Wednesday, July 16, 2014

ஒரு வேட்டியும் பல காட்சிகளும்..

கிளப் என்றாலே பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினர்களும் வயசான பணக்கார பெருசுகளும் கூடிக் குடிச்சி கும்மாளம் அடிக்கும் ஒரு மோசமான இடம் என்பது ஊரறிந்த இரகசியம். அங்கே சில பல உடைக் கட்டுப்பாடுகள் வைப்பது கிளப்புக்கு பெருமையோ இல்லையோ அவர்களின் உறுப்பினர்களின் மானம் கெடாமல் இருக்கவாவது உதவும்.

வேட்டிகட்டி வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என கிளப் சொன்னது தவறுதான். அதற்கு அந்த கிளப் சொன்ன விளக்கம் (வேட்டி அணிந்து குடித்தால் வேட்டி கழண்டுவிடும் அதனால் தான் அனுமதி இல்லை) அங்கே இருக்கும் உறுப்பினர்களை மேலும் கேவலப் படுத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அதாவது அங்கே போகிற ஆசாமிகள் குடிக்க மட்டுமே போகிறார்கள், அதைத்தவிர வேறு வேலைகள் எதுவும் இல்லை என்று சொல்வது போலுள்ளது.

வேட்டி கட்டுவது அருகி வரும் சூழலில், வேட்டியை தினந்தோறும் உடுத்தும் நபர்கள் நெருங்கக் கூட இயலாத உயரத்தில் இருக்கும் ஒரு கிளப்பின் மேல் இவ்வளவு அறச்சீற்றம் ஏனென்று தெரியவில்லை. போகவும் போராட எத்தனையோ விஷயங்கள் இருக்க இதற்கு எதற்கு இத்தனை முக்கியத்துவமென அடியேனின் அரை மூளைக்கு எட்டவில்லை.

இதை ஒரு முக்கிய விடயமாக சட்டசபையிலும் கூட பேசி உள்ளோம். இன்னும் ஐநா சபை தலையிடாதது தான் பாக்கி.

இதை எல்லாம் கூட சமாளித்துவிடலாம். இதுவரைக்கும் வேட்டி எந்த சைஸில் இருக்கும், அது சதுரமா செவ்வகமா என்று கூடத்தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அறச்சீற்றத்துடன் இணையத்தில் பொங்க வைப்பதைப் பார்க்கும் போது தான் கிளப் சொன்னது எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறது.

சரி, இப்போது வேட்டி கட்டி வரச் சொல்லிவிட்டார்கள். அதிலும் பல குழப்பம். வெள்ளை வேட்டி மட்டும் தானா? நானெல்லாம் லுங்கி கிடைக்காத சமயத்தில் சாமிகள் மாலை போடும் போது உடுத்துவார்களே அது போல பல கலர் வேட்டிகள் கட்டுவேன், அது போன்ற வேட்டிகளை அனுமதிப்பார்களா?

வெள்ளை வேட்டியிலும் பல ரகங்கள், அளவுகள் உண்டு. ஒற்றை மடிப்பு வேட்டிக்கு அனுமதியா? இல்லை இரட்டை மடிப்பு வேட்டிக்குமா? பட்டு வேட்டி கட்டலாமா? பஞ்ச கச்சம் கட்டலாமா? ராம்ராஜ் காட்டன் மட்டும் தானா? அரசின் கோ-ஆப்டெக்ஸ் காட்டன் வேட்டிக்கும் அனுமதி உண்டா?

ரேஷன் கடையில் தை பிறந்தால் கொடுப்பார்களே, மொக்கையாய் ஒரு வேட்டி, அதற்கும் அனுமதி உண்டா?

கடைசியாய், நான் நன்றாக வேட்டி கட்டுவேன். என்னை அந்த கிளப்பிற்குள் அனுமதிப்பார்களா?

8 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

துபாய் மெட்ரோல கூட வேட்டி கட்டி வந்தவரை உள்ள அனுமதிக்க மாட்டோம் ஒரு போல்ஸ்கார் சொல்லிட்டாருனு ஒரு பிரச்சனையாகி இருக்கு. சர்வேதேச அளவில் வேட்டிகள் அவமானபடுத்தபடுகிறது.. இதை கண்டித்து தோழர் நாசோ மேலும் ஒரு பதிவு எழுதுவார்.. :)

Unknown said...

நான் நன்றாக வேட்டி கட்டுவேன்.////யாருக்கு? ///என்னை அந்த கிளப்பிற்குள் அனுமதிப்பார்களா?////'கிளப்பி' அப்புடீன்னா என்ன?

