தோழர் நாகராஜசோழன் எழுதியிருக்கும் முதல் புத்தகமான கந்தரகோலம் - சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பினை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த புத்தகக் கண்காட்சிக்கே வெளியிட நினைத்து, பதிப்பகத்தில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.
அவர் எழுதியிருக்கும் முதல் புத்தகமென்பதால் எங்களின் டெரர்கும்மி குழும உறுப்பினர்களில் ஒரு சிலருக்கு விமர்சனம் மற்றும் பிழைதிருத்தும் பொருட்டு இப்புத்தகத்தின் மின்பதிப்பினை அனுப்பியிருந்தார். புத்தக வெளியீட்டிற்குப் பிறகு வரும் விமர்சனங்களை நம்புவதற்கில்லை என்றும், தன் மீது கொண்ட அன்பினாலும் காழ்ப்புணர்ச்சியாலும் முறையே திட்டியும் பாராட்டியும் விமர்சனங்கள் வரலாம் என்பதால் அவற்றை நம்பமுடியாதென்பதவர் வாதம். இதனால் தன் நலனில் அக்கறை கொண்டவர்களின் விமர்சனத்தை - விமர்சனத்தை என்று கூட அவர் கூறவில்லை. கருத்தை அல்லது ஆலோசனையை என்று வைத்துக் கொள்ளலாம் - வேண்டி எங்களுக்கு அனுப்பியிருந்தார்.
பொதுவாகவே புத்தகங்கள் படிப்பதில் படு சோம்பேறியான நான் வழக்கம் போலவே அந்த 800 பக்க நாவலைப் படித்து முடிப்பதற்கு 4 மணி நேரம் எடுத்துக் கொண்டேன். நீங்கள் அறிவாளியாக இருந்திருந்தால் இந்நேரம் கந்தரகோலம் புத்தகம் கவிதை மற்றும் சிறுகதைத் தொகுப்பென்று மேலே சொன்னதை நினைத்துக் குழம்பிப்போயிருப்பீர்கள். ஆனால் நீங்கள் குழம்பியிருக்க வாய்ப்பில்லை.
இப்புத்தகத்தை முதல் முதலாகப் படித்து முடித்த நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி கடந்த (24.03.2014) வியாழக்கிழமை அன்று அழைத்திருந்தார். வழக்கமான உற்சாகத்திற்கு மாறாக இந்தமுறை கொஞ்சம் கோபத்தில் இருந்தார். விசாரித்ததில் தான் கந்தரகோலம் புத்தகத்தைப் படித்துவிட்டதாகவும், அப்புத்தகமே தனது கோபத்திற்குக் காரணமென்றும், அப்புத்தகத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனம் ஒன்றையும் என் முன்னால் வைத்தார். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும்போது முன்னால் வைக்கச் சாத்தியமில்லை என்றாலும் அவரும் நானும் ஒரே அறையில் இருந்துதான் தொலைபேசினோம் என்பதால் இது சாத்தியப்பட்டது.
அவர் கூறிய எதிர்மறை விமர்சனம் எனக்கும் சரியென்றேபட்டது. இருந்தாலும் இவ்விமர்சனத்தை முகநூலில் பகிரலாம் என்று நினைத்தபோது ஏதோ இடறியது. முதல் விமர்சனமே எதிர்மறை விமர்சனமாக அமைந்துவிட்டதேயென்று தோழர் நா.சோழன் வருந்தினால் என்ன செய்வதென்று நினைத்துப் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் எதிர்மறை விமர்சனத்தை அப்படியே நா.சோழனுக்கு அனுப்பி, அதனை எனது முகநூலில் பகிர்ந்து கொள்ளட்டுமா என்று அனுமதி கோரியிருந்தேன். எனது கடிதத்திற்கு அவர் அனுப்பியிருக்கும் பதில் கீழே...
அன்பின் செல்வா,
தங்களின் கடிதம் கிடைத்தது. தோழர் பன்னிக்குட்டி ராம்சாமி என் புத்தகத்தைப் பற்றிக் கூறியிருக்கும் எதிர்மறை விமர்சனத்தை உங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டுள்ளீர்கள். அதை அனுமதிப்பதற்கு முன்னர் ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் இலக்கியச் சூழலிலாகட்டும், அல்லது மேற்கத்திய, ஆப்பிரிக்க, ரஷ்ய என்று எந்த இலக்கியப் படைப்பிற்கும் வரும் விமர்சனங்களை முதலில் நேர்மறை, எதிர்மறை என்று விமர்சனங்களையே விமர்சிக்கும் போக்கைக் கைவிடுங்கள். அது ஒரு விமர்சனம் அவ்வளவே. ஏன் அதனை நேர்மறை விமர்சனம், எதிர்மறை விமர்சனம் என்று நீங்களே விமர்சித்துக் கொள்கிறீர்கள்?
மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது போலத் தெரிந்தது. உண்மையா? எனக்கும் ஆங்கிலத்திற்கும் ஒத்துவருவதே இல்லை. இருப்பினும் எனது கோடானகோடி ரசிகர்கள் நீங்கள் எப்பொழுது நேரடி ஆங்கிலத்தில் கதை எழுதப்போகிறீர்கள் என்று நச்சரிக்கிறார்கள். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன். தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கையில் வெறும் 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ள விரும்புவது வேடிக்கையாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கிறது.
