப்படினு காப்பி, டீ எல்லாம் கொடுத்து ஒரு லட்சம் போதுமா இல்லை ஐந்து லட்சம் தரட்டுமா அப்படினு அன்பா கேட்டு. முடியவில்லைடா சாமி. இளைஞார்களே வாருங்கள் சுயதொழில் செய்ய நாங்கள் யோசனை சொல்லி உதவுகிறோம் அப்படினு டி.வியில் பெருசா பேட்டி கொடுத்து போன் நம்பர் எல்லாம் கொடுத்தான். நானும் நம்பி ஐயா நான் ஒரு ஆர்வம் மிக்க இளைஞன் அப்படினு அங்க போய் நின்னா. எவனுக்கும் நின்னு பதில் சொல்ல கூட பொருமை இல்லை. கடைசியில் ஒரு பியூன் பரிதாப பட்டு ஒரு ஊர் பேரை சொல்லி நீங்க அங்க போய் பாருங்க ஒருத்தர் காலான் பண்ணை வச்சி இருக்காரு அவரை கேட்டு பாருங்கனு. 

நாமளும் மனசை தளர விடாம அங்க போய் தெரு தெருவா தேடி அவரை கண்டுபிடிச்சி ஐயா நான் சொந்தமா தொழில் தொடங்கனும். அதுக்கு உங்க ஆலோசனை என்ன அப்படினு கேட்டதும் அவர் சொன்ன முதல் பதில் தம்பி சொந்தமா ஒரு வேலை தேடிக்கோங்க. அப்புறம் பார்ட் டைமா இதை எல்லாம் செய்யலாம். சரி நீங்க விபரம் சொல்லுங்க அப்படினு கேட்டேன். நல்ல மனுஷன் எல்லாம் விளக்கினாரு. கடைசியா இதுக்கு முதலீடு அறுபத் ஆயிரம் வரை ஆகுன்னு சொன்னாரு. என்னது அறுபதா!!!! என்கிட்ட அறுபது ரூபாய் கூட இல்லியே. சரி சரி வாழநினைத்தால் வாழலாம் தட்டுடா பேங்க் கதவை. உங்க ஆர்வம் எல்லாம் சரி தம்பி ஆனா எதைவச்சி அவ்வளவு பணம் கொடுக்கரது? குடும்ப சொத்து இல்லைனு சொல்றிங்க, சொந்தமா இடம் எதுவும் இல்லைனு சொல்றிங்க. கேரண்டி கையெழுத்து போடவும் யாரும் தெரியாது சொல்றிங்க. அதுவுமில்லாம இந்தா காலன் வளர்ப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது தம்பி வேற ஏதாவது யோசிங்க இப்படி அயிரம் கதை.

நானும் கண்ணுலபடுகின்ற, மூளையில் தோன்றுகின்ற எல்லா தொழில் பத்தியும் முயற்சி பண்ணேன். அறுபதாயிரமில்லை வெறும் ஆயிரம் ரூபாய் நம்பி கொடுக்ககூட ஆள்கிடையாது. நம்பி கேரண்டி கையெழுத்து போட ஆள்கிடையாது. ஆனா சுயதொழில் எல்லாம் வேலைக்கு ஆகாது உருப்படர வழியைபாரு அப்படினு வாய் வலிக்காம யோசனை மட்டும் சொல்லி அனுப்புவாங்க. சரி என்னைக்காவது ஒரு நாள் புள்ளை தொழில் ஆரம்பிச்சி குடும்பத்த காப்பத்தும் அப்படினு பெத்தவங்க வேனா பொருமையா இருக்கலாம் ஆனா குடும்ப சூழால் அப்படி எல்லாம் உங்களை விடாது. முகவரி அப்படினு ஒரு அஜித் படம் பார்த்து இருப்பிங்களே? கடைசியில் லட்சியத்தை தூக்கி போட்டு வேலைக்கு போவாரு. உங்க கண்ணுகு தெரியாம தினம் ஆயிரம் பேரு இப்படி மாறிகிட்டு இருக்கான்.

