கிளப் என்றாலே பணக்காரர்களும் அதிகாரவர்க்கத்தினர்களும் வயசான பணக்கார பெருசுகளும் கூடிக் குடிச்சி கும்மாளம் அடிக்கும் ஒரு மோசமான இடம் என்பது ஊரறிந்த இரகசியம். அங்கே சில பல உடைக் கட்டுப்பாடுகள் வைப்பது கிளப்புக்கு பெருமையோ இல்லையோ அவர்களின் உறுப்பினர்களின் மானம் கெடாமல் இருக்கவாவது உதவும்.
வேட்டிகட்டி வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என கிளப் சொன்னது தவறுதான். அதற்கு அந்த கிளப் சொன்ன விளக்கம் (வேட்டி அணிந்து குடித்தால் வேட்டி கழண்டுவிடும் அதனால் தான் அனுமதி இல்லை) அங்கே இருக்கும் உறுப்பினர்களை மேலும் கேவலப் படுத்துவதாகவே தோன்றுகிறது எனக்கு. அதாவது அங்கே போகிற ஆசாமிகள் குடிக்க மட்டுமே போகிறார்கள், அதைத்தவிர வேறு வேலைகள் எதுவும் இல்லை என்று சொல்வது போலுள்ளது.
வேட்டி கட்டுவது அருகி வரும் சூழலில், வேட்டியை தினந்தோறும் உடுத்தும் நபர்கள் நெருங்கக் கூட இயலாத உயரத்தில் இருக்கும் ஒரு கிளப்பின் மேல் இவ்வளவு அறச்சீற்றம் ஏனென்று தெரியவில்லை. போகவும் போராட எத்தனையோ விஷயங்கள் இருக்க இதற்கு எதற்கு இத்தனை முக்கியத்துவமென அடியேனின் அரை மூளைக்கு எட்டவில்லை.
இதை ஒரு முக்கிய விடயமாக சட்டசபையிலும் கூட பேசி உள்ளோம். இன்னும் ஐநா சபை தலையிடாதது தான் பாக்கி.
இதை எல்லாம் கூட சமாளித்துவிடலாம். இதுவரைக்கும் வேட்டி எந்த சைஸில் இருக்கும், அது சதுரமா செவ்வகமா என்று கூடத்தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அறச்சீற்றத்துடன் இணையத்தில் பொங்க வைப்பதைப் பார்க்கும் போது தான் கிளப் சொன்னது எவ்வளவோ பரவாயில்லை என்ற எண்ணம் வருகிறது.
சரி, இப்போது வேட்டி கட்டி வரச் சொல்லிவிட்டார்கள். அதிலும் பல குழப்பம். வெள்ளை வேட்டி மட்டும் தானா? நானெல்லாம் லுங்கி கிடைக்காத சமயத்தில் சாமிகள் மாலை போடும் போது உடுத்துவார்களே அது போல பல கலர் வேட்டிகள் கட்டுவேன், அது போன்ற வேட்டிகளை அனுமதிப்பார்களா?
வெள்ளை வேட்டியிலும் பல ரகங்கள், அளவுகள் உண்டு. ஒற்றை மடிப்பு வேட்டிக்கு அனுமதியா? இல்லை இரட்டை மடிப்பு வேட்டிக்குமா? பட்டு வேட்டி கட்டலாமா? பஞ்ச கச்சம் கட்டலாமா? ராம்ராஜ் காட்டன் மட்டும் தானா? அரசின் கோ-ஆப்டெக்ஸ் காட்டன் வேட்டிக்கும் அனுமதி உண்டா?
ரேஷன் கடையில் தை பிறந்தால் கொடுப்பார்களே, மொக்கையாய் ஒரு வேட்டி, அதற்கும் அனுமதி உண்டா?
கடைசியாய், நான் நன்றாக வேட்டி கட்டுவேன். என்னை அந்த கிளப்பிற்குள் அனுமதிப்பார்களா?