ஆக எழுத்துக்களின் எண்ணிக்கைதான் உனது பிரச்னையா என்று கேட்டான் நண்பனொருவன். வேறென்ன பிரச்னை இருந்துவிடமுடியும். தமிழ் எழுத்துக்களில் பத்தில் ஒரு பங்குமட்டுமே கொண்ட ஒரு மொழியில் எழுதி என்னை ஏன் நான் குறுக்கிக் கொள்ள வேண்டும்? இதன்மூலம் என்னை குறுகிய சிந்தனைக்காரன் என்று கூறமாட்டார்களா? இதற்கும் ஒரு வழி சொன்னான் அந்த நண்பன். ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள் அல்ல 52 எழுத்துக்கள் இருப்பதாகக் கூறினான். அதாவது சின்ன எழுத்துக்கள் 26 மற்றும் பெரிய எழுத்துக்கள் 26. இப்பவும் 52 தானே ஆகிறது. இதுவும் பற்றாதென்றேன். குறைந்தபட்சம் எத்தனை எழுத்துக்கள்தான் தேவைப்படும் என்று கேட்டான். தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் பாதியேனும் இருந்தால் பரவாயில்லை, குறைந்தபட்சம் 100 எழுத்துக்களாவது வேண்டுமென்றேன். அதற்கும் வழி சொன்னான். சிறிய மற்றும் பெரிய எழுத்துக்கள் 52, அவற்றின் ஒட்டெழுத்துக்கள் 52; ஆக மொத்தம் 104 என்பது அவன் கணக்கு.
ஆனால் எனக்கு 102 தான். அதாவது சிறிய ஒட்டெழுத்தில் q வும், பெரிய ஒட்டெழுத்தில் z எழுதவராது. எனவே 104 லிருந்து 2 ஐக் கழித்தால் 102 தானே? இதிலும் ஒரு பிரச்னை ஏற்பட்டது. 104 லிருந்து 2 ஐக் கழித்தால் எத்தனை வருமென்று மறந்துபோனது. மறந்துபோனது என்பதைவிட தெரியவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும். ஏனென்றால் எனக்குக் கைகளிலும் கால்களிலும் சேர்த்து மொத்தம் 20 விரல்கள்தான் இருக்கின்றன. இவற்றை வைத்து நான் எப்படி 104 லிருந்து 2 ஐக் கழிப்பது ?
இக்குழப்பத்திலிருந்து வெளிவர என் வாசகர்களில் ஐந்து பேரை அழைத்தேன். அவர்கள் ஒவ்வொருவரிடமும் 20 விரல்கள்;மொத்தம் 100. என்னிடம் 20. ஆக மொத்தம் 120 விரல்கள். இதிலிருந்து எளிதாகக் கணக்கிட்டுவிட்டோம். ஆனால் 104 லிருந்து 2 ஐக் கழித்தாலும் 104 தான் வந்தது. எனக்கோ ஆச்சர்யம். இது சாத்தியமில்லையே? பிறகு விசாரித்ததில் எனது வாசர்களில் ஒருவருக்கு கால்களில் 2 விரல்கள் கூடுதலாக இருந்ததைக் கண்டறிந்தோம். பின்னர் அவரை அனுப்பிவிட்டு, அளவாக 20 விரல்கள் மட்டுமிருக்கும் வாசகரை வரவழைத்துக் கணக்கிட்டு விடையைக் கண்டறிந்தோம். 104 லிருந்து 2 போனால் 102 தான்.
இப்படியாக ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை அதிகரித்தும் எனக்கு ஆங்கிலத்தின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. எனவே மீண்டும் தமிழிலேயே எழுதவந்துவிட்டேன். சரி விடுங்கள். ஆயிரம்தான் இருந்தாலும் ஆங்கிலத்தைத் தமிழில் பேசமுடியுமா என்ன?
கடந்த முறை ஊருக்குச் சென்றபோது ஏர்போர்ட்டிலிருந்து வீட்டிற்கு அரசுப் பேருந்தொன்றில் பயணித்தேன். வீடு சென்று சேர்ந்ததும்தான் தெரிந்தது, எனது மொபைலை ப்ளைட் மோடிலேயே வைத்திருந்தது. நல்ல வேளையாக கண்டக்டர் இதனைக் கண்டுபிடிக்கவில்லை. இல்லாவிட்டால் பஸ் கட்டணத்திற்குப் பதிலாக ப்ளைட் கட்டணத்தை வசூலித்திருப்பார். ஏன் இந்த அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் மட்டும் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் இப்படி எத்தனைப் பேர் தங்களது மொபைலை ப்ளைட் மோடிற்கு மாற்றி வைத்துவிட்டு பஸ்ஸில் பயணம் செய்து ஏமாற்றுகிறார்களோ? இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாதா? என்ன செய்வது ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
சொல்ல மறந்துவிட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 28 நாட்களைத்தான் காலண்டரில் அச்சடித்திருந்தனர். வருடாவருடம் இவர்களுடன் இதே தொல்லையாய்ப் போய்விட்டது. இன்னும் இரண்டு நாட்களைச் சேர்த்து அடித்துத் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது? அச்சடிக்காவிட்டால்தானே குறைகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தன் வராமலா போய்விடுவான்? பார்க்கலாம்.
என்றும் அன்புடன்
நா.சோழன்
அவர் அனுப்பின இந்த ரிப்ளையைத் தொடர்ந்து தோழர் ப.ராம்சாமி அவர்கள் என்னிடம் கூறிய எதிர்மறைவிமர்சனத்தையும் இங்கே பதிய வேண்டியது கட்டாயமாகிறது.
கந்தரகோலம் புத்தகத்திற்கு வந்திருக்கும் முதல் எதிர்மறை விமர்சனம் :
“ ப்க்கார்டிக்கு சரியான சைடு டிஷ் மிக்சர்னு எழுதிவச்சிருக்கார். இது தப்பு. பக்கார்டிக்கு சரியான சைட் டிஷ் எதுனு கூடத் தெரியாதவங்கள்லாம் எதுக்கு புக் எழுதனும்? “