அன்பின் ப.ரா,
இரண்டு நாட்களுக்கும் முன்பாக நானும் என் அறைத் தோழனும் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அந்தப் படத்தைப் பற்றி நமது இணைய சமூகம் என்ன நினைக்கிறது என்றறிவதற்காக இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அந்தப் படத்தினைப் பற்றிய இலக்கியத் தரத்திலான விமர்சனக் கட்டுரை ஒன்றினைக் காண நேர்ந்தது. அதில் இருந்தவை நிச்சயமாகத் தமிழ் எழுத்துக்கள்தான். ஆனால், சேர்த்துப் படிக்கையில் அது வேறொரு மொழியாகத் தெரிந்தது. என் நண்பனிடம் கொடுத்து அதனைப் படிக்கச் சொன்னேன். நீண்ட நேரம் அதைப் படித்தான். தமிழ் வழிக் கல்வி கற்றவன்தான்.
முதலில் அவன் நேராகவும், செல்ஃபோனை நேராகவும் பிடித்துப் படித்தான். பின்னர் செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் படித்தான். அதன் பின்னர் செல்ஃபோனை என் கையில் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கையில் அப்படியே தலைகீழாக நின்று கொண்டு படித்தான். மறுபடி செல்ஃபோனைத் தலைகீழாகப் பிடிக்கும்படிக் கூறிக்கொண்டு மறுபடியும் படித்தான். கடைசியில் அந்தப் படம் முடிந்துவிட்டது. இவன் இன்னமும் விமர்சனத்தைப் படித்து முடிக்கவில்லை.
இப்பொழுதெல்லாம் நள்ளிரவில் திடீரென எழுந்து விழுமியங்கள், எச்சங்கள், கோட்பாடுகள், நுண் கருத்துத் திணிப்புக்கள், அல்லலுறும் மனது, மனப்பகிர்த் துளிகளின் பிம்பங்கள் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிடுகிறான். திரைப்படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விடவும் அதைக் குறித்த இலக்கிய விமர்சனங்கள் இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பிரமிப்பாக இருக்கிறது.
தமிழின் மிக முக்கியமான ஆளுமையான தாங்கள், திரைப்படம் குறித்த இலக்கிய விமர்சனங்களின் தாக்கம் குறித்து என்ன நினைக்கிறீர்கள். சுய உணர்வு நிலையில்லாத தமிழ்ச் சமூகத்தில் இது போன்ற உன்னதமான விமர்சனங்கள் உள்ளிழுத்துக் கொள்ளப்படும் என்று கருதுகிறீர்களா?
அன்பின் செல்வா,
படத்தை பார்த்துவிட்டு விமர்சனத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள். விமர்சனத்தை படிக்கும் முன் படத்தை பார்ப்பது என்பது கக்கா போகும் முன் கழுவுவதை போன்றது. தவறேதும் இல்லையென்றாலும் சரி என்று சொல்ல முடியாது அல்லவா? அது இருக்கட்டும், விமர்சனத்திற்கு வருவோம். இலக்கியத் தரத்திலான விமர்சனம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது இலக்கியத்தரம் என்று முன்பே தாங்கள் அறிந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் தமிழில் இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை வாசிப்பதற்கு முன்னர் சில விஷயங்களை உள்வாங்கி விளங்கிக் கொள்ள வேண்டும்.
தற்கால தமிழ் இலக்கிய சூழலில் பல்வேறு ஞானமரபுகள் தோன்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் தமக்கென தனித்தன்மையான எச்சங்களை விரவி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொன்மையான விழுமியங்களில் இருந்து கடனாக பெறப்பட்டவையே. அங்கே காணப்படும் நுண்ணரசியல், பல நேரங்களில் ஞானமரபுகளை உடைத்தெறிவதாக இருந்த போதும், ஆழமான படிமங்கள் ஊடான கருத்து திணிப்புகள் ஏற்படுத்தி வரும் பிம்பங்கள் இந்த கட்டமைப்புகளைத் தக்க வைக்கும் வேலையை இடையறாது செய்து வருகின்றன. இவற்றை அறிந்திருந்தால் மட்டுமே தமிழ் இலக்கிய கட்டுரைகளை வாசிக்க முடியும். தெரியாமல் வாசித்து விட்டீர்கள் என்றால் அது இலக்கிய கட்டுரையே அல்ல என்று அறிக. ஆகவே நீங்கள் உடனடியாக ஏதாவது ஒரு இலக்கிய ஞானமரபை தெரிவு செய்து, ஆசான் ஒருவரை பிம்பமாக ஏற்றுக்கொள்ள முயல வேண்டும்.
இப்படிக்கு
பன்னிக்குட்டி ராம்சாமி
No comments:
Post a Comment