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

வேட்டி அணியும் முறைகளும் அதன் வகைகளும்

பெரும்பாலும் வெண்மை நிறத்தில் வேட்டி இருக்கும்; வெளுப்பான் கொண்டு வெளிறச்செய்யாது வெளிர்மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணங்கள் போன்ற விசேடங்களில் பயன்படுத்தப்படும். சில குறிப்பிட்ட நோன்பு சமயங்களில் நீலம், கருப்பு, சிகப்பு அல்லது காவி நிறங்களில் வேட்டி உடுத்துவர். திருமணத்தின் போது பெரும்பாலும் பட்டு வேட்டி பயன்படுத்தப்படும்.

பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான சரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும், அதன் விலையும் அதிகமாகவே இருக்கும்.

வேட்டிகளில் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழம் வேட்டி, எட்டு முழம் வேட்டி, கரை வேட்டி போன்றவைகள் அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது பஞ்சக்கச்சம் எனப்படுகிறது. அரசயல்வாதிகள் தங்கள் வேட்டிக் கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது அண்மைய வழக்கமாக மலர்ந்துள்ளது.

வேட்டி அணியும் போது, அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு. தமிழ்த் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினைப் பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும் நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர்.

ஆப்ரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது, பெரும்பாலும் சொமாலியர்கள் மற்றும் அபார் இனத்தவரால் அணியப்படும் இவ்வாடைக்கு, மகாவிசு என்று பெயரிட்டுள்ளனர்.

Madhavan Srinivasagopalan said...

Well, I believe 'attire' is based on climatic conditions. Accordingly we don't need Coat / Suit / Pants.

But, since, we have Air Conditioners, we feel comfort if we wear Coat / Suit inside AC room. If one feels comfort even with 'Dhoti' in AC rooms, there is no objection from my view.

Whatever one wears, it should be neat and clean and must cover the body reasonably so as to avoid inciting sexual feelings in public appearance. After all we are civilized (!), you know.

ஜெயந்த் கிருஷ்ணா said...

வேட்டி ஆபத்து காலங்களில் அவசியப்படும் அருமையான ஆடையாச்சே தோழர்...

அவசர காலங்களில் சண்டை சச்சரவு நடக்கும் இடங்களில் நமக்கு ஏதாவது பாதகமென்றால் வாயில் கவ்விக்கொண்டோ, அவிழ்த்து தலையிலோ தோளிலோ சுற்றிக்கொண்டு ஓடுவதற்கு ஏதுவான வஸ்திரமாச்சே தோழர்..

இதை போன்ற விசயங்களை கேள்விப்படும் பொழுதுகளில் எனக்கு தோன்றுவது ஓன்று தான் அது "நாம் என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் தோழர்"

Chandru said...

எல்லாரும் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தமாதிரி வேஷ்டிக்கு டெபனிசன் கேட்கிறார்கள். அவங்க அப்பா தாத்தா கிட்ட கேட்டா தெரியிற விஷயம்.அவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழ இறங்கி வந்துதானே ஆகனும். வேட்டி கட்டி ஒரு விழாவுக்கு வரக் கூடாதுன்னா வேட்டி என்ன அவ்வளவு கேவலமான உடையா? வாழ்க்கையில் போராட்டமும் இழுபறி இருக்கத்தான் செய்யும் அதற்காக் நமது வீட்டில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு நமது காசை பிச்சை வாங்கித்தின்னும் புறம் போக்கு "போடா வெண்னெய்" என்றால் கேட்டு விட்டு நமக்கு இருக்கும் பிரச்னையில் இது வேறயா என்று சும்மா போக முடியுமா?எவ்வளவுதான் வேலை வெட்டி இருந்தாலும் பொங்கறப்ப பொங்கித்தானே ஆகனும்.

Chandru said...

எல்லாரும் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தமாதிரி வேஷ்டிக்கு டெபனிசன் கேட்கிறார்கள். அவங்க அப்பா தாத்தா கிட்ட கேட்டா தெரியிற விஷயம்.அவன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழ இறங்கி வந்துதானே ஆகனும். வேட்டி கட்டி ஒரு விழாவுக்கு வரக் கூடாதுன்னா வேட்டி என்ன அவ்வளவு கேவலமான உடையா? வாழ்க்கையில் போராட்டமும் இழுபறி இருக்கத்தான் செய்யும் அதற்காக் நமது வீட்டில் ஓரமாக உட்கார்ந்து கொண்டு நமது காசை பிச்சை வாங்கித்தின்னும் புறம் போக்கு "போடா வெண்னெய்" என்றால் கேட்டு விட்டு நமக்கு இருக்கும் பிரச்னையில் இது வேறயா என்று சும்மா போக முடியுமா?எவ்வளவுதான் வேலை வெட்டி இருந்தாலும் பொங்கறப்ப பொங்கித்தானே ஆகனும்.