வேலைன்னா ஐ.ஏ.எஸ் ஆபிசர் வேலை கிடைச்சி போய்ட்டேன் நினைக்காதிங்க தினம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு (25 ரூபாய் சம்பளம் + 5 ரூபாய் பேட்டா) வீடு விடா போய் சோப், பேஸ்ட் விற்கின்ர வேலை. என்னைக்காவது கையில் ஒரு பை நிரைய சோப், பேஸ்ட் எல்லாம் அடுக்கி வச்சிகிட்டு ஒரு ஒரு மணி நேரம் வெயில்ல நடந்து பாருங்க. அதுலையும் ஹவுஸிங் போர்ட் ஏறியா, அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாம் சூப்பர்!! படி ஏறி இரங்கி பெண்டு நிமிர்ந்திடும். தோள்கள் வலித்தாலும் உடைகள் வியர்வையில் நனைந்தாலும் மனதை தளரவிடாதே அப்படினு நாமளே உற்சாகம் பண்ணிகிட்டு யார் வீட்டு கதவையாவது தட்டினா அவங்க வாங்க வேண்டாம், நங்க சொல்வதை கேக்க வேண்டாம். எதுவும் வேண்டாம் அப்படினு மெதுவா சொல்ல கூட பொருமை இருக்காது. ”வேண்டாம்” அப்படினு ஒரு வார்த்தை அடுத்த சகெண்ட் படார் முகத்தில் அடிக்காத குறையாக கதவு மூடபடும். வீரனுக்கு இது எல்லாம் சகஜமப்பா அப்படினு அடுத்த வீட்டுக்கு போவோம். பத்து வீடு ஏறி இருக்க மாட்டிங்க வாட்ச் மேன் வருவாரு. இங்க எல்லாம் இப்படி எல்லாம் வந்து விற்க்க கூடாது கிளம்பு கிளம்புன்னு அன்பா சொல்லுவாரு.

இது எல்லாம் பராவயில்லை. ஒரு வீட்டு கதவை தட்டினா கூட படிச்ச புள்ளை வந்து கதவை திறக்குது. ”ஹேய்!! என்ன நீ இந்த வேலை செய்யர? (நான் என்ன பிச்சையா எடுக்கரேன்). தண்ணி குடிக்கிறியா? ஏதாவது சாப்படரியா? எங்க வீட்டில் இந்த பிரண்ட் உபயோகபடுத்தரது இல்லை ஆனா உனக்காக வாங்கிக்கிரேன்” அப்படினு சொல்லி ஒரு பத்து ரூபாய் நீட்டுச்சி அதை வாங்க சுய கௌரவம் எவ்வளவு தடுத்து இருக்கும் அப்படினு அந்த இடத்தில் இருந்தவனுக்கு மட்டும் தான் புரியும். இருந்தாலும் அதையும் வாங்கிட்டு தான் வந்தேன். இதுக்கு நடுவில் மதிய சாப்பாடு சாப்பிடனும் பாருங்க. நம்ம இப்போ செஞ்சிகிட்டு இருக்க வேலைக்கு ஹோட்டல் எல்லாம் போனா சங்கு தான். கூட வேலை செய்யர எல்லாரு சேர்ந்து எங்கையாவது ரோட்டோரத்தில் ஒரு மரத்தடியில் உக்காந்து சாப்பிடுவோம். கற்று வீசுது சாப்பாட்டில் மண் விழுது இது எல்லாம் பார்க்க கூடாது. அப்புறம் மாலைவரை யார் வேலை செய்வது.

எல்லாம் முடிச்சி அதுக்கு அப்புறம் ஆபீஸ் வந்து ரிப்போர்ட் எழுதி கொடுத்துட்டு அதுக்கு நடுவில் மேனேஜர் கூப்பிட்டு தம்பி போய் சிகரெட் வாங்கி வா சொல்லுவாரு. வாங்கி வந்து கொடுக்கும் பொழுது சொல்லுவாரு. “தம்பி பார்த்தா படிச்ச புள்ளை மாதிரி இருக்க உனக்கு எல்லாம் இந்த வேலை வேண்டாம்பா. உன் பயோ டேட்டா இருந்தா கொடு நானே நல்ல வேலை வந்தா சொல்லி விடரேன்” (மரியாதையா உனக்கு வேலை இல்லைனு சொல்ராரு) இதுக்கும் அந்த வாரம் நான் 200% டார்கட் கொடுத்து இருந்தேன். உடனே மனசு உடைஞ்சி வெளிநாட்டுக்கு ஓடி போய்ட்டியா கேக்காதிங்க. ஏழு வருஷம் கஷ்டபட்டு இருக்கேன் ஒரு ஒரு முறையும் மேல ஏறி கீழ விழுந்து... அடிபட்டு (அதிகமா மேல ஏறி இருந்தா அதிகமா அடிபடும்). ரோட்ல சோப் விக்கரதுல ஆரம்பிச்சி கார்பரேட் கம்பனில ஒரு ப்ராஞ்ச் இன்சார்ஜா வரனும்னா நான் எவ்வளவு படிகள் தாண்டி இருக்கனும் உங்களுக்கு தெரியுமான்னு தெரியவில்லை.... :))

1 comment:

அருண் பிரசாத் said...

அடுத்த பாகத்தையும் படித்து விட்டு கமெண்ட் போடவும்

http://www.terrorkummi.com/2011/11/2.html